S. அர்ஜுனன்/காலச் சக்கரம்

“அம்மு.. அண்ணா லைப்ரரி போயிட்டு வர்றேன்” மனைவியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார் கோவிந்தன்.
“ஏதோ கவிதை புத்தகம் வெளியீட்டு விழானு போன வாரம் உங்களுக்கு வாட்ஸப்பில அழைப்பு வந்ததே.. அதுக்கா..?” கேட்டாள் அம்புஜம்.
“ஆமா..”
“ஏன்தான் இப்படி புஸ்தகமா வாங்கி குமிக்கிறீங்களோ?.. விழாவுக்கு கூப்பிடுறவங்க ஓசிக்கா புஸ்தகம் கொடுக்குறாங்க?.. உங்க பென்ஷன் பணத்தில பாதி இதிலேயே போகுது..” என சலித்துக் கொண்டாள்.
கோவிந்தனுக்கு புத்தகம் வாசிப்பதில் ஒரு தணியாத காதல். புது வெளியீடு மட்டுமல்லாது, பழைய பேப்பர் கடைகளில் கிடைக்கும் பழம்பெரும் எழுத்தாளர் புத்தகங்களையும் தேடிப் பார்த்து வாங்குவார்.
வாங்கிய புத்தகங்களை எல்லாம் படிக்க முடிக்கிறதோ இல்லையோ, பத்திரமாக பாதுகாத்து வைப்பார்.
*
அண்ணா லைப்ரரியில் அன்று நடந்த விழாவுக்கு பழம்பெரும் எழுத்தாளர் நாதமுனியின் மகள் கவிதாயினி வசந்தகுமாரி தலைமை வகித்தார்.
அவர் தனது உரையில்..
“பழைய தமிழ் நாவல்கள் இன்னமும் விரும்பி படிக்கப் படுகின்றன… எனது தந்தையார் எழுதிய காலச் சக்கரம் என்ற புத்தகம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு முதல் பதிப்பு செய்யப்பட்டது.. அதை மீண்டும் பதிப்பிக்க நிறைய பதிப்பகத்தார் என்னிடம் கேட்டு வருகிறார்கள்.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த புத்தகத்தின் ஒரு நகல் கூட இப்போது கிடைக்கவில்லை..” என்று வருத்தத்துடன் சொல்லிக்கொண்டு இருந்தார்.
தன்னிடம் அந்த புத்தகம் இருப்பது கோவிந்தனுக்கு நினைவு வந்தது. போன மாதம் கூட அதை எடுத்து தூசி தட்டி வைத்திருந்தார்.
கூட்டம் முடிந்ததும் சிறப்பு விருந்தினரை அணுகி..
“நீங்கள் கேட்ட காலச் சக்கரம் புத்தகம் என்னிடம் இருக்கிறது.. உங்கள் முகவரியை சொன்னால் நானே கொண்டுவந்து தருகிறேன்..” என்றார்.
கவிதாயினி வசந்தகுமாரி மகிழ்ச்சி பெருக்கோடு..
“மிக்க நன்றி.. பதிப்பகத்தார் எங்களுக்கு கொடுக்கும் பணத்தில் உங்களுக்கும் பங்கு கொடுக்க சொல்கிறேன்..” என்றார்.
“அது எல்லாம் தேவையில்லை.. நல்ல புத்தகங்கள் எப்போதும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே தருகிறேன்.. காலச் சக்கரத்துக்கு நான் ஒரு லூப்ரிகன்ட் எண்ணெய் மட்டுமே..” என்றார் கோவிந்தன்.
ஆம், காலச் சக்கரம் சிக்கல்களைத் தாண்டியும் தொடர்ந்து சுழல்கிறது.

வசந்தா கோவிந்தராஜன்/தப்பித்த சாம்ராஜ்யம் – விருட்சம் நாளிதழ்


One Comment on “S. அர்ஜுனன்/காலச் சக்கரம்”

Comments are closed.