அர்ஜூனன்/மீண்டும்..

“ஏங்க.. உங்கப்பாவை பார்த்தீங்களா?.. எந்நேரமும் எந்த உணர்ச்சியும் காட்டாம வெறுத்துப் போய் உட்கார்ந்திருக்கார்..” அர்ஜுனின் மனைவி சித்ரா சொன்னாள்.
“ஆமா.. சித்ரா.. பணிஓய்வு பெற்ற ஆறு மாதங்களிலேயே மனைவியையும் இழந்து.. அந்த துக்கத்தில இருந்து வெளிவரத் தெரியாம இருக்காரு..”
“அதுக்குனு அவரை அப்படியே விட்டுடுவீங்களா..?”
அர்ஜுன் அவரது அறைக்கு சென்று எட்டிப் பார்த்தான். அவனது தனது
ராகவன் ஜன்னல் வழியாக வெறுமையான தெருவையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“அப்பா.. நம்ம வீட்டுத் தோட்டம் அம்மா போனபிறகு பராமரிப்பு இல்லாம களை மண்டி கிடக்கு.. எனக்கும் கவனிக்க நேரமில்ல..” என்றான்.
ராகவன் ஒரு நிமிடம் யோசித்தார். மனைவி விஜயாவுக்கு தோட்டம் வைத்து, பூச்செடிகள் வைப்பதில் மிகுந்த விருப்பம். இப்போது அங்கு செடிகளுக்கு நீரூற்றாமல், பூக்களும் பறிக்கப்படாமல் வாடிக் கிடந்தன.
‘என்னை கைவிட்டுட்டீங்களே..?’ என்று மனைவி விஜயா கேட்பதுபோல இருந்தது.
வேகமாக சென்று தோட்ட வேலைகளில் அவர் இறங்க..
“தாத்தா.. இந்த செடியை நான் நடட்டுமா?..” என்று பேரன் அருகில் வந்து நின்றான்.
தலைமுறை தாண்டிய கைகள் இணைய, பல மாதங்கள் தொலைந்து போன புன்னகை ராகவன் முகத்தில் மெதுவாக பூத்தது.

சந்தியா ஷங்கர்/”அமானுஷ்யம்” – விருட்சம் நாளிதழ்