சாந்தி சந்திரசேகரன்/அதே முகம்..!

முகத்தில் வயோதிகம் தொனிக்க, கண்களில் உணர்ச்சியற்ற ஒரு பார்வையுடன், ‘சிரிப்பு எத்தனை வராகன்?’ எனும் படியாய் சிரிப்பற்ற ஒரு முகம். பல ஆண்டுகளாய் அவனது கனவில் தோன்றி சுந்தரை இம்சிக்கும் அதே முகம்.
திடுக்கிட்டு முழித்தான் சுந்தர்.
“என்னங்க.. அதே கனவா?” இப்போது ரோகினிக்கு இது வழக்கமாகிவிட்டது.
“ஆமா ரோகினி. எப்பவோ.. எங்கேயா பாத்துருக்கேன். ஆனா நினைப்புக்கு வராம என்னைப் பாடாய் படுத்துது.” குரலில் அப்படி ஒரு ஏக்கம்.

“நீங்க ஓவியர் தானே.. அந்த முகத்தைப் படமா வரஞ்சீங்கன்னா.. அடுத்த வாரம் உங்க பாட்டி வீட்டை விக்கப் போறாேமில்ல.. அங்க யாருக்காச்சும் அப்படி ஒரு முகம் பரிச்சயமான்னு விசாரிப்போம். விடுங்க” என்று உரக்கப் பேசியவள்.. ‘பேரில்லாமல்.. விலாசமில்லாமல்.. அவர் பற்றி துளியும் விவரமில்லாமல் என்னென்று யாரிடம் விசாரிக்க?’ என்று மனதிற்குள் விசனப்பட்டுக் கொண்டாள்.

ஒரே வாரத்திற்குப் பிறகு பாட்டி வீட்டில்,
“சாமானெல்லாம் ஒதுக்கியாச்சி சுந்தர். கொஞ்சம் விலை உசந்த பொருள்களையும், உனக்குத் தேவைப்படலாம்ன்ற சாமான்களையும் மட்டும் கொல்லைல இருக்குற சாமானுங்க வைக்கிற அறைல வச்சிட்டோம். பாத்துக்கப்பா” வீட்டைப் பராமரித்த ராவுத்தர் அண்ணன் தெரிவித்தார்.
அந்த அறையைப் பார்வையிட்ட சுந்தர் முகத்தில் அதிர்ச்சி. அந்த மரச்சட்டத்திலிருந்த கண்ணாடிக்குப் பின்.. தன் கனவில் இம்சித்த அதே ஓவியம்.
“ராவுத்தரண்ணே.. இது..?”
“நம்ம பள்ளிக்கூடத்து கணக்கு வாத்தியாரு தான் தம்பி. சின்ன வயசுல நீங்க வரஞ்சது தான். உங்க ஞாபகமா பாட்டி ப்ரேம் போட்டு வச்சாங்க.”
படிப்பே வரவில்லை என்று அடித்து .. அப்பா பாட்டி வீட்டுக்கனுப்ப, சோகத்தில் கண்ட இடத்தில் காண்பதைக் கிறுக்கித் தள்ளிய இவனின் ஓவியத் திறனைக் கண்ட அந்தக் கணக்கு வாத்தியார் தன் முகத்தை வரையச் சொல்ல, தன் திறனை தானே சுந்தர் அறிந்த தருணமது.
உயிரற்ற கண்கள் ஔிர, சிரிப்பற்ற அந்த உதடுகள் ஆயிரம் வார்த்தைகள் பேசின சுந்தரிடம். மற்ற யாருக்கும் தான்.. அது கேட்கவேயில்லை.

சாந்தி சந்திரசேகரன்/அதே முகம்..! – விருட்சம் நாளிதழ்

One Comment on “சாந்தி சந்திரசேகரன்/அதே முகம்..!”

Comments are closed.