
14 11. 25 அன்று விருட்சம் கவியரங்கத்தில் புஷ்பா விஸ்வநாதன் வாசித்த கவிதை-1
குழலினும் இனிய மழலைச்சொல் கேட்டு
குழையாத மனமும் உண்டோ இங்கே
குறும்புகள் செய்யும் குழந்தைகள் தானே
குறையாச் செல்வம் வீட்டில் நமக்கு
குழந்தைப்பருவம் குறையிலாப் பருவம்
சூதும் வாதும் அறியாப்பருவம்
பொய்யும், பொறாமையும் அண்டாப் பருவம்
மெய்யாய் மகிழும் உன்னதப் பருவம்
“எந்தக் குழந்தையும் நல்ல குழநதைதான்
மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்க்கையிலே”
அன்றே கண்ண தாசன் சொன்ன
அர்த்தமுள்ள வார்த்தைகள் இவைதாம்
பெற்றபிள்ளைக்குச் சோறும், நீரும்
உடுக்க உடையும், படுக்க இடமும்
கொடுத்து வளர்க்கும் பெற்றவர்கள்
ஊட்டி வளர்க்கணும் அன்பையும் அறத்தையும்
நாட்டுப் பறறையும் நல் வீரத்தையும்
பாசம், கருணை, மனித நேயத்தையும்
புகட்டி வளர்க்கணும் இப்பருவத்திலே
இன்றைய குழவி நாளைய குடிமகன்
இன்று வீட்டில் கற்கும் பழக்கம்
நாளை ஆகிடும் அனுபவமாக
அதற்குப்பின்,
நல்லதொரு சமூகம் தானாய் மலரும்
நாடும் ஆகிடும் வல்லரசாக.
