பி. ஆர்.கிரிஜா/புத்தகப் புழு

புத்தகங்களை வாங்கிக் குவித்து அதை படித்துக் கரைத்துக் குடித்த முகிலன் இப்போது தன் வீட்டின் ஒரு மூலையில் ஜன்னலோரம் பழைய நார் படுக்கையில் கிழிந்த நாராய் கிடக்கிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மிகச் சிறந்த எழுத்தாளர் என்று அறியப்பட்டவர். வாங்காத பரிசுகள் இல்லை. அனைத்து இலக்கிய அமைப்புகளையும் பராமரித்து நடத்தியவர். எப்போதும் புத்தகக் குவியலுக்கு நடுவில் வாசம் செய்தவர்.
இப்போது மூப்பின் காரணமாக உடல் சுருங்கி, சுய நினைவின்றி கிடக்கிறார். அவர் நேசித்த அனைத்து
புத்தகங்களும், பரிசுகளும், பதக்கங்களும் இருந்த சுவடு தெரியாமல் காணாமல் போயின. அவரும் வேண்டாத பொருளாக ஆகி விட்டார். உயிர் மட்டும் உடலில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
திடீரென்று அறையில் வெளிச்சம். ஒரு கை ஆதரவாக அவர் நெற்றியைத் தொட்டது. முகிலன் உடலில் லேசான அசைவு. கண்ணைத் திறக்க முயற்சித்தார். அந்தக் கரம் மெதுவாக அவர் கையைப் பற்றியது. சட்டென்று ஒரு பொறி. முகிலன் கண் திறந்தார். அவருடைய பால்ய தோழன் பாரி புன்னகையுடன் அவரை அணைத்துக் கொண்டார். மகிழ்ச்சியில் முகிலனுக்கு உடலில் புதிய ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார முயற்சித்தார். பாரி கை கொடுத்து உதவினார். இப்போது முகிலன் அகக் கண்ணில் பழைய நினைவுகள். கண் மூடி சிறிது நேரம் அனுபவித்தார். அறை முழுவதும் வண்ண மயமான புத்தகங்கள். அதன் நடுவில் தான் அமர்ந்திருந்த காட்சி மனக் கண்ணில் வந்து போனது.
நினைவு திரும்பிய மகிழ்ச்சியில் முகிலன் நண்பனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

சுஸ்ரீ/ஹ்யூமென் அனாடமி – விருட்சம் நாளிதழ்