
தமிழில் : சு.கிருஷ்ணமூர்த்தி
வங்காளக் கதைகள்
நாங்கள் அவளை கேதகி சித்தி என்று அழைப்போம். உறவினர் வட்டாரத்தில் அவளுக்குப் பெயர் ‘குடி கேடி’. தொலைவில் அவள் வருவதைப் பார்த்து நாங்கள் உற்சாகமாக அம்மாவிடம் போய் அவள் வரவை அறிவித்தால் அம்மாவின் முகம் என்னவோ மாதிரி ஆகிவிடும். அம்மா மெல்லிய குரலில் “இவ எதுக்கு இப்போ இங்கே வரா?” என்று சொல்லிவிட்டு எங்களை அதட்டுவாள், “குதிக்கறதைக் கொஞ்சம் குறைச்சுக்கங்க!…. அவளை இங்கே இருக்கச் சொல்லிடாதீங்க, ஆமா!”
கேதகி சித்தி வாசலிலிருந்தே கத்துவாள், “எங்கே, என்னோட லட்சுமியும் சரஸ்வதியும் எங்கே?”
அக்கா தங்கையான நாங்களிருவரும் அந்த லட்சுமி, சரஸ்வதி என்ற பெயர்களின் கவர்ச்சியாலோ என்னவோ – அம்மாவின் தடையையும் மீறி கேதகி சித்தியிடம் ஓடுவோம். அமைதியே உருவான தேவதைகளான லட்சுமியிடமும் சரஸ்வதியிடமும் வங்காளிப் பெண்களுக்கு ஒரே மோகம். கைகளில் அஸ்திரங்களை வைத்துக் கொண்டு கொல்ல முற்படும் துர்க்காவும் காளியும் யாருக்கு வேண்டும்!
கேதகி சித்தியின் மூக்கு பறவையின் அலகு போல் நீளமாயிருக்கும். வெற்றிலைக் கறை படிந்த அவளுடைய காய்ந்த மெல்லிய உதடுகள் பித்தத்தால், வெடித்த உள்ளங்காலில் மருதாணி தடவினாற் போலிருக்கும். மொட்டைக் காதுகளில் துளைகள் பெரிதாகத் தொங்கும். கேதகி சித்தியை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தால் சற்று அருவருப்பு கூடத் தோன்றும். ஆனால் அவள் பேச்சில் கவர்ச்சி இருந்தது. வாய் ஓயாமல் பேசுவாள். வேடிக்கைப் பாட்டுப் பாடுவாள், கதாகாலட்சேபம் செய்பவர்கள் மாதிரி கவர்ச்சியாகப் பேசியும் பாடியும் எங்களை மயக்கி விடுவாள்.
வீட்டுக்குள் நுழைந்ததும் கேதகி சித்தி அக்கா தங்கைகளாகிய எங்களிருவரின் அழகையும் குணத்தையும் புகழ்வாள். பிறகுதான் “நீரு எங்கே?” என்று எங்கள் அம்மாவைப் பற்றி விசாரித்துக் கொண்டே சமையலறைப் பக்கம் போவாள். எப்போதாவது அப்பாவைப் பார்த்து விட்டால் சற்றுத் தலை குனிந்து கொண்டு முறுவலிப்பாள்.
அப்பா அவளை தீவிர பாவனையோடு கேட்பார், “என்ன சௌக்கியமா?”
கேதகி சித்தி சங்கடத்தோடு தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவாள். பிறகு அம்மாவிடம் போய் “பாத்தியர் நீரு, என் நெஞ்சு இன்னும் படபடக்குது. ஒன் ஆம்படையானைப் பார்த்தா எவ்வளவு பயமாயிருக்கு தெரியுமா? எவ்வளவு சீரியஸா இருக்கார்!…. ஒனக்குப் பயமாயில்லே?”
இதைக் கேட்டு அம்மாவுக்கு ரொம்பப் பெருமை. அவள் கண்களை அகல விரித்துக் கொண்டு சொல்வாள், “ஆமா ஆமா, என்ன கோபம் வரும் தெரியுமா அவருக்கு!”
அம்மா அப்பாவைப் பற்றி சித்தியிடம் மிகையாகப் பேசி அவளைப் பயமுறுத்தி வீட்டைவிட்டு விரட்டப் பார்க்கிறாள் என்று எனக்குத் தோன்றும்.
கேதகி சித்திக்கு நிலையான இருப்பிடம் எதுவுமில்லை. ஒருநாள் தங்கை வீடு, இன்னொரு நாள் அண்ணன் வீடு, மற்றொரு நாள் அத்தை வீடு, வேறொரு நாள் யாராவது உறவினர் வீடு என்று மாறி மாறிப் போய்க் கொண்டிருப்பாள், ஆனால் யாருடனும் ஒட்டிக் கொள்வதில்லை. அவளுக்குப் பட் பட்டென்று பேசுவது, பிறருடைய குற்றங் குறைகளைச் சுட்டிக் காட்டுவது இவை போன்ற கெட்ட குணங்கள் நிறையவே இருந்தன.
அம்மா கேட்பாள், “டீ குடிக்கறியா?”
“குடிக்கறேன்…”
தீனி விஷயத்தில் வேண்டாம் என்று சொல்லவே மாட்டாள் கேதகி சித்தி. அப்பா வீட்டிலில்லாவிட்டால் அவள் தேநீர் கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டு கால்களைத் தூக்கி வைத்துக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்து விடுவாள். நாங்கள் அக்காவும் தங்கையும் கதை வெள்ளத்தில் ஆனந்தமாக மிதப்போம். பள்ளி நினைவே வராது எங்களுக்கு. பிறகு கதை சொல்லத் தொடங்கி விடுவாள்.
அம்மா திடீரென்று எங்களைக் கேட்பாள், “என்ன, ஸ்கூல் கிடையாதா ஒங்களுக்கு?”
நாங்கள் கெஞ்சுவோம், “அம்மா, இன்னிக்கு ஸ்கூல் வேண்டாம்மா.’
கேதகி சித்தியும் ஒத்துப் பாடுவாள், “ஆமா நீரு. இன்னிக்கு ஒரு நா இதுகள் ஸ்கூலுக்குப் போக வேண்டாம். ஒரு நா போகாட்டி ஒண்ணும் மோசமாயிடாது.”
அம்மாவின் நெற்றி எரிச்சலில் சுருங்கும். “நீ ஒண்ணும் அதுகளுக்குச் செல்லங் கொடுத்துக் கெடுக்காதே! நீதான் படிக்கலே. படிச்சிருந்தேன்னா ஒனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?” என்று அதட்டுவாள்.
கேதகி சித்தியின் கண்களில் கோபம் ஜொலிக்கும். “ஆமா, நீங்களெல்லாம் பி.ஏ., எம்.ஏ., படிச்சீங்களாக்கும்! அதிருஷ்டம்னு ஒண்ணு இருக்கு, நினைவு வச்சுக்கோ!”
குடித்தனம் நடத்தும் மற்ற பெண்மணிகளைப் போல் அம்மாவுக்கும் அதிருஷ்டம், விதி இவற்றில் நம்பிக்கை உண்டு. இந்த அதிருஷ்டங்கெட்டவளின் பெருமூச்சுப் பட்டுத் தன் குடும்பத்துக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து விடுவாள். ஆகவே உடனே சித்திக்கு ஒத்துப்பாடுவாள்.
“நீ சொல்றது சரிதான். ஒன் அதிருஷ்டந்தான் இது! எவ்வளவு நகை நட்டு செஞ்சு, நிறையப் பணம் செலவு பண்ணி
ஒனக்கு கலியாணம் பண்ணி வச்சார் பெரியப்பா. மாப்பிள்ளை இப்படிப்பட்ட போக்கிரின்னு தெரியலியே !”
கேதகி சித்தியின் மூக்கு விடைத்துக்கொள்ளும், கண்களில் நீர் தளும்பும்.
“போக்கிரின்னா சாதாரணப் போக்கிரியா? கஜப் போக்கிரி ! என்னைக் கலியாணம் பண்ணிக்கிட்டு வீட்டிலே வேலைக்காரியா வச்சுக்கலாம், அவளைக் கூட்டிக்கிட்டு வந்து வீட்டு ராணியாக்கலாம்னு பார்த்தான்….!”
ஒரு நீண்ட பெருமூச்சு விடுவாள் அம்மா. “இருந்தாலும் நீ ஒன் புருஷன் வீட்டை விட்டு வந்திருக்கக் கூடாது. நீ கொஞ்சநாள் பொறுத்துக்கிட்டு இருந்திருந்தா ஒன் புருஷன் திருந்தினாலும் திருந்தியிருப்பான்…”
“என்ன சொல்றே நீரு? அவன் பண்ணின அநியாயத்தை யெல்லாம் பொறுத்துக்கணுமா நான்?”
நிலையைச் சமாளிப்பதற்காக உடனே பேச்சை மாற்றுவாள் அம்மா. “அது போகட்டும்… இப்போ எங்கே போகப் பேறே? சாப்பிட்டுட்டு சாயங்காலமாப் போயேன்!”
உடனே கேதகி சித்தியின் முகத்தில், கண்களில் மகிழ்ச்சி பளபளக்கும். அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு ஏற்பாடாகி விட்டதே என்ற மகிழ்ச்சி. அவள் எங்களைப் பார்த்து வெற்றிலைக் கறை படிந்த பற்களைக் காட்டிக்கொண்டு சிரிப்பாள். என் தங்கையின் மோவாயைத் தடவியவாறு அம்மாவிடம் சொல்வாள், “நீரு, ஒன் சின்னப் பொண்ணோட மூஞ்சி யார் மாதிரி இருக்கு தெரியுமா? பெல்காமிலே இருந்தாளே, நம்ம கமலா மாமி அவ மாதிரியேதான்! கமலா மாமி எவ்வளவு அழகாயிருப்பா, ஞாபகமிருக்கா நீரு?’
இந்தப் புகழ்ச்சி கேட்டு என் தங்கை முகம் வெட்கத்தால் சிவக்கும், அதே சமயம் என் முகம் மங்கி விடும். இதைக் கவனித்ததும் கேதகி சித்தி என்னை சமாதானம் செய்வதற்காக அம்மாவிடம், “ஒன் பெரிய பொண்ணுக்கு மூஞ்சி கொஞ்ச நீளம். சரஸ்வதி தேவதை மாதிரி… இவ யாரு மாதிரி இருக்கா, நீரு?” என்று கேட்பாள்.
பிறகு அம்மாவும் கேதகி சித்தியும் தங்கள் வாழ்வில் பார்த்த அழகிகளைப் பற்றிப் பேசத் தொடங்கிவிடுவார்கள்.
முதலில் அழகிகள், பிறகு அவர்களுடைய வாழ்க்கை,வாழ்க்கையின் துன்பங்கள்…. அவற்றைப் பற்றிக் கேட்கும் போது எங்களுக்குக் கேதகி சித்தி படும் துன்பங்கள் நினைவுக்கு வரும்.
எங்கள்
தீர்மானிப்போம், நாங்கள் பெரியவர்களான பின் கேதகி சித்தியை எங்களுடனேயே வைத்துக் கொள்வதென்று. அவள் எங்களுடனேயே இருப்பாள், நாங்கள் அவளுக்குத் துணி மணிகள் வாங்கிக் கொடுப்போம்…. அவளுடைய புருஷனை நன்றாகத் தண்டிக்க வேண்டும் ஒருநாள்!
கண்களில் நீர் தளும்பும். நாங்கள் எப்போதாவது அம்மாவிடம், “கேதகி சித்தி நம்மோடேயே இருக்கட்டுமே!” என்று சொல்வோம்.
அம்மா எங்களை அதட்டுவாள், “சீ, சும்மா இருங்க! புருஷன் வீட்டை விட்டு ஓடி வந்துட்டா, சொந்தத் தம்பி வீட்டிலே இருப்புக் கொள்ளலே இவளுக்கு! இப்படிப்பட்டவளை நம்ம வீட்டிலே கொண்டு வந்து வச்சுக்க முடியுமா? நீங்க ஒண்ணும் அவளுக்காகக் கவலைப்பட வேண்டாம். சும்மா இருங்க!”
கேதகி சித்தியைப் பற்றி நாங்கள் கவலைப்படத் தேவை ஏற்படவில்லை. எப்படியோ அவள் எங்கள் வாழ்க்கையிலிருந்து மறைந்து போய்விட்டாள். எங்களுக்கு எங்கள் வாழ்க்கை கவலையே பெரிதாயிருக்கும் போது மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட ஏது நேரம்!
இருபது இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. இப்போது நான் கேதகி சித்தியால் ‘லட்சுமி’ என்று புகழப்பட்ட என் தங்கை இதூவின் வீட்டில் இருக்கிறேன். இதூவின் சிறிய பெண் கைகால்களை உதைத்துக் கொண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள். அவள் இன்றைக்கு என்னை விட்டு விட்டுப் பள்ளிக்குப் போக மாட்டாளாம்!
“இன்னிக்கு ஒரு நா கொழந்தை ஸ்கூலுக்குப் போக வேண்டாமே!” என்று நான் சிபாரிசு செய்தேன்.
இதூ திடுக்கிட்டு என் பக்கம் திரும்பிப் பார்த்தாள், பிறகு சொன்னாள், “என்ன இப்படிச் சொல்றே அக்கா! இது நம்ம காலம் இல்லே. ஒரு நா ஸ்கூலுக்குப் போகாட்டியும் ரொம்பக் கஷ்டமாக்கும். தவிர நீ என்ன அபூர்வமா வர்றவளா, அடிக்கடிதான் வந்துக்
கிட்டிருக்கியே !
ஒரு நாள் பள்ளிக்குப் போகாவிட்டால் எவ்வளவு நஷ்டம் என்று எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனக்குத்தான் குழந்தை குட்டி இல்லையே! இந்தக் காலத்துப் பள்ளிகளைப்
பற்றி எனக்கு என்ன தெரியும்!
இதூவின் ஐந்து வயதுப் பெண்ணுக்குத் தான் ஒரு நாள் பள்ளிக்குப் போகாவிட்டால் எவ்வளவு நஷ்டமாகிவிடும் என்பது புரியவில்லை. இதூ குழந்தையை இழுத்துக் கொண்டு போன பின்னும் அதன் சோக முகத்தை மறக்க முடியவில்லை என்னால். இதூ பெண்ணைக் கீழே இழுத்துக் கொண்டு போனாள். பள்ளிப்பேருந்து கதவு பட்டென்று மூடிக் கொள்ளும் சத்தம் கேட்டு என் நெஞ்சு வலித்தது.
இந்த சமயத்தில் இதூவின் கணவன் ராகுல் கதவுத் திரையை விலக்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் காரணமின்றியே எனக்குப் படபடத்தது. இப்போ தெல்லாம் ஆண்களுக்கு முன்னால் இயற்கையாக இருக்க முடியவில்லை என்னால்.
ராகுல் பார்க்கக் கம்பீரமாக இருப்பான். பெரிய வேலை பார்க்கிறான். என்னைப் பார்த்ததும் அவன் முகம் சற்று மலர்ந்தது.
“ரிது அக்கா, எப்போ வந்தீங்க?”
“கொஞ்ச நேரம் முன்னாலேதான் வந்தேன்….”
“டீ குடிச்சீங்களா?” மரியாதைக்காகக் கேட்டான். “குடிக்கிறேன். இப்போ என்ன அவசரம்?” எனக்கு சங்கட மாயிருந்தது. என்னாலே இவர்களுக்கு ஏதாவது அசௌகரியம் ஏற்படுமா?
இப்படித்தான் எனக்கு எங்கே போனாலும் இருப்பே கொள்வதில்லை. ஏதோ குற்றம் செய்த மாதிரி உறுத்தல்.
இதூ இப்போது அறைக்குள் நுழைந்தாள். என்னையும் ராகுலையும் ஓரக்கண்ணால் பார்த்தாள். அவள் மூக்கு சற்று விடைத்தது ஏதோ ரகசியம் இருக்கிறதென்று மோப்பம் பிடிக்கிறாளோ?
இதூவின் முகத்தில் சந்தேகத்தின் நிழல். நான் சிறு வயதிலிருந்தே பார்த்து வருகிறேனே, இவளைத் தெரியாதா எனக்கு!
அவள் எதிர்பாராத விதமாக ராகுலுக்கு மிகவும் அருகில் போய் நின்று கொண்டு அவன் தலையிலிருந்து ஒரு நரைத்த முடியைப் பிய்த்து விட்டு, “பாருங்க, நீங்க கிழவராயிட்டீங்க” என்று கொஞ்சலாகச் சொன்னாள்.
ராகுல் சிரித்தான்.
தானும் ராகுலும் எவ்வளவு அன்யோன்யம் என்று எனக்குக் காட்ட விரும்புகிறாள்.
என் மூக்கு நுனியில் எரிச்சல். கண்களில் நீர் வந்து விடும் போலிருக்கிறது. நான் என்னை சமாளித்துக் கொள்ளப் புத்தக அலமாரியை நோக்கிப் போய்ப் புத்தகங்களைப் பார்க்கத் தொடங்குகிறேன்.
ஆனால் இதூவுக்கு மட்டும் என்னைத் தெரியாதா? நான் அண்ணனோடு கோபித்துக் கொண்டு இதூவின் வீட்டுக்கு வந்திருக்கிறேன். இதூ என்னை அவள் வீட்டில் தங்கச் சொல்லு வாளோ இல்லையோ தெரியவில்லை. எனக்கு இப்போ தெல்லாம் எந்த இடத்திலும் பொருந்துவதில்லை.
அபிஜித்திடமிருந்து விவாகரத்து செய்து கொண்ட பிறகு நான் ஒரு காலிப் பை என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது எனக்கு. நான் இந்தப் பைக்குள் எதை வேண்டுமானாலும் போடலாம், பையை எங்கே வேண்டுமானாலும் வைக்கலாம்.
“வா, உள்ளே போகலாம்” இதூ சொன்னாள்.
நாங்கள் இதூவின் படுக்கையறைக்குப் போனோம். படுக்கையின் மேல் சிதறிக் கிடந்த விளையாட்டுப் பொம்மைகளை எடுத்து வைத்தவாறே இதூ சொன்னாள், “நேத்திக்கு அண்ணா வந்திருந்தான்.”
சுவாரசியமில்லாமல் கேட்டேன், “என்ன சொன்னான்?”
“ஒன்னைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தான். பாவம், அவனுக்கு ஒன்னைப் பத்தி ரொம்பக் கவலை….’
நான் கேலியாகச் சிரித்தேன், “கவலை என்னைப் பத்தியா, பயம் அவனுக்கு! அவனைப் பத்திப் பேசாதே என்கிட்டே! நம்ம வீட்டைப் பத்தியா? நான் வீட்டிலே பங்கு கேப்பேனோன்னு எப்பவும் தன் காரியந்தான் அவனுக்கு!” படபடப்பில் எனக்கு
மூச்சு இரைத்தது.
நறுக்குத் தெறித்தாற் போல் வார்த்தைகள் வெளிப்பட்டன. இதா சற்று நேரம் பேசாமலிருந்தாள். பிறகு அவளிடமிருந்து “பெண்களுக்குப் போக்கிடம் புருஷன் வீடுதானே! கிழ வயசிலே புருஷனைத் தவிர வேறு யாரு பார்த்துப்பாங்க?” எனக்குக் கோபத்தில் இரத்தம் தலைக்கேறியது. என்ன சொல்ல விரும்புகிறாள் இவள்? ஆபத்துக்காலத்தில் நான் அவர்களை நம்பியிருக்கக் கூடாது என்று எச்சரிக்கிறாளா? என் தங்கை லட்சுமி மாதிரி அழகாகக் குடித்தனம் செய்து கொண்டிருக்கிறாள். காளி மாதிரி தாண்டவமாடி அவளுடைய குடித்தனத்தை நாசம் செய்துவிடலாமா என்று ஆத்திரம் ஏற்படுகிறது எனக்கு. எப்படியோ என்னைச் சமாளித்துக் கொண்டு பேசாமலிருக்கிறேன்.
இதூ டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்த டப்பாக்களைச் சரி செய்தவாறே சொன்னாள், “அபிஜித்தை மட்டும் குத்தஞ் சொல்லக் கூடாது. ஒன் மேலேயும் குத்தம் இருக்கு. ஆம்பிளைங்களுக்கு கொஞ்சம் விட்டுக்கொடுக்கணும். நீ ஒன் புருசனை கொஞ்சம் அனுசரிச்சுப் போயிருக்கணும்!”
இது என்ன சொல்கிறாள்? ஆண்களை அனுசரித்துப் போகணுமா? எப்போதும் பெண்கள் புருசனின் இஷ்டத்துக்கு வளைந்துதான் கொடுக்க வேண்டுமா? பெண்ணுக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இருக்கக்கூடாதா?
பல்ட்ருவின் பெண்டாட்டி ஜயந்தியும் நேற்றைக்கு இதே மாதிரிதான் பேசினாள்….
அபிஜித்தின் குணம் இவர்களுக்குத் தெரியுமா. என் முகத்தில் அடித்தாற் போல், “இப்போ எல்லாம் ஒன்னை எனக்குப் பிடிக்கலே” என்று பட்டென்று அவன் சொன்னது இவர்களுக்குத் தெரியுமா? நான் இந்த விஷயத்தைச் சொன்னாலும் இவர்கள் புரிந்து கொள்வார்களா?
மேலும் அங்கேயிருக்கப் பிடிக்கவில்லை. இதூ ஏதோ ஒரு அன்னிய மனுஷியாகத் தோன்றியது. ஒரே படபடப்பாயிருந்தது. கட்டிலிலிருந்து இறங்கியவாறே “போய்ட்டு வரேன்” என்றேன்.
காலையில் ஒரு கோப்பை தேநீர் தான் குடித்திருந்தேன். காலி வயிறு பசியில் வலித்தது.
இதூ திகைத்துப் போய் என்னைப் பார்த்தாள். “கிளம்பிட்டியா? டீ குடிக்கலியா?” என்று கேட்டாள்
ஆனால் உள்ளூர நிம்மதியடைந்து விட்டதை அவளால் மறைக்க முடியவில்லை.
நான் வேறெதுவும் பேசாமல் நடக்கத் தொடங்கினேன். நடக்கும் போது இதூவின் ஆளுயரக் கண்ணாடிக்கு முன்னால்
வந்தேன்…..
கண்ணாடியில் அந்த பிம்பம் யாருடையது?
பறவையின் அலகு போன்ற மூக்கு, எண்ணெய்ப் பசையில்லாத தலைமுடி, பொருக்குத் தட்டிய உதடுகள், சொறி பிடித்தாற் போன்ற கைகால்கள்…..
இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது திடீரென்று கேதகி சித்தியின் உருவம் எப்படி வந்தது இங்கே?
திடுக்கிட்டுப் போய்க் கண்களை மூடிக்கொண்டேன்.

One Comment on “மூலம் : சுசிஸ்மிதா பந்த்யோபாத்தியாய்/அதே உருவம்”
Comments are closed.