
சோமசுந்தர அய்யா ஒரு வித தயக்கத்துடன் தன் அலைபேசியை எடுத்து திலக்கிற்கு அழைப்பு விடுத்தார் . திலக் தனது அலுவலக பணியாக வெளியே சென்றதால் அவர் அழைப்பை எடுக்க முடியவில்லை ,பின்னர் அவரை அழைத்தான் .
அவர் தயங்கிக்கொண்டே “தம்பி எப்படி பா இருக்க “? என்றார் . திலக் “அய்யா உங்கள் ஆசிர்வாதத்தில் நன்றாக இருக்கிறேன் “ என்றான் …
அவர் தயங்கிக்கொண்டே ஏதோ கூற நினைக்கிறார் ஆனால் முடியவில்லை . அழைப்பில் இருந்த திலக் வெகு நேரமாக கூப்பிட்டும் எதுவும் பேசாமல் “ஒன்னும் இல்லை திலக் சும்மா தான் கூப்பிட்டேன் “ என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார் . திலக்கிற்கு அவர் ஏதோ சொல்ல வந்து மென்னு முழுங்குவது நன்றாக புரிந்தது .
யோசித்தபடியே நடந்தவனுக்கு தன் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்தது . பள்ளி படிப்பை முடித்தவுடன் தன் அப்பாவின் ஆசைக்காக இந்த கல்லூரியில் சேர்ந்தான் திலக் , ஆனால் கல்லூரி தொடங்கி கொஞ்ச நாட்களிலேயே அவன் அப்பா இறந்து விட்டார் . வீட்டு வருமானம் தன் அப்பாவின் இறப்பு மூலம் முடங்கிவிட்டதால் ,திலக் 18 வயதில் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் சூழல் ஏற்பட்டது
தன் படிப்பையும் தன் தம்பி படிப்பையும் சேர்த்து பார்த்துக்கொள்ள வேண்டிய சூழலில் , தனக்கான கல்லூரி புத்தகங்களை வாங்க கூட வசதி இல்லாமல் திணற , அந்த சமயம் தனது வகுப்பின் ஆசிரியராக இருந்த சோமசுந்தர அய்யா அவர்கள் தன் நிலையை அறிந்து ,கல்லூரி முதல்வரிடம் பேசி தனக்காக கல்லூரி நூலகத்திலிருந்து புத்தகங்களை பெற்று தந்தார் .
எப்பொழுதும் அவரை நூலகத்தில் பார்க்கலாம் ,பார்க்கும் நபருக்கு எல்லாம் புத்தகம் வாங்கி பரிசளிப்பார் . ஒரு முறை நூலகத்தின் புத்தகத்தை தான் தெரியாமல் கிழித்ததும் அதற்காக கோபப்பட்டு அவர் தன் காதை திருகியதும் அவனுக்கு நினைவுக்கு வர , நடந்து கொண்டிருந்தவன் சட்டென்று நின்றான் . அவன் தனக்குள் “அப்படி இருந்த ஆசிரியரா இப்படி நம்மிடம் பேச தயங்குகிறார் “? என்று நினைத்து கொண்டு தன் நண்பர்கள் சிலருக்கு அழைப்பு விடுத்து காரணம் அறிய எண்ணினான் , பலரிடம் பேசிய பிறகு,யாருக்குமே தெரியாத நிலையில் ஆசிரியரின் தூரத்து சொந்தமான தன் சீனியர் ஒருவரிடம் விஷயம் கேட்க ,அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது .
அது என்னவென்றால் , கடந்த ஐந்து வருடங்களாக கல்லூரியின் நூலக பொறுப்பை சோமசுந்தர அய்யா தான் பார்த்து வந்துள்ளார் . கடந்த 8 மாதத்திற்கு முன்னர் அவர் சிறிது கவனக்குறைவாக இருந்த போது நூலகத்தில் தீ பற்றி எரிய , ஆயிரக்கனான புத்தகங்கள் எரிந்து சாம்பலாயின ,இவருடைய பொறுப்பில் இந்த சம்பவம் நடந்ததால் ,கல்லூரி இவரை பொறுப்பேற்க சொல்லி புத்தகங்களை புதுப்பிக்க வேண்டும் அல்லது வேலையை விட வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளது .
அவர் நூலகம் இருந்த இடத்திற்கு காப்பீடு ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க, ஒரு சிறு பகுதிக்கு தான் காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தார் . அவரால் இதை செய்ய முடியாது என்று கூறவும் முடியவில்லை ,ஏனெனில் நிறைய ஏழை மாணவர்களுக்கு இந்த நூலகம் மிகவும் தேவையானது .
அவர் தன்னால் முடிந்தவரை புதுப்பிக்க முயற்சி எடுத்தும் அவரால் அதை முடிக்க முடியாமல் போனதால் தன் வேலையை கடந்த மாதம் ராஜினாமா செய்துள்ளார் .கல்லூரிக்கு இதனால் லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை , இருந்தும் கல்லூரி முதல்வர் பழியை இவர் தலையில் கட்டி அதன் மூலம் குளிர் காய எண்ணினார் .
ஆனால் பாவம் , அவருடைய பணி ஒய்வு பெற இன்னும் 6 மாதங்கள் தான் உள்ளது . அவர் இந்த கல்லூரியில் 38 வருடங்களாக பணி புரிகின்றார் .இதுவே இப்பொழுது இருக்கும் முதல்வரின் தந்தையாக (முன்னாள் முதல்வர்) இருந்தால் பொறுமையாக முடிவெடுத்திருப்பார் , எனவே உன் மூலமாக ஏதாவது ஒரு நல்லது நடக்குமா என்பதை எண்ணி அவர் உனக்கு அழைப்பு விடுத்துள்ளார் வேற ஏதும் இல்லை “என்றார்.
இதை கேட்ட திலக்கிற்கு இப்பொழுது விஷயம் நன்கு புரிந்தது , தனக்கு உதவிய ஆசிரியர் , கௌரவத்துடன் பள்ளியில் இருந்து சகல மரியாதையுடன் ஒய்வு பெற வேண்டும் என்றெண்ணி , நூலகம் புதுப்பிக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்தான் , கல்லூரிக்கு நேரில் சென்று புதுப்பிக்க தேவையான விஷயங்களை சேகரித்து , பின்பு தற்போது உள்ள கல்லூரி முதல்வரிடம் சோமசுந்தர அய்யா அனுப்பிய நபராக பேசி ,கட்டட வேலைகளை முடித்து புது புத்தகங்களை வாங்கி சேகரித்து ,நூலகத்தை புதுப்பித்தான் .
வேலைகள் எல்லாம் சொல்லியபடி முடிய கல்லூரி நிர்வாகம் சோமசுந்தர அய்யாவை மீண்டும் பணியில் சேருவதற்கு அழைப்பு விடுத்தது . ஒன்றும் புரியாமல் நின்றவர்க்கு, அவருடைய தோழர் மற்றொரு ஆசிரியர் மூலம் நடந்ததெல்லாம் தெரிய வர , சந்தோஷத்தில் நன்றி கூற திலக்கிற்கு அழைப்பு விடுத்தார் .
திலக் அவரிடம் “அய்யா , உங்கள் ஆதரவால் தான் நான் நன்கு படித்தேன் , என்னிடம் கேட்க என்ன தயக்கம் , ஒரே ஒரு வேண்டுகோள் , கடைசி வரை இதை நான் செய்தேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாம் , அதுமட்டுமின்றி நீங்கள் ஓய்வு பெற்று கிளம்புவதற்குள் , கல்லூரியில் நூலகத்தை சரியாக பயன்படுத்தும் மாணவர்களுக்கு அவர்கள் விருப்பட்ட புத்தகம் அந்த வருட கடைசியில் பரிசாக கொடுக்கப்படும் என்றும் வசதியுள்ள பிள்ளைகள் ,தாங்கள் படித்து முடித்த பிறகு தங்கள் புத்தகத்தை கல்லூரியின் நூலகத்திற்கு தரலாம், என்ற பழக்கத்தை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டான் ……
புன்னகைத்துக்கொண்டே உறைந்து நின்றார் சோமசுந்தர அய்யா….
பி. ஆர்.கிரிஜா/புத்தகப் புழு – விருட்சம் நாளிதழ்
மடிப்பாக்கம்
