பக்கவாட்டுச் சிந்தனை ——— சாந்தமூர்த்தி


சொல்வன்மை வேண்டும்.நேராக மட்டுமல்லாது பக்கவாட்டிலும் பார்க்கும் லேட்டரல் திங்கிங் நல்லது என்பார்கள்.புத்தி கூர்மைக்கும்,பொறுக்கித் தனத்துக்கும் இடையே மெல்லிய வேறுபாடு மட்டும்தான் உள்ளது.

நான் இளம் ஆசிரியராக இருந்த போது ஒரு மூத்த ஆசிரியர் சற்று வில்லங்கமானவர்.அவர் பக்க வாட்டு சிந்தனையாற்றல் மிக்கவர் என்று கௌரவமாகவும் சொல்லலாம்.அவருக்கு ஒரு நாள் அவசரமாய் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது.வானில் இருந்த ஒரு கரு மேகத் துண்டைக் காட்டி வேறொரு ஆசிரியரை விட்டு தலைமை ஆசிரியரிடம்’’மழை வரும் போலிருக்கிறது குளோசிங் பெல் அடித்து விடலாம்’’ என்று சொல்ல வைத்தார்.

H.M.வெளியில் பார்த்து விட்டு,”வெயில் அடிக்கிதே?”என்று கேட்டார்.மூத்த ஆசிரியர் முன் வந்து,”சனி மூலையில கருத்திருக்கு,சார்.பெருசா மழை வரலாம்.மத்தியானம் நியூஸ் கேட்டீங்களா? நம்ம கெட்ட நேரம்,மழையில பசங்க நனைஞ்சு யாருக்காவது எதாவது விஷ ஜுரம் வந்தா, கண்டவங்களுக்கும் நீங்க பதில் சொல்ல வேண்டியிருக்கும்.பாகிஸ்தான் ஹால்ல கடைசிப் பகுதி வேற எப்ப விழலாம்னு காத்துகிட்ருக்கு.ஒங்களுக்கு ரிடயர்மென்டு நெருங்கும் போது ஏன் சார் வீண் வம்பு?”என்று அடுக்கடுக்காக பீதியூட்டினார். H.M.அடுத்த நாளுக்கும் சேர்த்து லீவு விடலாமா என்கிற மனநிலைக்கு வந்து விட்டார். கடகடகட மணி அடிக்கும் போது மூத்தவர் பேருந்தில் இருந்தார்.

பாகிஸ்தான் ஹால் என்பது எங்கள் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பின் பிரிவுகள் அமைந்த புராதன ஓட்டுக் கட்டடம்.ஒரு கலவர பூமி போல எந்த நேரமும் அங்கு நிலவிய நிரந்தர இரைச்சல் அந்த பெயர் வரக் காரணமாக இருந்திருக்கலாம்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி நிறைய உண்டு என்றும்,மற்ற மாணவர்கள்,குறிப்பாக மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பிராய்லர் கோழிகள் போல என்றும் சிலர் சொல்வதுண்டு.

ஒரு நாள் அந்த மூத்த ஆசிரியர் பள்ளிக்குத் தாமதமாக வந்தார்.அவரை அன்று கையும் களவுமாகப் பிடிக்க H.M.முடிவு செய்து வாயிலருகே தயாராக நின்றார்.நடக்கப் போவதை வேடிக்கைப் பார்க்க முதல் பிரிவேளை வகுப்பு இல்லாத ஆசிரியர்களும்,இருக்கும் சிலரும் ஆவலுடன் காத்திருந்தனர். அவருக்கு எப்படியோ அங்கு நடப்பது பற்றி சந்தேகம் தோன்றியிருக்க வேண்டும்.

சீரியசான முகத்துடன் H.M. ஏதோ சொல்ல வந்ததைக் கூட காதில் வாங்காமல் அவர் விரைவாகச் சென்று வருகைப் பதிவேட்டில் சுருக்கொப்பம் இட்டார்.பரபரப்பான மெல்லிய குரலில்,”D.E.O.வர்றார்.ஃபஸ்ட் பீரியட் க்ளாஸ் இருக்கிறவங்க சீக்கிரம் க்ளாஸுக்குப் போங்க”என்றார். அடுத்த நொடி க்ளாஸ் உள்ளவங்க,இல்லாதவங்க எல்லாரும் ஓட்டமெடுத்தனர்.ஓடியது ஆசிரியர்கள் மட்டுமல்ல.மூத்தவர் நிதானமாக ஆசிரியர் அறைக்குச் சென்று செய்தித் தாளை எடுத்து அமர்ந்தார்.நீண்ட நேரம் கழித்தே எல்லோருக்கும் அவருடைய தந்திரம் புரிந்தது.

உணர்ச்சி வசப் படுவதில் மனிதர்களில் குறைந்த அளவு மூன்று வகை உண்டு.அவை தண்ணீர்,மன்ணெண்ணை,பெட்ரோல். விமானத்துக்குப் போடும் பெட்ரோல் டைப்பும் உண்டு.மூத்தவர் ஏதாவது ஒரு சர்ச்சையை மெல்லக் கிளப்பி விடுவார்.சிறிது சிறிதாக விவாதம் சூடு பிடிக்கும்.அது பற்றி எரியத் தொடங்கும் தறுவாயில் அந்த சுவாரஸ்யத்தில் அடுத்த பிரிவேளைக்கான மணியடித்த சத்தம் காதில் விழாது.

மூத்தவர் மெதுவாக எழுந்து தன் வகுப்புக்குப் போவார்.அல்லது அருகில் உள்ள கடைக்கு டீ சாப்பிடப் போவார்.விவாத இரைச்சல் கேட்டு தலைமை ஆசிரியர் வெளியே வருவார். ‘வாச்’சைப் பார்த்து விட்டு வகுப்பு உள்ளவர்கள் கத்திகளை உரைகளில் செருகி விட்டு வெட்கத்துடன் வகுப்புக்கு விரைவார்கள். பிறர் த.ஆ. தலை மறைந்ததும் அடங்கிய குரலில் விவாதத்தை மீண்டும் தொடர்வார்கள்.மூத்தவர் மீண்டும் அறைக்குத் திரும்பும் போது அவர் மூட்டி விட்ட தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கும்.
@@@@@@@@@@@@