வசந்தா கோவிந்தராஜன்/தப்பித்த சாம்ராஜ்யம்

வானம் பொத்தலாகிப் போனதோ? அந்தச் செய்தி கேட்டதிலிருந்து என் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. நான் தமிழ்நாடு அரசு அலுவலகத்தின் நூலகர்.எங்கள் கட்டிடம் மொகலாயர் காலத்தில் கட்டப்பட்டது. விஸ்தாரமான சாளரங்களுடன் காற்றோட்டமாக இருக்கும். மழை காலத்தில் ஒழுகும். ஒழுகாத இடத்தில் புத்தகங்களை மேலே மேலே அடுக்கி வைக்க வேண்டும். அவ்வப்போது பாம்பு, பல்லி, பூரான் எல்லாம் என்னைக் குசலம் விசாரித்தாலும் அசராமல் அங்கே உட்கார்ந்திருப்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது.
அங்கே அரசு வழிகாட்டு நூல்கள் தவிர அசோகமித்திரன், நா.பார்த்தசாரதி, அகிலன், கல்கி எனப் பல ஜாம்பவான்களின் புத்தகங்களும் இருக்கும். அந்த ஓட்டை நாற்காலி தான் என் சிம்மாசனம்.
எல்லாச் செய்திச் சேனல்களிலும் எங்கள் அலுவலகம் இடிந்து விழுந்து விட்டதாக பரபரப்புச் செய்திகள் வந்த வண்ணமிருக்கிறது. இன்று என் ராஜ்ஜியம் புதையுண்டு போயிருக்கும் என்பது தான் என் விசனம். இரவு முழுக்கத் தூக்கம் வராமல் உருண்டு கொண்டிருந்தேன்.
என் மனைவிக்கு என் மேல் கோபம். என் மாமனார் செத்ததுக்குக் கூட நான் இவ்வளவு விசனப்படவில்லை என்பது அவள் குற்றச்சாட்டு. அவள் பார்வையின் ஜுவாலையை சட்டை செய்யாமல் அதிகாலையில் கிளம்பி விட்டேன். ஒன்றரை மணி நேரமாக ஊர்ந்து சென்ற பேருந்தில் பயணித்து அலுவலகம் அடைந்து விட்டேன். கம்பீரமாக இரண்டு தளங்களுடன் நின்ற கட்டிடம் தரைமட்டமாகியிருந்தது.
பக்கத்து சந்து வழியாகப் போய் என் அறையை எட்டிப் பார்த்தேன். என் சாம்ராஜ்யம் மட்டும் கம்பீரமாக சூரிய ஒளியில் தகதகவென்று ஜொலித்துக் கொண்டிருந்தது. “ஆண்டவா, உனக்கு கோடி நன்றிகள்!” என்று இடிந்த கட்டிடத்தின் முன் நின்று நான் வாய்விட்டுச் சொன்னதைக் கேட்டவர்கள் என்னை வேற்றுக் கிரகவாசி போல் விசித்திரமாய்ப் பார்த்தார்கள்

அனுராதா ஜெய்ஷங்கர்./சின்ராசுவின் புத்தகச் சந்திப்பு – விருட்சம் நாளிதழ்

3 Comments on “வசந்தா கோவிந்தராஜன்/தப்பித்த சாம்ராஜ்யம்”

Comments are closed.