
நள்ளிரவில் சேத்தன் புரண்டு புரண்டு படுத்தான். என்ன கனவு அது? யாரு அது? ஒரு ஆணோட முகம் என்று தெரிந்தது. ஆனால் ஏன் இவ்வளவு விகாரமாய்?
நினைத்து கொண்டே தூங்கிவிட்டான். திடீரென அவன் அம்மா பாக்கியம் எழுப்பினாள். “டேய் சேத்தன் எழுந்திரு. மணி எட்டு. இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு உங்கப்பா ஊரிலிருந்து வருவதற்கு.”
“சீக்கிரம் ரெடியாகி ஸ்டேஷனுக்கு போடா. அவர் கூட அவர் நண்பர் ஒருத்தர் வேற வருகிறாராம்.”
சேத்தன் வாரிசுருட்டி கொண்டு எழுந்து அரைமணி நேரத்தில் கிளம்பி விட்டான். காரை எடுத்தான்,” டேய் ஏதாவது சாப்பிட்டு போடா! ட்ரையின் லேட்டானா பசியோட இருப்ப “. என்று கூறி கொண்டே தட்டில் இரண்டு இட்லியை போட்டு மிளகாய்பொடி கலந்து வாசலுக்கு போனாள்.
சேத்தன் அவசரமாக அதை முழுங்கி விட்டு காரை ஸ்டார்ட் செய்து விரைந்தான். நல்ல வேளை ட்ரையின் அரை மணி நேரம் லேட்டாக வரும் என்று ஒலிபரப்பினார்கள்.
காரை பார்க் பண்ணி விட்டு பிளாட்பாரம் டிக்கெட் எடுத்து உள்ளே போய் காத்திருந்தான்.
அப்போது திடீரென கனவில் கண்ட அந்த முகம் கொண்ட ஆசாமி அவன் கண்ணெதிரே வந்து கொண்டிருந்தார்.
சேத்தன் அதிர்ச்சியுடன் அவரை பார்க்க அவர் முகத்தில் இருந்த புன்சிரிப்பு மறைந்தது. தூரத்தில் வண்டி வரும் சத்தம் சேத்தனுக்கு என்ன பண்ண என்று புரியவில்லை.
வண்டி சைரன் ஒலிக்க கிட்டத்தட்ட அவன் நிற்கும் இடம் வரை வந்தாச்சு. அந்த கோரமான முக ஆசாமி திடீரென ஓடி இஞ்சின் முன்னால் குதித்தார்.
சேத்தன் உட்பட எல்லோரும் அதிர்ச்சியில் பேச்சு மூச்சின்றி நின்றார்கள்.
சிறிது நிமிடங்களில் வண்டி அங்கயே நின்றது. போலீஸ், மக்கள் எல்லாரும் அந்த ஆசாமியை வெளியில் எடுக்க எத்தனித்தார்கள். ஆனால் அவரை காணவில்லை. இஞ்சினுக்கு முன் குதித்தவர் மாயமாக மறைந்துவிட்டார்.
“சேத்தன்! சேத்தன்! டேய் என்னடா ஆச்சு? இவ்வளவு நேரமா உன்னை கூப்பிடறேன்! நீ எந்த ஞாபகத்தில இருக்கே?”
தன் அப்பாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். உடனே அவரை இறுக்கி அணைத்தான்.
“உனக்கு ஒண்ணுமில்லையே அப்பா”!! என்று மகன் புலம்புவதை கேட்டு அவரும் அவனை அணைத்து கொண்டு” என்னடா ஆச்சு? ஒரு வாரம் தானே வெளியூர் போனேன். அதுக்குள்ள சின்ன பையனாட்டும் என்ன புலம்பல் ? நான் எப்பவும் டூர் போறது தானே!!” என்று அவனை சமாதானப்படுத்தினர்.
அப்ப தான் கவனித்தான் அம்மா சொன்ன நண்பர் அப்பா கூட இல்லை என்று.
“அப்பா! உங்க நண்பர் எங்கப்பா? அம்மா சொன்னாங்களே? “
” அவர் வரலப்பா, சேத்தன்!! அவரால இனிமே எங்குமே வர முடியாது. அவர் இறந்து இரண்டு நாட்கள் ஆயாச்சு. என் கூட வருவதற்கு முன் அவசரமாக வேலை விஷயமாக எதோ ஊருக்கு போய்ட்டு வந்து விடுகிறேன் என்று போனார்.”
“டிக்கெட் கிடைக்காமல் ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில் அவசரமாக ஏற போனபோது கால் வழுக்கி கீழ விழுந்து விட்டார். அதற்குள் ட்ரையின் கிளம்பிடுசு.”
” யாரோ செயின் பிடிச்சு வண்டியை நிறுத்தி அவரை வெளியே எடுக்க பார்த்தார்கள். நல்லா அடிபட்டு முகம் சிதைந்து விட்டது.”
“எனக்கு தகவல் கிடைத்தது போய் பார்தேன். பாவம் அவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன். என்ன பண்ண விதிக்கு மீறி எதுவும் நடக்காது.
சேத்தன் அப்பாவின் பேச்சை கேட்டு மறுபடியும் அதிர்ச்சியாகி திரும்பி அந்த மர்ம ஆசாமி விழுந்த இடத்தை பார்த்தான். அங்கு ஒன்றுமே நடக்காத மாதிரி எல்லாம் நார்மலாக இருந்தது. எல்லோரும் அவரவர் லக்கேஜை தூக்கி கொண்டு ஓடி கொண்டிருந்தார்கள்.

One Comment on “சந்தியா ஷங்கர்/”அமானுஷ்யம்””
Comments are closed.