சாந்திசந்திரசேகரன்/அரண்மனை..!

சுற்றுலா வந்திருந்த புகாரி காட்டிற்குள், தான் பறந்து வந்த வான்குடை மிதவை திசைமாற்றி இறக்கி விட்ட போது சற்றுத் தடுமாறித் தான் போனான் ரவி.
தன் தொலைந்ததாக தவித்திருந்தவன் , உதவி தேடி காட்டிற்குள் அலைந்த போது, அத்துவானக்காட்டிற்குள் ஔிந்திருந்த அரண்மனைப் போல, கண்ணாடியில் செதுக்கப்பட்ட சிலையாய் எழுந்து நின்ற அந்தப் பனைமர உயர புத்தக அறையைப் பார்த்து பிரமித்துப் போனான்.
‘காட்டிற்கு நடுவில் நூலகமா? கட்டியவனைக் கண்டுபிடித்தால் எப்படியும் தப்பித்து விடலாம்’ என்று உதவி எதிர்பார்த்து நுழைந்தவனுக்கு, மனிதர்களற்ற புத்தகங்களின் ஆக்கிரமிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
ஆபத்து பற்றி அறிவு எச்சரித்தாலும், ஆர்வத்தின் பேரில் ரவி அந்த அறைக்குள் நுழைந்தான்.
அவன் காலடியின் சப்தமே அறையின் சுவர்களில் மிரட்சி கொள்ளச் செய்யும் வகையில் எதிரொலியாய் எக்காளமிட்டது.
மலைமலையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் அவனையே ஏக்கமாய்ப் பார்ப்பது போன்ற மாயையை உருவாக்கின.
புரியாத பல மொழிகளில் பல புத்தகங்கள் தெரிய.. ஒரு புத்தகத்தில் மட்டும் தமிழ் எழுத்துக்கள்..!
அவனையுமறியாது ஆனந்தமாய் அதைக் கையில் எடுத்தான்.
அடுத்த நொடி, அறை முழுவதும் சூழ்ந்திருந்த காற்றில் ஏதோ மாறியதாக உணர்ந்தான்.
குளிர்ச்சி கூடியது; இருள் கண்களை அடைத்தது.
அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் பரபரவெனச் சிறகடித்துப் பறந்து நொடியில் மறைந்தது. “இந்த அறையின் புத்தகத்தைத் தொட்டவன், அறிவின் வடிவமாக மாறுவான்.. மீண்டுமொருவனின் ஸ்பரிசம் படும் வரையில் ..!” எங்கிருந்து வருகிறதென்றே அறியாமல் ஒரு அசரீரீ திடமாக ஒலித்தது.
ரவி அதிர்ந்து பின்வாங்க முயன்றான்.
அதற்குள் அவன் கோடிக்கணக்கான எழுத்துக் குவியலாய் உருமாறி, ஒரு தீண்டப்படாத புத்தகமாய் உருப்பெற்றிருந்தான்.
“யாரேனும் காட்டினுள் தொலைந்து, தன்னைக் கையிலேந்த மாட்டார்களா?’ என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தான்.
தூரத்தில் தூசிப்படலங்களுக்கு அப்பால் காலடிச்சத்தம் கேட்கத் துவங்கியது.
புத்தங்களின் கண்கள் , ஏக்கமாய் வாசல் நோக்கித் திரும்பின.

அனங்கன்/மனிதர்கள் இருக்கிறார்கள் – விருட்சம் நாளிதழ்

3 Comments on “சாந்திசந்திரசேகரன்/அரண்மனை..!”

Comments are closed.