சிவா/கண் காட்சி

எனக்கு அந்த மாளிகையில் உறுத்திக்கொண்டே இருந்தது அந்த அறை.
அப்பாவின் நெருங்கிய நண்பரின் வீடு அது.
நான் சிறுவயதில் வந்த நினைவு.
இப்போது அப்பாவும் இல்லை. அவர் நண்பரும் இல்லை.
எனினும் தவிர்க்கமுடியா பந்தம் என்பதால் என் மகள் திருமண பத்திரிக்கை வைக்க வந்திருந்தோம்.
அப்பாவின் நண்பரின் மகனுக்கும் என் வயது. எனக்கு போல ஒரு பெண் குழந்தை. என்னைபோலவே ஒரு மனைவி.
உளறுகிறேனா? நிஜம்தான். உளறுகிறேன்.
அந்த அறை என் கண்ணில் படாமல் இருந்திருக்கலாம்.
என் அப்பா எனக்கு மண்டையில் திணித்து வைத்த பழக்கம் இந்த புத்தக பைத்தியம்.
எப்படியும் இங்கே பழைய கிடைக்காத அபூர்வ புத்தகங்கள்கூட இருக்கலாம்.
கேட்கலாமா என்ற வேட்கையை என் மனைவியின் முறைப்பு தவிர்க்கச் செய்தது.
அந்த அப்.நண்.மகன் அவ்வளவு படிப்பாளியாகவும் தெரியவில்லை.
வீணாக அறை முழுதும் குப்பையாக குவிந்து கிடக்கும் புத்தகங்களை சிந்தாமல் சிதறாமல் அள்ளிச் சென்று…
எனக்கு பேராசைதான். அடங்காத ஆசை.
ஒரு கணம் மனையாள் அவன் மனைவியுடன் தோட்டம் சென்றாள்.
“நண்பா… அந்த அறையில் புக்ஸ் எல்லாம்?” என்றேன்.
“ஆமா ப்ரோ, எல்லாம் அப்பா படிச்சு வச்ச புக்ஸ். யாரையும் தொடவிடமாட்டார்”
“ஓ… அப்புறம்? என்ன பண்ணபோறீங்க?”
“அது குப்பையா இருந்துச்சா? அப்படியே அள்ளி எடைக்கு போட்டாச்சு. அப்பா ஆத்மா பாத்தா என்ன பண்றது? அதான் சிமெண்ட்ல புக்ஸ் இருந்த மாதிரியே டெகரேட் பண்ணிட்டேன். ஹௌ ஸ்வீட் டெக்னிக் ல்ல?”
அறிவில தீய வைக்க.

நாபா.மீரா/யுக சாட்சி – விருட்சம் நாளிதழ்

5 Comments on “சிவா/கண் காட்சி”

  1. அடக் கடவுளே! அப்பிடியும் ஒருத்தர் செஞ்சிருக்காரே. மிக மிக வித்தியாசமான கற்பனை. அழகா கடைசி வரியில பொடி வச்சி எழுதியிருக்கீங்க. அருமை.

Comments are closed.