
வைபவ் படீரென்று விழித்துக் கொண்டான். பதினெட்டு டிகிரியில் ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. தெப்பலாய் வியர்வையில் நனைந்திருந்தான்.
அந்த முகம், அந்தக் கண்கள் இப்போதும் நடுங்க வைத்தது. அந்த மரம் சரிந்து கொண்டே இவனை நோக்கி வந்து கொண்டேயிருந்தது. திடீரென்று மரத்தில் அந்த முகம் முளைத்தது. முகம் அருகே, வெகு அருகே நெருங்கிக் கொண்டேயிருந்தது. அந்த விழிகள் அவன் அப்பா நக்கீரனின் விழிகள் .
‘உண்மையை ஒத்துக்கப் போகிறாயா? அல்லது என்னிடம் வந்து விடுகிறாயா?’ அந்த பிரம்மாண்ட மரம் இவன் மேல் சரியும் அந்தக் கடைசி நொடியில் விழிப்பு வந்தது. நக்கீரன் தொடர்ந்து பதினைந்து நாட்களாகக் கனவில் வந்து பயமுறுத்துகிறார்.
வேலைக்காரச் சிறுமி காணாமல் போன வழக்கில் இவனுக்கெதிரான சாட்சிகளை விலைக்கு வாங்கியாச்சு. இவனுக்குச் சாதகமாய் இரண்டு நாட்களில் தீர்ப்பு வரும் வேளையில் செத்துப் போன கிழவன், அதான் இவன் அப்பன் இப்படிக் கனவில் வந்து பாடாய்ப் படுத்துகிறான்.
பால்கனியிலிருந்து அந்த மரத்தைப் பார்த்தான். அப்பனுக்குப் பிடிச்ச மரமென்று அவன் சாம்பலை இங்கே புதைத்திருக்கக் கூடாது. அத்தோடு… விசுவாசி கார்க்கோடகன் அப்போதே இங்கே வேண்டாமென்று சொன்னான். நான்தான்….தலையை உதறிக் கொண்டான். நாளை இரவு இங்கிருந்து மாற்றச் சொல்லணும்.
உள்ளே வந்தவன் இரண்டு பெக் உள்ளே போக நிம்மதியாக உறங்கினான். கனவேயில்லாத உறக்கம். பத்து மணிக்குக் கண் விழித்து பால்கனிப் பக்கம் வந்தவன் அதிர்ந்து போனான். நீதிபதி நடுநாயகமாய் அமர்ந்திருக்க மோப்ப நாயும் காவல்துறையும் அந்த இடத்தைத் தோண்டிக் கொண்டிருந்தது.
அறைக்கதவு படபடவெனத் தட்டப்பட்டது. கார்க்கோடகன். ‘ஜட்ஜ் அய்யா கனவுல உங்க அப்பா வந்தாராம்!’

சூப்பர் வசந்தா
வாழ்க வளமுடன்