அனுராதா ஜெய்ஷங்கர்./சின்ராசுவின் புத்தகச் சந்திப்பு


“சில்லரை திருட்டு சின்ராசு சின்ராசு சின்ராசு”
குற்றவாளி கூண்டில் ஏறி நின்ற சின்ராசுவை பார்த்த நீதிபதி சுந்தரத்திற்கு சலிப்பு மேலோங்கி விட்டது.
” இப்பதானே ரெண்டு வாரம் முன்னாடி அபராதம் போட்டு அனுப்பிச்சேன். இது எத்தனாவது முறை ? என்ன செய்துட்டு வந்திருக்கே? “
“ஒரு அவசரத்துக்கு நாலு கோழிய திருடி வித்துப்புட்டேங்க. அதுக்கு போய் புடிச்சு கொண்டு வந்துட்டாங்க. இது 25வது முறை இங்க நிக்கிறது”. தலையைச் சொரிந்தான் சின்ராசு.
“இவனை நான் சொல்ற இடத்துக்கு கூட்டிட்டு போய் சொல்றபடிக்கு செய்யுங்க” என்று தீர்ப்பு எழுதினார் நீதிபதி.
ஒரு காவலர் சின்ராசுவை ஒரு பெரிய பங்களாவுக்கு கூட்டிச் சென்றார்.
” ஐயா, இவ்வளவு பெரிய இடத்திலயா தங்கப் போறேன்?”
“ஆமாண்டா, உனக்கு மூணு வேளை விருந்தும் போடுவாங்க வா.”
அவனை ஒரு அறைக்குள் தள்ளினார் காவலர் .
“இங்கேதான் நீ பத்து நாளைக்கு கிடக்கணும். சோறு , தண்ணி கிடைக்கும். வெளியே வர முடியாது”.
சுற்று முற்றிலும் பார்த்த சின்ராசு ஐயையோ என்று அலறினான்.
“ஐயா, நான் ஒழுங்கா இருக்கிறேன். வெளிய விட்டுடுங்க. இங்க என்னால இருக்க முடியாதுங்க. மூணாப்பு வாத்தியார் மண்டையை பொளந்துட்டு பள்ளியோடத்தை விட்டு ஓடி வந்தவன். இத்தனை புத்தகத்துக்கு நடுவுல இருந்தா மூச்சு முட்டி பயத்துல செத்துருவங்க” என்ற கதறினான்.
தனது பங்களாவை தனியார் நூலகமாக மாற்றுகிற முயற்சியில் இருந்த நீதிபதி சுந்தரம் சில நாட்களுக்குப் பிறகு வந்து அறையின் கதவைத் திறந்தார்.
அமைதியின் வடிவாக, நாற்காலியில் அமர்ந்து ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த சின்ராசு நீதிபதியை பார்த்தவுடன் ஒரு நிமிடம் தயங்கி ஓடி அவர் காலில் விழுந்தான்.
” ஐயா, புஸ்தகம் என்கிற பெரிய உலகம் இருக்கிறது தெரியாம ஒரு சாக்கடையில் விழுந்து கிடந்துட்டேன். ரொம்ப நன்றிங்க ஐயா!”.
நீதிபதிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“ஐயா என்ன மன்னிச்சிடுங்க. உங்ககிட்ட உண்மைய சொல்லணும். என் கூட்டாளி ஒருத்தன் இந்த புராதனப் பொருள் விக்கிற கடை வச்சு இருக்கான். இந்த பழைய புத்தகம் எல்லாம் நல்ல விலைக்கு போகும்னு நாலஞ்சு புத்தகத்தை, சாப்பாடு கொடுக்க வந்த வேலைக் காரனை மசிய வச்சு ஒரு டீலிங் போட்டு அவனுக்கு அனுப்பி விட்டுட்டங்க. என்னை மன்னிச்சிடுங்க” என்றான்.
நீதிபதி மயங்கி விழுந்தார்.

சிவா/கண் காட்சி – விருட்சம் நாளிதழ்

               **

6 Comments on “அனுராதா ஜெய்ஷங்கர்./சின்ராசுவின் புத்தகச் சந்திப்பு”

  1. ஆஹா, ஆஹா…அசத்தறீங்க மா. உங்களோட ரெண்டு கதையுமே டாப் டக்கர். அருமையான கற்பனை. அழகான எழுத்து நடை. பிரமாதப் படுத்திட்டீங்க. வாழ்த்துகள்.

  2. கதை அழகாய் கொண்டு போய் முடிக்கிற மாதிரி கொண்டு வந்து கடைசியில் கொடுத்தீங்க பாருங்க ஒரு ட்விஸ்ட் .. அதுதான் அனுவின் முத்திரை

Comments are closed.