சீவக சிந்தாமணி – நாமகள் இலம்பகம்/ உஷாதீபன்


வெலற்கரும் குஞ்சரம் வேட்டம் பட்டெனத்
தலைத்தலை அவர்கதம் தவிர்ப்பத் தாழ்ந்துபோய்க்
குலத்தலை மகளிர்தம் கற்வின் கோட்டகம்
நிலைப்படா நிறைந்தன பிறவும் என்பவே
…!


பீறிட்டு வரும் வெள்ளப் பெருக்கை மக்கள் எவ்வாறு அடக்கிப் பாதை பிரித்து,
நீரை உபயோகமுள்ள வகையில் வயல் வெளிகளுக்குப் பயன்படுத்தினர்
என்று அறிய இப்பாடலும் அதற்கான உவமைகளும் பெரிதும் உதவுகின்றன.
வெலற்கரும் குஞ்சரம் வேட்டம் பட்டென –


குஞ்சரம் என்பது யானையைக் குறிக்கும் சொல். குஞ்சரவொழுகை பூட்டி எனும் சொல்
யானை குறித்து பதிற்றுப்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கவிகுஞ்சரம் எனும் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு சொல்லைச் சார்ந்து உயர்வு குறிக்கும் மொழி என்று வழங்கப்படுகிறது.


யானைக்கு மொத்தம் 60 பெயர்கள் உள்ளன. களிறு, களபம், மாதங்கம், வேழம், கைம்மா, உம்பர், அஞ்சனாவதி, அல்லியன், அறுபடை, ஆம்பல், இபம்….இவ்வாறாக….
குஞ்சரம் என்ற சொல்லுக்கு கருங்குவளை என்று ஒரு பொருள் காணப்படுகிறது.
குஞ்சரவொழுகை எனில் யானை வண்டி என்று பொருள். குஞ்சராசனம் என்றால் அரசமரம்.

குஞ்சரி என்ற சொல் பெண்யானையைக் குறிக்கிறது. தெய்வயானை.
அக்காலத்தில் மதம் பிடித்த யானையை எவ்வாறு அடக்கினர் என்று சொல்ல
வருகையில்-வெல்லுதற்கரியதுதான் யானை, மனித சக்திக்கு
அப்பாற்பட்டதுதான் எனினும், மனித யுக்திக்கு உட்பட்டது என்கிற வகையில்
குழிவெட்டி அதனுள் மதம் கொண்ட யானையை விழச் செய்து, பிறகு சொல்ல
அங்குசம் கொண்டு தாக்கி எப்படி யானையின் மதம் அடக்கப்படுகிறதோ
அதுபோல……

பீறிட்டு இரு கரைப்பகுதிகளையம் அரித்து வந்த வெள்ளப்பெருக்கை மக்கள்
அங்கங்கே தடுத்து நிறுத்தி- நீரை வீணாக்காது சேமித்து, பாசனத்துக்குப்
பயன்படுத்தும் உபயோகமான பணியைச் செவ்வனே செய்து ஒழுகினர்
என்கிறது இந்தப் பாடல்.

அப்படித் தடுத்து நீரின் வேகத்தை அடக்கியதால், குடத்தில் இட்ட
விளக்கினைப் போல், கற்பரசி மாதர் போல், அடங்கி ஒடுங்கி, ஜொலிக்கும்
வகையில் வாவியிலும், ஏரியிலும், பயிருடை நீர் நிலையிலும் நிறைந்து
விளங்கி, பயிர்கள் செழித்து ஓங்க உதவின என்கிற அற்புதமான கருத்தை
முன் வைக்கிறது.

வாவி என்ற சொல் தடாகம், நீர்நிலை என்ற பொருளைக் குறிக்கிறது.
வாவியுறை நீரும் வடநிழலும் பாவகமும் (நீதி வெண்பா)
வண்டார் குவளைய வாவியும் (சீவக.பாடல் 337)
இலக்கணப் பயன்பாடு கருதி இந்த உதாரணங்கள் தரப்படுகிறது.