வாசுதேவன் முகநூலில் தி. கண்ணன் பற்றி

சி.மோகனின் மிதிலா அச்சகத்திலிருந்து (80களில்) கண்ணன் எனக்கு நெருங்கிய பழக்கம். கவிஞர் சுகுமாரன் அப்போது சிண்ட்ரெல்லா என்ற பெயரில் ஆடைகள் தயாரிக்கும் பணியில் இருந்தார். மிதிலா அச்சகம் மாலை நேரத்தில் கலகலப்பாக மாறிவிடும்.
பொதுவாக இலக்கிய எழுத்தாளர்கள் சீரியஸாக பேசுகிறவர்கள் என்ற பாவனையை கண்ணன் உடைத்தான். அபாரமாக பாடுவான். தயவு தாட்சயண்மின்றி நக்கல் அடிக்கிற பேர்வழி(Sharp sense of humour). ஒரு இலக்கியக்கூட்டத்தில் தோப்பில் முகம்மது மீரானை சந்தித்து கை குலுக்கினான். ‘வீட்டில்?” என அவரை கேட்டான். அவருக்கு புரியவில்லை. ‘வீட்டில் உங்கள் பெயர் என்ன?’ எனக்கேட்டேன் என சொன்னவுடந்தான் அவருக்குப் புரிந்தது. எழுத்தாளர்களை சினிமா நடிகர்களோடு ஒப்பிட்டு அலாதியாக பேசுவான். ஆஜானுபாகுவான எஸ்.வி. ரங்கராவ் எப்போதும் அப்பா வேடத்தில் நடித்தவர். தமிழில் சுந்தரராமசாமிதான் எஸ்.வி.ரங்கராவ் என பட்டப்பெயரை சூட்டி சூழலை கலகலப்பாக மாற்றிவிடுவான். இந்த மாதிரி பல எழுத்தாளர்களை ஒப்பிட்டான். சரியாக நினைவில் இல்லை. சி.மோகனும், அவனும் என்னைபார்க்க வேலூர் வந்தார்கள். கே.என்.சிவராமன் அப்போது வேலூரில் வசித்து வந்தார். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்த நேரம். ஒரே பரபரப்பாக இருந்த காலம். ஜெயமோகனை பற்றி பலர் விசாரிக்க தொடங்கினார்கள். சிவராமனுக்கு என்னை முன்பின் அறிமுகமில்லை. சிவராமனிடம் நான்தான் ஜெயமோகன் என என்னை சீரியஸாக அறிமுகப்படுத்தினான். சிவராமன் இரண்டு நாட்களாக என்னை ஜெயமோகன் என நினைத்துக்கொண்டு ஆட்டோக்ராப்க்கு துரத்தியது நினைவிற்கு வருகிறது.
சாரு அலுவலகத்திற்கு போன் செய்து பெண் குரலில் பேசினான். அவரும் அதை நம்பி தன்னை ஒரு பெண் காதலிப்பதாக எங்களிடம் சொன்னது, அந்த காதல் பித்தத்தில் அவரை அலையவிட்டது கண்ணனின் கைங்கரியம். எம்.டி.எம் வேளச்சேரி அலுவலகத்தில் நம்பியும், அவனும் அடித்த கொட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. நண்பர்களுக்கு பெண் எழுதுவதுபோல் காதல் கடுதாசி (மொட்டை கடுதாசி) எழுதியவன். எனக்கும் அந்த மாதிரி எழுதி, நான் மயக்கத்தில் அலைந்தது தனிக்கதை. சீட்டாட்டத்தில் விற்பன்னன். வேலை இல்லாத காலத்தில் கையில் ஒரு ரூபாய் வைத்துக்கொண்டு அதை ரூ 10/20 காக மாற்றிவிடுவான். செகண்ட் ஷோ சினிமாவுக்கு போகும்போது லங்கர் கட்டை ஆடி அதில் ஜெயித்து சினிமா டிக்கெட் வாங்குவான். சுடுகாட்டில் சுருட்டு பிடித்துக்கொண்டு பேய் மாதிரி அலறி சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களை கதிகலங்க வைத்தவன்.அவன் அடித்த லூட்டிகள் சொல்லி மாளாது. அருமையான சிறுகதைகளை எழுதியவன். ‘ஆறாம் நாள் ‘ சிறுகதையில் அக்கிரகாரத்தில் தலித் பிணத்தை அடக்கம் செய்ய மறுப்பார்கள். பிணத்தைக்கூட தொடாத சனாதிகளை நக்கல் அடித்து எழுதியிருப்பான். கடைசியில் பிணமே தனக்குத்தானே சவக்குழி வெட்டுவதாக கதை முடியும் என நினைவு. மேஜிக்கல் ரியலிசத்தை புனைவில் கொண்டு வந்த முன்னோடிகளில் கண்ணனுக்கு முக்கியப் பங்குண்டு. கொள்ளிடக்கரையில் நான் அவனுடன் பனங்கள் அருந்தி பல விஷயங்களை உரையோடுவோம். ஏகப்பட்ட தகராறுகள் நடந்தததுண்டு. சில மாதங்கள்/வருடங்கள் பேசாமால் இருந்திருக்கோம். ஆனால் ஒரு கட்டத்தில் அபத்தம் எனப்புரிந்து கொண்டு உரையாடலை எடுத்துச் சென்றான். சில வாரங்களாக அவன் நல்ல நிலைமையில் இல்லை எனத் தெரியும். போன மாதம் பேசினேன். கொள்ளிடக்கரையில் நாம் உட்கார்ந்து பேச வேண்டும் என்றான். நாளை அதே கொள்ளிடக்கரையில் அவன் மட்டும் தனியாக தகன மேடையில் எரிக்கப்படுகிறான்..