
வங்காளக் கதைகள்
தலைமுடி ஒளிவீசுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அடர்த்தியான கருகரு முடியல்ல, அடர்த்தியற்ற வெள்ளைமுடி! பார்த்ததில்லையா?
அப்படியானால் நீங்கள் சந்தர் டாக்ருனைப் பார்த்ததில்லை. சந்தர் டாக்ருனின் நரைமுடி வெண்பட்டுக் குஞ்சம். அதில் பட்டின் வெண்மையும் உண்டு, பளபளப்பும் உண்டு. தலைமுடி மட்டுமா?
சந்தர்டாக்ருனின் முகம்…. உடலமைப்பு… நிறம்… எல்லாம்தான்…
இந்த அறுபத்து மூன்றாம் வயதிலும் சந்தர் டாக்ருன் அணிந்திருக்கும் வெண்பட்டுப் புடவையின் நிறமும் முதுகின் நிறமும் ஒன்றாகவே இருக்கும். முதுகும் உடம்பின் மடிப்புகளும் வெண்ணெய் போல் மென்மை.
முகம்?
அவருக்கு ‘டாக்ருன்’ என்ற பெயர் ஏற்பட்டதற்குக் காரணமே அவரது முகம்தானாம். ‘டாக்ருன்’ என்றால் தேவதை என்று பொருள். “சந்திர சாட்டர்ஜியின் புது மனைவியின்
முகம் தேவதை மாதிரி ரொம்ப அழகாயிருக்கு” என்று எல்லோரும் சொல்லிச் சொல்லி அவருக்குச் ‘சந்தர் டாக்ருள் என்றே பெயர் வந்து விட்டது. உண்மையில் அவருடைய பெயர்
திலோத்தமா. பொருத்தமான பெயர்தான் என்று நாங்கள் பேசிக்கொள்வதுண்டு. அந்தக் காலத்தில் இளம் வயதில் சந்தர் டாக்ருள் எப்படி இருந்திருப்பார். இவ்வளவு அழகை வைத்துக் கொண்டு என்ன சுளைபரம் செய்திருப்பார் சந்தர் டாக்ருன்! வேண்டுமென்று அல்ல தானறியாமல்… அந்த அழகில் எவ்வளவு பேர் மயங்கிப் பைத்தியமாயிருப்பார்கள்!
பார்க்காதீர்கள், வலது பக்கத்திலிருந்தும் பார்க்காதீர்கள், இடது பக்கத்திலிருந்து மட்டும் பாருங்கள்! அவர் கையில் ஆனால் ஓர் எச்சரிக்கை சந்தர் டாக்ருனை முன்னாலிருந்து ஜபமாலையுடன் ஜபம் செய்து கொண்டிருக்கும் போது, மிகவும் கவனமாக அரிசியிலிருந்து கல் பொறுக்கும் போது, அல்லது முற்றத்து ஓரத்திலிருந்து அருகம்புல் பிடுங்கும் போது அவரை இடதுபுறத்திலிருந்து பாருங்கள். அவர் முகத்தை விடுங்கள்!
காரணம், அவரது வலதுபுற முகம் பயங்கரம்!
அந்தப் பகுதி நெருப்பில் பொசுங்கி, தசை கரடு தட்டிப் பெரிய தழும்பாயிருக்கிறது. கண் இடுங்கியிருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு தசைப் பிண்டமும் மூக்குக்குப் பதில் ஒரு துவாரமும்தான் மிச்சம்!
சந்தர் டாக்ருனின் வலது கண்ணில் பார்வையில்லை, வலது காதால் கேட்க முடியாது. முன் பக்கத்திலிருந்து அவரது சிரிப்பைப் பார்த்தால் அருவருப்பால் உடம்பு கூசும். எள் பூ போன்ற அவரது மூக்கின் இடது புறம் தாமரையை நினைவு றுத்தும். வலதுபுறமோ உலர்ந்து கட்டியான சேற்றை ஞாபகப் படுத்தும். சேற்றில் தாமரை என்பார்களே, அது மாதிரிதான்.
ஆனால் அவரது தலைமுடி மட்டும் சேதமாகவில்லை, முன் போலவே இருக்கிறது. நிறம்தான் மாறிவிட்டது. கருப்பிலிருந்து பழுப்பு, பிறகு பழுப்பிலிருந்து தூய வெள்ளை. தமக்கு நேர்ந்த விபத்தை சந்தர் டாக்ருனே வர்ணிப்பார் “என்னமாப் பொசுங்கிப் போனேன்? என்ன மருந்து, என்ன மாயம்! புண் ஆற மூணு மாசம் ஆச்சு. எப்படிப் பொசுங்கினேன்னு கேக்கறியா? வீட்டிலே நெருப்பு பிடிச்சுத்தான். எப்படி நெருப்புப் பிடிச்சதுன்னு கடவுளுக்குத்தான் தெரியும். நடுப்பகல். இவர் வீட்டிலே இல்லே. நான் மட்டும் தனியா இருக்கேன். திடீர்னு ஒரு ஜன்னல் வழியாப் புகை போறதைப் பார்க்கறேன். என்னோட எல்லா சொத்தும் அந்த அறையிலதான்! கண்ணுமண்ணு தெரியாமே அந்தப் புகைக்குள்ளே குதிச்சுட்டேன்… குதிச்சு என்ன பிரயோஜனம்? ஒரு பொருளையும் காப்பாத்த முடியல்லே. வெந்து பொசுங்கினதுதான் மிச்சம். எனக்குச் சாவு வரல்லே. அறுபது வயசுக்கு மேலே ஆச்சு. பொசுங்கிப் போன மொகத்தோட உக்காந்துக்கிட்டிருக்கேன்.
“புண்ணெல்லாம் ஆறின பிறகு, மூணு, மாசத்துக்கப்புறம் கண்ணாடியை எடுத்து என் மொகத்தைப் பார்த்துக்கிட்டேன். அப்போ எனக்கு வயசு முப்பத்திரண்டு, முப்பத்து மூணுதான் இருக்கும். ஆனா என்னைப் பார்த்தாப் பதினெட்டு வயசுக் குமரி மாதிரி இருக்குன்னு எல்லாரும் சொல்லுவாங்க… ஆமா, என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்? உம், கண்ணாடியிலே என் மூஞ்சியைப் பார்த்து அதிர்ந்து போய் ‘ஐயோ!’ன்னு கத்திக்கிட்டு, கீழே விழுந்து மயக்கமாயிட்டேன். ஒரு வேளை பூரா நினைவு திரும்பலே…. அதுக்கப்புறம் கண்ணாடியே பார்க்கறதில்லே நான்….!”
“நிசமாவா, பாட்டி?”
“சத்தியமாச் சொல்றேம்ப்பா! அதுக்கப்புறம் கண்ணாடியிலே பார்த்துக்கலே, நெத்திலே பொட்டு இட்டுக்கலே, தலையிலே கொண்டை போட்டுக்கலே….”
சந்தர் டாக்ருன் பழைய நினைவாகிய கடலில் சற்று நேரம் முழுகி விட்டுப் பிறகு தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். “இதெல்லாம் யாருக்காகப் பண்ணிக்கணும்? உங்க தாத்தாதான் அதுக்கப்புறம் என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கலியே!”
அறுபத்திமூன்று வயதான அந்த மெலிந்த உடம்பிலிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. “உம்…. இதுதான் ஆண் பிள்ளைகளோட அன்பு! அவர் என்னைக் கொஞ்சமும் அசைய விடமாட்டார், நான் எப்போதும் அவர்கிட்டேயே உக்காந்திருக்கணும்பார். அந்த ஆள் எப்படி மாறிப்போயிட்டார்!
எங்களுளுக்கு குழந்தை குட்டி இல்லே. வீடு வெறிச்சுன்று இருக்கும். அதனாலே ஒரு கோபாலன் சிலை பிரதிஷ்டை பண்ணிக்கிட்டு, நாள் முழுக்க அதுக்கு பிச்ருக்ஷை பண்ணிக்கி ட்டிருந்தேன்-அதைக் குளிப்பாட்டறது. நைவேத்தியம் பண்றது தாலாட்டுப் பாடித் தூங்க வைத்தறது…. இதைப் பார்த்து உங்க தாத்தாவுக்கு என்ன கோபம், என்ன பொறாமை! கோபாலன் தனக்குப் போட்டியா வந்துட்டாங்கற நினைப்பு! அவர்கிட்டேயே இருக்கணும்! என்ன வெக்கக் கேடு பாரு! , வீட்டிலே மாமியார், மாமனார், மச்சினர், ஓரகத்தி யாரும் இல்லேதான். அதுக்காகப் புருஷனும் பெண்டாட்டியும் நாள் பூரா ஜோடிப் புறா மாதிரி நான் இருபத்தநாலு மணி நேரமும் கொஞ்சிக்கிட்டிருந்தா நல்லாவா இருக்கும்? பூர்வீக சொத்து இருக்கு புருவுனுக்கு வேலை செஞ்சு சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லே உண்மைதான். அதுக்காக?
“எனக்குக் கோபமா வரும். நான் சொல்லுவேன், ‘உங்க அப்பா ஒரு நல்ல அழகான பெண்ணைத் தேடிப் பிடிச்சுக் கல்யாணம் பண்ணி வச்சது பெரிய பிசகு. அவர் ஒரு கருப்பு ஆந்தை மாதிரி பெண்ணை உங்களுக்குக் கட்டிக் கொடுத்திருந்தா நீங்களும் மற்ற ஆண்பிள்ளைகள் மாதிரி நடந்துக் கிட்டிருப்பீங்க….’ என் வாயிலே சனி இருந்தது. நானே கருப்பு ஆந்தையாயிட்டேன்!…
“மனுஷருக்கு என் மேலே ஒரு அநியாயப் பித்து. இல்லேன்னா வெறும் விக்ரகத்து மேலே பொறாமைப்படுவாரா? நான் நெருப்பிலே பொசுங்கின அன்னிக்கு எல்லாம் பொசுங்கிப் போச்சு, விக்ரகமும் மிஞ்சலே. அன்னிலேருந்து என் மேலே சனியோட பார்வைதான். வீடு எரிஞ்சுது, விக்ரகம் அழிஞ்சுது, புருஷனோட அன்பு போச்சு…. அப்படியும் சாவு வரல்லியே! உக்காந்துக்கிட்டிருக்கேன் சோத்துக்கு கேடா, பூமிக்குப் பாரமா…”
நான் ஆச்சரியத்தோடு கேட்டேன், “கல்லாலான கோபால விக்ரகம் எங்கே போயிடுச்சு, பாட்டி? அதுக்கு கால் முளைச் சுடுச்சா?”
விக்ரகத்தின் தங்கக் கிரீடம், தங்கப் புல்லாங்குழலுக்காக யாரோ அதைத் திருடியிருப்பார்கள் என்று நான் நினைத்தேன்.
வெகு சாதாரணமாகக் கூறினார் சந்தர் டாக்ருன். “விக்ரகமா? அதுவுந்தான் எரிஞ்சு போச்சு. பூஜையறையும் படுக்கையறையும் அடுத்தடுத்தாப்பலே. ரெண்டு அறையும் சாம்பலாயிடுச்சு….” கல் விக்ரகம் சாம்பலாகி விட்டதா? அடேயப்பா!
“சரி, பாட்டி. நெருப்பு எப்படிப் பிடிச்சது?”
“அதுதானே தெரியலே…” மெதுவாகத் தலையை ஆட்டிக் கொண்டு சொன்னார் பாட்டி. “நான்தான் சொன்னேனே, பட்டப் பகல்லே நெருப்புப் பிடிச்சதுன்னு… கிராமத்திலே எங்களுக்கு விரோதி யாருமில்லே. எல்லாருக்குமே எங்க ரெண்டு பேர் மேலேயும் பிரியந்தான்…. சாமியோட கோபம்னுதான் சொல்லணும்… படுக்கையறையிலே, புகைக்கு நடுவிலே நுழைஞ்சேனா… நுழைஞ்சதும் பணப்பெட்டியைத் திறந்தேன். பழைய காலத்து இரும்புப் பெட்டி. அதிலேதான் பணம், நகையெல்லாம் வச்சிருந்தேன். அதோட மூடியைத் திறக்க முடியலே, அவ்வளவு கனம்! ஆனா உசிருக்கு ஆபத்துன்னா கொசுக்குக் கூட யானை பலம் வந்துடும்பாங்களே, அந்த மாதிரி எனக்கும் பலம் வந்துருச்சு. கடைசியிலே மூடியைத் திறந்துட்டேன். புகைக்கு நடுவிலே பெட்டிக்குள்ளே பார்த்தா
ஒண்ணுமில்லே! என்ன மாயம்! அதிலேதான் நான் வச்சிருந்தேன் என்னோட எல்லா பனாரஸ் பட்டுப் புடவை, நிறைய நகை, மாமனார் கொடுத்த நகை, மாமியார் கொடுத்த ஏழு வடச் சங்கிலி… அதைத் தவிர சால்வைகள், விலை உசந்த புடவைகள்… அந்த அதிர்ச்சியிலே அப்படியே மயக்கமாகிக் கீழே விழுந்துட்டேன்…
“என்னோட கோபாலன் மாதிரி நானும் செத்துப் போயிருக்கக் கூடாதா? அப்பத்தான் இவர் ஏதோ காரியமா வீட்டுக்கு வந்திருக்கார். என்னைத் தூக்கிக் கொண்டு வந்து வெளியிலே போட்டார். ஊர்க்காரங்க வந்து நெருப்பை அணைச்சாங்க….
“எனக்கு நினைவு வந்ததும் கண்ணை முழிச்சுப் பார்த்தா, தாவாரத்துக் கட்டில்லே படுத்துக்கிட்டிருக்கேன். மூஞ்சி பூராக் கட்டு போட்டிருக்கு. ஒரு கண் குருடாயிட்டது. இன்னொரு கண்ணைச் சுழட்டிச் சுழட்டிப் பார்க்கறேன், பக்கத்திலே தூரத்து உறவு நாத்தனார் உக்காந்திருக்கா, உங்க தாத்தாவோட நிழல் கூட இல்லே!
பொசுங்கிப் போச்சு. அதுக்கப்புறம் உன் தாத்தா என்னை “உம்… என் மூஞ்சியும் பொசுங்கிப் போச்சு, அதிருஷ்டமும் நிமிர்ந்து பார்க்கலே !… ஆண் பிள்ளைகளோட அன்பு இவ்வளவுதான்!”
சந்தர் டாக்ருனின் இந்தக் கதையை எவ்வளவோ காலமாகக் கேட்டு வருகிறோம், ஆண்களின் காதலை நம்ப முடியாது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் சந்திர சாட்டர்ஜி.
உலகத்தில் எவ்வளவோ கணவன்மார் வைசூரி கண்டு அல்லது விபத்துக்குள்ளாகி குரூபிகளாக, குருடர்களாக, முடமாக ஆகிவிடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய மனைவிகள் அவர்களிடம் காட்டும் அன்பு குறைவதில்லை. ஆனால் சந்திரசாட்டர்ஜி பாறாங்கல்.
அதிகாலையில் எழுந்து பாதரூட்டுக் கட்டையைப் போட்டுக் கொண்டு ‘கட்கட்’ ஒலியெழுப்பியவாறு கங்கைக்கு ஸ்நானம் செய்யப் போவார். வரும் போது பூக்கூடை நிறைய பூ பறித்து வருவார். பிறகு துர்க்கை கோவிலில் மூன்று மணி நேரம் பூஜை. பிறகு சிறிது நேரம் இவர் வீடு, அவர் வீடு என்று போய்ப் பேசிக்கொண்டிருப்பார். நண்பகலில் தேவி பிரசாதத்தைச் சாப்பிடுவார். பிறகு வீடு திரும்பிப் படிப்பில் ஆழ்ந்து விடுவார். இதுதான் அவரது அன்றாட வாழ்க்கை நிரல்.
ஊரில் எல்லோருக்கும் அவரது இந்த நடத்தை பழகிப் போய்விட்டது. என்றாலும் அவரைப் பற்றிப் பேச்சு வந்தால் எங்கள்அம்மா, அத்தை, சித்தி போன்றவர்கள் அருவருப்பால் முகஞ்சுளிப்பார்கள். “இந்தப் பூஜை, ஆசாரம், நேமநிஷ்டை எல்லாம் வெறும் வேஷம்! மனுஷன் கிராதகன்! இல்லேன்னா அழகு போயிட்டதுங்கறதுக்காக இப்படிக் கட்டின பெண்டாட்டியைத் தள்ளி வச்சிருப்பானா? சந்தர் டாக்ருன் அழகாயிருந்த போது எப்படிக் கிடந்தான் பொண்டாட்டியே கதின்னு! பார்க்க ஆபாசமாயிருக்கும்… புருஷனோடு அன்பும் கோழி வளர்க்கறவன் அதுகிட்ட காட்டற அக்கறையும் ஒண்ணு தான் வெறும் சுயநலம்!”
சந்திர சாட்டர்ஜிக்கு அறுபத்தெட்டு வயதாகியும் ஊரார்அவரை தாக்கிப் பேசுவது தொடர்ந்தது. காரணம், ஈவிரக்க மில்லாதவனை ஜனங்கள் மன்னிக்க மாட்டார்கள்.
சந்திர சாட்டர்ஜி உண்மையிலே ஈவிரக்கமற்றவரா? அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுபவரா?
அவர் இப்போது இல்லை. கட்டுமஸ்தான உடம்போடு ஆரோக்கியமாயிருந்தவர் இப்போது இல்லை என்றால் நம்புவது கஷ்டந்தான். ஒருநாள் பூப்பறித்துக்கொண்டிருந்தவர் உடம்பு என்னவோ செய்கிறது என்று சொல்லிக்கொண்டு வந்து படுத்தார், போய்விட்டார். அவரது சாகும் தறுவாயில் சந்தர் டாக்ருன் தனக்கு இவ்வளவு காலமாக இழைக்கப்பட்ட அவமானத்தையும் அலட்சியத்தையும் மறந்து அவரருகில் உட்கார்ந்து கொண்டு கதறியழுதார். கிழவர் கண்ணிமைக்காமல் மனைவியைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தார், பிறகு ஆசியளிக்கும் பாவனையில் கையைத் தூக்கினார், உடனே கை கீழே தொங்கி விட்டது.
அவர் ஏதோ சொல்லத் துடிக்கிறார் என்று தோன்றியது. அவரது உதடுகள் மெல்ல அசைந்தன. எல்லாரும் அவரது வாய்க்கருகில் காது வைத்துக் கேட்க முயன்றார்கள்.
கவனமாகக் காது கொடுத்த பிஸ்வாஸ் உற்சாகத்துடன் கத்தினார். “எனக்குக் கேட்டது, எனக்குக் கேட்டது!” என்று.
“தோட்டத்திலே, சிவப்பு மாம்பழ மரத்துக்குக் கீழே….”
“அப்படியா….? ஏதாவது புதைச்சு வச்சிருக்காரா….?” என்றெல்லாம் பல்வேறு குரல்கள் ஒலித்தன.
எல்லோருக்கும் ஒரே பரபரப்பு.
சந்தர் டாக்ருனின் தம்பி பிள்ளையொருவன் அந்தக் கூட்டத்தில் இருந்தான். அவன் சொன்னான், “நீங்க தகனம் பண்ணிட்டு வாங்க. நான் அது வரையிலே மரத்தைக் காவல் காத்துக்கிட்டிருக்கேன்….”
அப்புறம்?
அப்புறம் நிகழ்ந்ததை நம்புவது கஷ்டம்தான், இருந்தாலும் அது நிகழ்ந்தது உண்மை. மாமரத்தடியில் தோண்டிப் பார்த்ததில்
ஒரு இரும்புப் பெட்டி கிடைத்தது. அதில் எல்லாம் பொருள்களும் இருந்தன. சந்தர் டாக்ருனின் தந்தை கொடுத்த இரண்டு பனாரஸ் பட்டுப் புடவைகள், மாமனார் கொடுத்த நகைகள், மாமியார் பரிசளித்த ஏழு வடச் சங்கிலி,.. பார்த்துக்கொண்டிருந்தார் சந்தர் டாக்ருன். அவரும் வியப்பால் அகல விரிந்த கண்களால் இதையெல்லாம். அவருடைய கணவன் போல் கட்டையாகி விட்ட மாதிரி இல்லையில்லை, கட்டையாகி விடவில்லை. இடது கண் விரிந்து போக, வலது கண் இடுங்கிப் போக அவர் திடீரென்று
கத்தினார் “ஓ, அப்படியா சங்கதி!””
ஒரு மர்மம் வெளிப்பட்டு விட்டது… முப்பது வருடங்களுக்கு முன் தம் வீட்டுக்குத் தாமே நெருப்பு வைத்திருக்கிறார் சந்திர சாட்டர்ஜி!
ஏன்? ஏன் என்பதும் தெரியவந்தது – சந்திர சாட்டர்ஜி எழுதி வைத்திருந்த குறிப்புகளிலிருந்து.
முறையான, தொடர்ச்சியான வர்ணனையல்ல, அவ்வப் போது எழுதப்பட்ட குறிப்புகள்.
“கோபாலன், கோபாலன்! எப்போது பார்த்தாலும் ‘கோபாலன்!’ கோபாலன்தான் என் சனி, சத்ரு, ராகு?”
“நீ ஏன் இப்படி மாறிப் போயிட்டே? நீ கொஞ்சம் கொஞ்சமா என் பிடிக்கு அப்பால் போயிக்கிட்டிருக்கியே! மனுஷனோட அன்பு உனக்குத் தேவையில்லையா? ஒரு கல்லைக் கட்டிக்கிட்டு இருந்தாலே உனக்குப் போதுமா?” “நீ ரத்தமும் தசையும் உள்ள மனுஷி…. கல்லைக் கொஞ்சிக் கொஞ்சி நீயும் கல்லாயிடுவியா?”
“உன்னைப் பார்த்தா எனக்குப் பயமாயிருக்கு, வெக்க மாயிருக்கு, உன்னைக் கும்பிடத் தோணுது… சாமிகிட்டேயிருந்து உன்னை எப்படிப் பறிச்சுக்கிட்டு வருவேன்?” உன்னை நான் இழக்க மாட்டேன்! நான் உன்னை மறுபடியும்.
“முடியாது, இனியும் பொறுக்க முடியாது என்னாலே!
மனுஷியாக்கப் போறேன்! உனக்கு மறுபடி நீலப் பட்டுப் புடவையை கட்டி விடுவேன், உன் கொண்டையிலே மல்லிகைப் பூ வைப்பேன்….”
“கோபாலனை அப்புறப்படுத்தணும்! எப்படி அப்புறப் படுத்தறது? கோபாலன்தான் உனக்கு உசத்திங்கறே, கோபாலன் உனக்குக் குழந்தையை விட அருமைங்கறே…நான் விக்ரகத்தை திருடப் போயி ஆப்பிட்டுக்கிட்டா, உன் மூஞ்சிலே எப்படி முழிப்பேன்? திருடக் கூடாது… வேறே ஏற்பாடுதான் செய்யணும்…” நீதான் எப்போதும் அதை விட்டு நகராமே இருக்கியே? . “ஐயோ!… எனக்கு ஏன் இப்படிப் புத்தி கெட்டுப் போச்சு! கடவுளே! எனக்குப் பைத்தியம் பிடிச்சுட்டதா? விக்ரகத்தை உடைச்செறிஞ்சுட்டேனே! என் வீட்டுக்கே நெருப்பு வச்சேனே!”
“கடவுளே! நான் உன் உருவத்தை மட்டுமா அழிச்சேன்? என் மனசிலே பதிஞ்சிருந்த தேவதையோட விக்ரகத்தையும் அழிச்சுட்டேன்! இந்தக் குரூபமான உருவத்தை வச்சிக்கிட்டு நான் என்ன பண்ணுவேன்?”
“அழகு!”
“ஆமா, நான் அழகை நேசிக்கிறேன்தான். ஆனா வெறும் அழகு போதாது எனக்கு… அழகோட குணமும் வேணும் மலரோட மணமும் வேணும்…”
சந்திர சாட்டர்ஜி இவ்வளவு உணர்ச்சி வசப்படுபவரா?
“ஊர் முழுக்க என்னை ஏசுது. ஏச மாட்டாங்களா? கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த பொண்ணு குரூபியா யிட்டான்னு அவளை தள்ளி வச்சவனை ஊர் மெச்சவா செய்யும்?”
“ஆனா அவளை நான் இதுக்காகவா ஒதுக்கி வச்சேன்?”
“அழகுங்கறது சின்ன விஷயம். உன் முகம் முழுக்கவே பொசுங்கியிருந்தாக் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். என் மனசிலே இருக்கற உன் உருவம் பழுதாகாமே இருந்தால் போதும் எனக்கு. நான் கோபாலன் விக்ரகத்தை அழிக்கப் போய் உன்னோட அந்த உருவத்தையும் அழிச்சுட்டேனே!” கோபாலன்தான் உன் உசிருன்னு சொன்னே. கோபாலன் மேலே உன் பிரியத்துக்கு முன்னாலே என்னோட அன்பு துச்சமா தோணிச்சு உனக்கு. அதனாலே எனக்கு கோபாலன் மேரில பொறாமை வந்தது. ஆனா அதே சமயத்திலே உள்னோட கோபால பக்திக்காக உன்னை உள்ளூற மதிச்சேன், உன்னைப் பத்திப் பெருமைப்பட்டேன்…”
“ஆனா நீ என்ன பண்ணினே?”
“நெருப்புப் பிடிச்சதும் கோபாலனைக் காப்பாத்தப் போல நீ…. பூஜையறைப் பக்கம் திரும்பக் கூட இல்லே… படுக்கையறைக்குள்ளே ஓடினே உன் நகைகளைக் காப்பாத்த!”
“… !”
“நான் இதுவரை பூஜை பண்ணி வந்தது வெறும் மண் பொம்மைன்னு புரிஞ்சுது எனக்கு. உன் விக்ரகம் இருந்த இடத்திலே நிறம் அழிஞ்சு போய், மண் கரைஞ்சு போய், வெறும் மூங்கிலும் வைக்கோலும்தான் மிஞ்சியிருக்கு! இதை வச்சிக்கிட்டு நான் என்ன பண்ணுவேன்?”
‘ஆனா இதை எப்படி உன்கிட்டே சொல்லுவேன்? சொன்னேன்னா நீ உன் உண்மைத் தன்மையை உணர்ந்துக்கிட்டு வெக்கத்தாலே துடிப்பே, உன்னையே வெறுத்துக்குவே… இதைவிட நீ என்னைத் தவறா நினைச்சுக்கிட்டு வெறுக்கறது நல்லது… அப்படியே செஞ்சுக்க!”
ஆகா! நினைக்க நினைக்க ஆச்சர்யமாயிருக்கிறது எனக்கு. இந்த அதிசய மனிதர் நீண்ட முப்பதாண்டுக் காலம் சந்தர் டாக்ருனின் நற்பெயரைக் காப்பாற்றுவதற்காக ஊராரின் இகழ்ச்சியைப் பொறுத்துக் கொண்டிருக்கிறார். எப்பேர்ப்பட்ட தியாகம் இது!
கணவரது பெருமை தெரியாமல் அவரை நிந்தித்து வந்திருக்கிறார் சந்தர் டாக்ருன் இந்த முப்பதாண்டுகளாக! சந்தர் டாக்ருனின் முகத்தின் வலது பக்கம் மட்டுமல்ல முகம் முழுதுமே நெருப்பில் பொசுங்கிக் கருத்துப்போய் விட்ட
தாகத் தோன்றியது எனக்கு….

One Comment on “மூலம் : ஆசாபூர்ணாதேவி/நெருப்புச் சூடு”
Comments are closed.