
14/11/25 அன்று அழகியசிங்கரின் இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த மூன்றாவது கவிதை:
இன்றுதான் நினைவுக்கு வந்தது
நேற்று ‘அந்த’ நாள் என
கைகள் கசகசக்க
பூச்சுமை தலையை அழுத்த
புகை கண்ணை குருடாக்க
அரை மயக்கத்தில்
புரியாத மொழியில்
திணிக்கப்பட்ட சத்தியங்களை
ஏற்றுக் கொண்ட நாள்
ஆண்டுதோறும்
துக்கங்களை சுமந்து வந்து
சுய பரிதாபத்தை தோற்றுவித்து
மனதை ரணமாக்கிப் போகும் நாள்
அக்னியின் சாட்சியை
நீதிமன்றம் ஒதுக்கியும்
நெஞ்சில் மூண்ட தீயை
நெஞ்சுரம் அணைத்தும்
மனக் கொப்புளங்களை கீறி
சீழ் வடிய வைக்கும் நாள்
இழந்த ஓர் துணைக்கு ஈடாக
ஓராயிரம் தோழமைகள் பெற்றும்
உயரங்கள் தாண்டியும்
காயங்கள் காய்ந்தும்
தோல் தடித்தும்
நெஞ்சம் நிறைந்தும்
விடிந்ததும்
ஒரு விநாடி
அடி வயிற்றை சில்லிட வைக்கும்
‘அந்த’ நாள்
நேற்று முதன் முதலாக
மறந்தே போயிற்று
27/1/1993
“வத்ஸலாவின் தேர்
ந்தெடுத்த கவிதைகள்” (தொகுப்பு)
