அனுராதா ஜெய்ஷங்கர்/காலப் புத்தகம்

“விபுலா, கிளம்ப எல்லாம் தயாரா?”
” ஆமாம் ஜே. 500 வருடங்கள் பின்னோக்கி போக அமைத்து இருக்கிறேன்.”
” போய் சேர ஒரு சில மணிகளாவது ஆகுமே. பொழுது போக என்ன செய்வாய்?”
” படிக்க வேண்டும் என்று நினைத்து இருந்த 200 புத்தகங்களை இந்த ஊசி ச்சிப்பில் சேமித்து இருக்கிறேன். ஸ்கேனர் என் மூக்குக் கண்ணாடியில் இருக்கிறது. படித்துத் தள்ள வேண்டியதுதான்”.
” நீ திரும்ப நிகழ் உலகுக்கு வர கொடுக்க வேண்டிய கடவுச் சொல்?”
” ஊசி ச்சிப்பில் இருக்கிறது.”
” பத்திரம். போய் சேர்ந்தவுடன் நீ இருக்கிற இடங்களை பற்றித் தகவல் அனுப்பிக் கொண்டே இரு.”
” வந்து சேர்ந்து விட்டேன்.”
” எங்கு இருக்கிறாய்?”
” ஒரு அறை. நாம் பார்த்தே இராத ஒரு பொருள்.. ஏகமாக இறைந்து கிடக்கிறது”.
” அந்த காலத்து அகழ்வாராய்ச்சி என்பார்களே, அது போன்று எதாவதா?”
” பழம் பொருள் அகராதியில் தேடினேன். காகிதங்களில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள்!! அவற்றில் பல விதமான எழுத்து வடிவங்கள். அப்போது பல மொழிகள் இருந்து இருக்க வேண்டும். ஒவ்வொன்றும் சிறிதும் பெரிதுமாக தலையணை அளவில்!”
” அவ்வளவு கனமா? எவ்வளவு இடம் தேவைப்படும்? நம்ப முடியவில்லை”.
” நம்மைப் போல் பார்த்தவுடன் ஸ்கேன் செய்து மூளையில் பதிவதில்லை.ஒரு புத்தகத்தைப் படிக்க, அதை கையில் எடுத்து, பிடித்துக் கொண்டு , ஒரு இடத்தில் உட்கார்ந்து, ஒவ்வொரு வரியாக, பக்கம் பக்கமாக கையால் திருப்பி..எவ்வளவு பிரயத்தனம்!”
” விபுலா, நீ கிளம்ப வேண்டிய நேரம் நெருங்குகிறது.”
” ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். பொறு ஜே . ஆனால்..ஆனால்..இந்த அனுபவம் மிகப் புதுமையாக, இனிமையாக இருக்கிறது. நிறுத்த முடியவில்லை. இதில் இருக்கும் வாசமும் வார்த்தைகளும் மனத்தையும் நிறைக்கின்றன. இங்கே என் இருப்புக்கான கால அவகாசத்தை தயவு செய்து நீட்டித்து தா.”
” இரு முறை செய்தாகி விட்டது. இனி தாமதித்தால் பிரச்சினை. கிளம்பு விபுலா”.
” இந்த இனிய அனுபவத்தை விட்டு வர முடியாது. படிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன.”
” தாமதிக்காதே. குறிப்பிட்ட நேரத்துக்குள் வரவில்லை என்றால் உன் பெயர் குடிமக்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.”
” அப்படியே ஆகட்டும். என் வாழ்நாள் முழுதும் கழிப்பதற்கான
வேலை இங்கு இருக்கிறது. என் கடவுச் சொல்லை நானே காணாமல் போக்கி விடுகிறேன்.”
” விபுலா..செல்வதைக் கேள் . கிளம்பு. வி..

சாந்திசந்திரசேகரன்/அரண்மனை..! – விருட்சம் நாளிதழ்

                        **

8 Comments on “அனுராதா ஜெய்ஷங்கர்/காலப் புத்தகம்”

  1. ஒரு சின்னஞ்சிறு கதையில் பொதித்து வைக்கப்பட்ட அச்சு நூல்களின் புனித மதிப்பு!
    அபாரம் சகோதரி

Comments are closed.