
நீ எங்கிருந்தாலும் இம்முக நூல் பக்கத்தை வாசித்து விடுவாய் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன் எனதன்பு மகளே. வாசிக்கத் தொடங்கும் முன் உன் தயக்கத்தையும், பயத்தையும் ஒரு ஈரத்துண்டை உதறுவது போல் உதறி விடு. நீ காதலிப்பவன் மீது எந்த அளவிற்கு உரிமையும், தோழமையும் கொண்டிருக்கிறாயோ அதே தோழமையுடன் என்னிடமும் மனதைத் திற மகளே. உன் சுயத்தை அங்கீகரிக்கும் தந்தையான எனக்குத் தைரியமாக போன் செய். நான் உன் விருப்பத்தின் பற்றுக் கோலாக இருக்கிறேன்.
நான் விரும்புகிறபடி, துள்ளித் திரியும் சிறுமியாகவே இன்னும் நீ இருந்து விட முடியாது தான். நீ வீட்டை விட்டு கிளம்பிய பிறகுதான் உன்னுடையவைப் பிஞ்சுக் கால்கள் அல்ல, அவற்றில் வலு ஏறியிருக்கிறது என்பதை உணர்கிறேன்.
உலகை முழுசாகப் பார்க்கும் பேரார்வத்துடன் விரிந்தபடியே இருக்கும் உன் கண்களும், புதிரான ஒன்றைக் காணும் போது அதில் தோன்றும் வியப்பார்வமும், மருட்சியும், ஒரு பூம் பிஞ்சைப் போல் முன் துறுத்திய மூக்கும், விடியலுக்கு முந்திய கதிரவனைப் போன்று ஒளி பொங்கும் உன் முகமும் சர்வ நிரந்தரமாக நான் மட்டுமே ரசிப்பதற்கானது அல்ல தான். அது அப்படியே நீடிக்க வேண்டுமென நான் பேராசைப் படக்கூடாது தான்.
ஆனாலும் மகளே நீ சட்டென்று ஒருநாள் என் கண்ணில் இருந்து அகல்வதை எப்படித் தாங்குவேன்.
நான் எப்போதும் உன் தோழனாக இருக்க வேண்டுமென்பதே விருப்பம் ஆனாலும் நானும் ஒரு சமூகத் தகப்பன் என்ற ஒப்பனையை அவ்வப்போது பூசிக் கொண்டதற்காக என்னை மன்னித்து விடு மகளே மன்னித்து விடு. என் மீது அச்சம் கொள்ளும்படியான முகத்தை நான் எப்போதாவது உன்னிடம் காட்டியிருந்தால் மன்னித்து விடு.
எங்கிருந்தாலும் மகளே வந்து விடு. இல்லையென்றால் உன் காதலனுடன் நீ இருக்குமிடம் சொல் வந்து பார்க்கிறேன். அதுவும் கூட வேண்டாம். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று ஒற்றைக் குறுஞ்செய்தி அனுப்பினாலும் போதும். என் மனக்கொதிப்பு அடங்கும்.
நீ பிறந்த மறுநொடியில், காற்றில் ஆடும் மலரைப் போல என் கைகளில் படபடத்தாய். அப்போது வியந்தேன் ஒரு அழு குரலில் இத்தனைப் பேரின்பமா.? அன்று முதல் நீ என்னிடம் சொல்லாமல் சென்றுவிட்ட இந்த நாள்வரை பதினேழு ஆண்டுகளில் நாம் பிரிந்திருந்த நாட்களை நம்மிரண்டு கை விரல்களுக்குள் அடக்கி விடலாம்.
உன்னைஅணுவணுவாய் ரசித்தேன் மகளே ரசித்தேன். ரசிப்பு திகட்டி
விடக் கூடாதென்று என்னுள் ஏக்கத்தை பதியச் செய்வதற்காகவே திட்டமிட்டுப் பிரிந்தாயோ..?
உன் பொருட்டு நான் செய்தவற்றையெல்லாம் பட்டியலிட்டு இதையெல்லாம் எப்படி மறந்தாய் என்று உன்னிடம் கேட்க மாட்டேன்.
நான் உனக்குச் செய்தது அத்தனையும் கடமை. ஆசையாசையாய் விரும்பிச் செய்தது. . ”மகளுக்காக ஏன் இத்தனை வருத்திக் கொள்கிறாய்..?” என்று பிறர் கேட்டபோது அவர்களது அறியாமை கண்டு சிரித்தேன். மகளுக்காக எத்தனை பட்டாலும் அது உள்
தகப்பனான எனக்குச் சுகமே.
உனக்கு முடி வெட்டுவதை நிறுத்திய பின் நாம் வாரந்தோறும் தீபாவளி கொண்டாடினோம். எண்ணையில் நனைத்த என் உள்ளங்கை விரல்கள், உன் கூந்தலில் மீன் குஞ்சுகளைப் போல நீந்தின. அக் குளுமை, உன் கூந்தலில் நிலைத்தது போலவே என் விரல்களிலும் தங்கி விட்டது. நீ பிரிந்த வேதனையில் வழிகிற கண்ணீரைத் துடைக்கும்போது, என் விரல்களில் உன் கூந்தலின் வாசம் மணக்கிறது.
சிலர் உன் கூந்தலைப் பொறாமையுடன் பார்க்கும் போது உன் கண்கள் நான் நிற்கும் பக்கம் பெருமையுடன் திரும்பும்.
உன் தலைமுடியைக் கூட அப்படிப் போற்றியவன் நான். எனக்கு இப்போது வேண்டியதெல்லாம் நீ பாதுகாப்பாக இருக்கிறாயா என்பது தான். திரும்பத் திரும்பச் சொல்கிறேன் உன் விருப்பங்களை மதிக்கிறேன். உன் அம்மா, வாயால் உன்னைத் திட்டியிருந்தாலும், “புத்தி கெட்ட கழுத போனது தான் போனா கழுத்துக்குச் செயினும், காலுக்குக் கொலுசும் போட்டுட்டுப் போயிருந்தாலாவது போற எடத்துல கைக்கு ஒதவியா இருந்திருக்குமே” என்று தான் புலம்பிக் கொண்டிருக்கிறாள். நீ பத்திரமாக வந்து விட்டால் போதும் உன் விருப்பத்தை நிறைவேற்றுவதில் அவளும் உறுதியாக இருக்கிறாள். எங்களை நம்பு மகளே நம்பு.
“தேடுறதுக்கு உருப்படியான வழியப் பாக்குறத விட்டுட்டு, இப்போ எதுக்கு வேண்டாத வேலை செஞ்சிட்டு இருக்கீங்க” என்று கணினியில் உட்காரும் முன் சொன்ன மனைவியிடம், எதற்கும் இதை வாசித்துக் காட்டி விடலாம் என்று பின்னால் திரும்பி “கீதா” “கீதா” என்று குரல் கொடுத்தான்.
மறுகுரல் ஏதும் இல்லை. பதட்டத்துடன் எழுந்து பால்கனிப் பக்கம் போனான். இரண்டு நாட்களாகப் பதினேழு வயதுப் பெண்ணைக் காணவில்லை என்ற தவிப்பு ஒரு புறமென்றால், அதற்காக நிலை குலைந்து போன கீதாவைத் தேற்ற வேண்டிய பொறுப்பும் அவன் மீது
பெருஞ்சுமையாக இறங்கி விட்டது. மாயா சாப்பிடுவதற்காக கடையில் வாங்கி வந்த பொட்டலங்கள் அப்படியப்படியே எறும்பேறிக் கிடக்கின்றன. பைத்தியத்தைப் போல எண்ணுக்கு மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருக்கிறாள் அது ஸ்விட்ச் ஆப் எனத் தெரிந்தும்.. அவனுக்கு வரும் ஒவ்வொரு அழைப்பையும் முதல் சிணுங்கலிலேயே பாய்ந்து எடுத்துப் பார்க்கிறாள்.
இரவெல்லாம் அவளும் தூங்குவதில்லை, அவனையும் தூங்க விடுவதில்லை. தன்னையறியாமல் உட்கார்ந்த நிலையில் தூங்கும் அவனை எழுப்பிக் கேட்கிறாள் –
“ஓடுகாலிக்குப் பெறந்ததது ஓடுகாலியாத்தான இருக்கும்ன்னு பேசுவாங்களே.’
பதினெட்டு வருடங்களாகத் தோன்றாத சந்தேகங்கள் அவளுக்கு இப்போது எழுந்து கொண்டிருக்கின்றன. இதுவரைப் பேசாத வார்த்தைகளை கூர்மை தீட்டித் தீட்டிப் பேசிக் கொண்டிருக்கிறாள்.
“இங்க பாரு கீதா, நீ எங்கூட ஓடிவரல. நான் தான் ஒன்னக் கூட்டிட்டு வந்தேன். அதே மாதிரி நம்ப மாயாவ நெஜமாவே காதலிக்கிற ஒருத்தன் கூட்டிட்டுப் போயிருந்தா பரவாயில்ல. அவளப் பத்திரமாப் பாத்துக்கிட்டாப் போதும். எனக்கிருக்கிற பயமெல்லாம்
சின்னஞ்சிறுசா கோழிக் குஞ்சப் போல அவங்க எங்கயாவது போயி அடைக்கலமா நிக்க, அந்த நிர்கதியான நெலையில யாராவது ஏதாவது
பண்ணிடக் கூடாதேன்னு தான் பயப்பட்றேன்.
நீயும், நானும் ஓடின காலத்துல ஜனங்களுக்கு ஜாதிப் பாசம் இருந்தது தான். ஆனா அதையும் மீறி ஜனங்க நியாயத் தர்மத்துக்குக் கட்டுப் பட்டவங்களா இருந்தாங்க. பாவம் புண்ணியம் பாத்தாங்க. ஆனா இன்னக்கி மத்தவங்க ஒதவிக்கிக் கைகொடுக்க யாரும் தயாரா இல்லை. அப்பிடியே இருந்தாலும் பின்னாடி என்ன வம்பு வந்து சேருமோன்னு பயப்பட்றாங்க. இங்க, ஒவ்வொருத்தனும் ரௌடித் தனத்துக்கும், கொள்ளையடிக்கிறதுக்கும் தன் ஜாதியைக் கைத்தடியா தூக்கிட்டு அலையுறானுங்க. அந்தக் கைத்தடிய காதலுக்கு எதிராப் பிடிக்கிறானுக. சொந்த ஜாதியக் காப்பாத்துற புனிதக் கோல் மாதிரி காட்டிட்டு திரியிறானுக. எங்க சாதிப் பொண்ணு, எங்க சாதிப் பையன்னு கண்ட எச்சக்கல நாய்ங்களும் தலையிடாம இருந்துட்டாலே போதும். நம்ப பிள்ளங்கள நாம பாத்துக்கலாம். நாம தெருவுல நின்னாக்கூடப் பரவாயில்ல. அதுங்களப் பாதுகாப்பா வைச்சிக்கலாம். ஒண்ணுக்கும் ஆகாதவனுங்க பேச்சுக்காக மான அவமானத்தப் பத்திக் கவலப்படத் தேவையில்ல கீதா. நம்ம புள்ளங்க பத்திரமா திரும்பி வந்துட்டாலே போதும்.”
எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அருள் நல்ல பையந்தாங்க. நம்ப பொண்ணு தான். எல்லாத்துலயும் போலவே இதுலயும் அவசரக் குடுக்கையா இருந்துருக்கா. ஒரு பொட்டப்புள்ளக்கி இவ்வளவு எடந்தரக்கூடாதுன்னு தலபாடா அடிச்சிக் கிட்டேன். ஆம்பளப் பிள்ள மாதிரி வளக்கணுன்னு சொல்லிச் சொல்லி வளத்தீங்க. கடசிக்கி எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கா பாத்திங்கல்ல.”
“நீயும் நானும் சண்டை போட்டுக்கிற நேரமில்ல இது. அவங்க போனது கூடத் தப்பில்ல. ஆனா “
“நீயெல்லாம் என்னய்யா ஒரு அப்பன். நம்ம பொண்ணு ஒருத்தனக் கூட்டிட்டு ஓடி இருக்கா. வெக்கங்கெட்டுப் போயி தப்பில்லன்னு வேற சொல்ற. நீ பேசுறதப் பாத்தா அப்பிடியே எனக்கென்னான்னு இருந்துருவ போல இருக்கே. ஒனக்கு இந்தப் புத்தி இருக்குறதுனாலத் தான் அவ துணிஞ்சி ஓடியிருக்கா”
“எனக்கு நம்ம மாயா ஒரு பையனோடப் போனதுல வருத்தமில்ல கீதா. ஆனா அவ ஒரு பையன விரும்புறத மனசத் தெறந்து நம்ம கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு பக்குவப்படாத தாய் தகப்பனா இருந்துட்டமேன்னு தான் வருத்தம்”
“ம்க்கும் ஒங்க ஆத்த மாட்டாத தனத்துக்கு என்ன ஏன் கூட்டு சேக்குறீங்க. நீங்க ஆயிரந்தான் சொன்னாலும், ஒங்க பொண்ணு பண்ணுனத என்னால ஏத்துக்கவே முடியாது. நானும் ஒங்களோட ஓடி வந்தவ தான். ஆனா ஒங்க பொண்ணப் போல ஒடம்பு தெனவெடுத்து வரல. எங்க வீட்டுல என்ன இன்னொருத்தனுக்குக் கட்டி வைச்சிரக் கூடாதேன்ற பயத்துல தான் வந்தேன். பொண்ணுக்கு பதினேழு வயசுலயே ஒடம்பு கேக்குதா”
“சீ, வாய மூடு. வீட்ட விட்டுப் போனாலே அதுக்காகத் தான் போனதா அர்த்தமா’
“எங்க வாய அடைக்கிறதுக்குன்னா வேகமா வந்துருவிங்களே. எம் பொண்ணுன்றதுக்காகத் தல மேல வைச்சிக் கொண்டாட முடியாது அவள. வீட்ட விட்டுப் போனா நாலா விதமாவுந்தான் யோசிச்சுப் பாக்கணும். இந்தக் காலப் பொண்ணுங்களப் பத்தி என்ன தெரியும்
ஒங்களுக்கு”
கீதா, சர்வ சகஜமாகச் செய்த வாதத்திற்கு எதிர் வாதம் பேசி விட்டான் என்றாலும் அவன் தலை ஓட்டைத் திறந்து நெருப்பை அள்ளிக் கொட்டியது போலிருந்தது அவனுக்கு.
கீதா தொடுத்த முதல் தாக்குதலைத் தொடர்ந்து தனக்குள்ளேயே ஒரு விவாதம் நடத்திப் பார்த்தான். பல குழப்பங்களுக்குப் பிறகு –
அப்படியும் பார்த்தால், பதின் மூன்று வயதில் பருவம் அடைந்த தன் மகள், பதினேழு வயது வரை நான்காண்டுகளாக உடல் தேவையை மறுத்தே தான் வந்திருக்கிறாள். தேவை உண்டோ இல்லையோ உடல் பற்றிய மர்மத்தை விலக்கிப் பார்க்குமாறு குறுகுறுப்பூட்டிக் கொண்டே இருக்கின்றன தெருப் போஸ்டர்கள் முதல் தொலைக்காட்சி வரை. அந்தக் குறுகுறுப்பூட்டும் விரல்களை எத்தனை ஆண்டுகளாகத் தான் தட்டி விட்டுக் கொண்டே இருக்க முடியும்.?
அதற்காகச் சட்டம் அனுமதிக்கும் காலத்திற்கு முன்பே கூடலாமா? அவசரமாகப் பிள்ளையைப் பெற்றுக் கொள்ள முடியுமா?.
தன் அம்மாவுக்குப் பதினைந்து வயதில் திருமணம் ஆனது. அவளுக்கு பதினேழு வயது ஆகியிருந்த போது, தாய்க்கு இரண்டாவது பிள்ளையாகப் பிறந்து விட்டான் அவன்.
இன்றைக்கும் அதுபோல் முடியுமா.? ஒரு பெண் படிக்க வேண்டியிருக்கிறது. தன் வாழ்க்கைக்கான ஆதரத்தைத் தேடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. தன் அம்மா, காலமெல்லாம் அப்பாவை மட்டுமே நம்பி இருந்தது போல் இந்தக் காலத்தில், ஆண் பிள்ளையை மட்டுமே முழுசாக நம்பி பெண்ணைக் கட்டிக் கொடுத்து விட முடிகிறதா? அப்படியே நம்பிக்கைக்கு உரிய ஒருத்தனாக இருந்தாலும் தன் பிள்ளைக்குப் படிப்பிப்பதற்காகவாவது ஒரு தாய் படிக்க வேண்டியிருக்கிறதே? உடல் தன் தேவையை நிறைவேற்றும் முன் இப்படியெல்லாமா யோசித்துக் கொண்டிருக்க முடியும்.?
கால மாற்றம் இயற்கையான தேவையை உணர்வதில்லை. உடலின் இயற்கையான தேவை சட்ட விதிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதில்லை.
உடல் ஒரு பேரின்பம் மட்டுமல்ல, அதன் தேவைகள் நிறைவேறாத போது அதுவொரு பேரவஸ்த்தையும் கூட.
“கீதா.. கீதா” காற்று அதிராமல் குரல் எழுப்பிப் பார்த்தான். மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தான். இல்லை. அவள் போனுக்கு அடித்துப் பார்த்தான். மணி நீளமாக அடிக்கிறது. ஆனால் பதில் இல்லை. சட்டையைப் போட்டுக் கொண்டு தெருமுனைக் கடைக்கு
வந்தான்.
கடையில் விசாரிக்கலாமா வேண்டாமா? என்பதில் ஒரு குழப்பம். மாயா வீட்டை விட்டுப் போன நிமிடத்தில் இருந்து அவனைப் பார்க்கும் அக்கம் பக்கக் கண்கள் சாதாரணமாகவே பார்த்தாலும் “என்னாச்சி. ஒன்பொண்ணு எவனையோ இழுத்துட்டு ஓடிட்டாளா..?” என்று வன்மப் புன்னகையுடன் பார்ப்பது போலவே தோன்றுகிறது. மாயா வீட்டில் இல்லை என்பது தெரிந்து பேசாமல் இருக்கிறார்களா.? இல்லை தெரியாமலேதான் இருக்கிறார்களா.?
அவள் இருக்குமிடம் ஒரு இனிய அதிர்வைத் தருவது போலவே அவளது இன்மையும் பெரும் வெற்றிடத்தை உணர்த்தவே செய்யும். பள்ளி முடிந்து பேருந்தை விட்டிறங்கினால் நேராக வீட்டிற்கு வருவதில்லை. அங்கங்கே நின்று பேசி விட்டுத் தான் வருவாள். “நாம்பளும் இத்தினி வருசமா இங்க குடியிருக்கோம். நம்ப பேர யாருக்காச்சும் தெரியுதா..? இன்னாரு பொண்ணு மாயான்னு மாயா அம்மா, மாயா அப்பான்னு தானே
சொல்றதுக்குப் பதிலா இருக்கு நம்ப அடையாளம்”
“பிள்ளைக்கிப் பேர் வாங்கித் தர முடியாத அப்பன்மாருங்க எல்லாம், தன் பைக்குலயும், கார்லயும் அதுங்க பேர ஒட்டி வைச்சிட்டு பெருமை காட்டுறாங்க. நம்ப வீட்டுல, பொண்ணால அப்பா அம்மா பேரு வெளங்குனா அதப் பாத்துச் சந்தோசப்பட்றதுக்குப் பதிலா ஏன்
குத்தமா பாக்குற?
“அப்பா…..அம்மாவுக்குப் பொறாமைப்பா. அவங்களுக்கு என் அளவுக்குப் பிரண்ட்ஸோ, பேரோ, ரெப்புடேஷனோ இல்லேன்னு பொறாமை.”
“எனக்கு என்னடீ பொறாமை. ஒரு பொண்ணு பேரு நாலுபேர் வாயில பட்றது நல்லதில்லேன்னு சொல்றேன். இப்பிடித் துடுக்குத் தனமாவே பேசிட்டுத் திரியிற. இன்னொருத்தன் கையில உன்னப் பிடிச்சித் தரணுமேன்ற பயமே இல்லாம, வெத்துப் பெருமையில சந்தோசப்பட்டுட்டு இருக்காரு இந்த மனுசன். கடசியில இது எங்க வந்து முடியப்போகுதோ தெரியல.?”
கீதா சொன்னபடியே நடந்து விட்டதோ.? தான் தலையிடாமல் இருந்த மாயாவின் அதிகப்படியான சுதந்திரமே அவளை இன்னொரு விளிம்பிற்குக் கொண்டு போய் நிறுத்தி விட்டதோ.?
அவன் கைபேசி முணங்கியது. கீதா தான் அழைத்தாள்.
“எங்க போன கீதா. இப்போ ஒன்னோடயும் எனக்குப் பெரும்பாடாப் போயிருச்சி”
“போனை எடுத்தவுடனே லபலபன்னு பேசாதிங்க. எங்க இருக்கீங்க.சீக்கிரமா வீட்டுக்கு வாங்க?”
“பக்கத்துல தான். மளிகைக் கடையில. மாயா தகவல் எதாச்சும் உண்டா? போன்ல கெடைச்சாளா?”
“கொஞ்சம் நல்ல செய்தி தான். வீட்டுக்கு வாங்க சொல்றேன்”
”என்ன செய்தி சொல்லு. நானும் எப்பிடித் தவிச்சுக் கெடக்குறேன் தெரியுமில்ல.?”
“அய்யோ ஒங்க அவசரப் புத்தியில… என்னதான் சொல்றதோ போங்க. இந்த அவசரப் புத்தி தான ஒங்க புள்ளக்கும் பத்தியிருக்கு. நேர்ல வந்தாத்தான் புரியும்படியா சொல்ல முடியும்.”
“சரி சரி போன்லயும் வம்பு வளக்காத. வையி. வர்ரேன்.’
கதவுக்கு எதிரே கீதாவுடன் கருப்பான ஒரு பெண் நிகு நிகுவென நின்றிருந்தாள். வயதைத் தீர்மானிக்க முடியவில்லை. அவள் முகத்தில் ஆயிரமாண்டுகளாக சிற்பத்தில் உறைந்த பாவம். பரக்கப்பரக்கப் பார்த்தாள். நொடிக்கொரு தரம் தெருப்பக்கமும் பார்த்துக் கொண்டாள். சுருட்டிப் பிடித்த கர்ச்சீப் ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாறிக்கொண்டே இருந்தது.
கதவைத் திறந்து நாற்காலியை எடுத்துப்போட்டு உட்காரச் சொன்னான்.
“இல்லே. பரவாயில்ல. இருக்கட்டும்”
இவள் யாரென்ற கேள்வியுடன் கீதா முகத்தைப் பார்த்தான்.
இது அருளோட அக்கா.
“அருள்.?”
“அதாங்க.. நம்ப மாயா அழைச்சிட்டுப் போன.”
“சரி, சரி. ப்ளீஸ் ஒக்காருங்க சிஸ்டர். நீங்க உட்கார்ந்தாத்தான் பேசுறதுக்கு வசதியா இருக்கும்.”
நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்தாள். அந்த இடம் தனக்கு பாதுகாப்பற்றது என்பது போலிருந்தது அவளது உடல்மொழி. “இவங்க அருளோட மூத்த அக்கா. லிட்டில் பட்ஸ் ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க. திடீர்ன்னு எனக்குத் தோணுச்சி. அதாம் போயிப் பாத்தேன். இவங்களுக்குத் தெரிஞ்சு தான் அவங்க ரெண்டு பேரும் போயிருக்காங்க.”
அவன் முகக் குறிப்பைக் கவனித்து அதில் ஆத்திரம் பொடிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின் பேசத்துவங்கினாள். “சார் நீங்க யார்ட்டயும் உதவிக்குப் போயி நிக்கலேன்னு தெரிஞ்சதுக்குப் பின்னாடிதான் எனக்குத் தைரியம் வந்துச்சி. இதுக்கும் மேலயும் அனாவசியமா பிரச்சனை பண்ண மாட்டீங்கன்னு நம்புறேன்.’
“மாயா எங்க இருக்கா. பத்திரமா இருக்காளா?”
“பெத்தவங்க மனசு எனக்குப் புரியுது. இனி அவ ஒங்க பொண்ணு மட்டும் இல்ல. எங்கள நம்பி வந்தவ. அவளப் பத்திரமாப் பாத்துக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் இருக்கு”
“இவ்வளவு தெளிவாப் பேசுற நீங்க. ஏன் அவங்கள வெளியூருக்கு அனுப்பி வைக்கணும். முன்னாடியே எங்க கிட்ட வந்து பேசியிருக்கலாமே. இந்த ரெண்டு நாளா அனாவசியமான மன உளைச்சல் பட்டிருக்க வேண்டியதில்லையே?”
“இன்னேரம் எங்களப் பத்தித் தெரிஞ்சிருக்கும்ன்ல நெனைக்கிறேன். உங்கள நம்புற அளவுக்கு ஒங்க சாதிக்காரங்கள எங்களால நம்ப முடியுமா..?”
“நாங்க எங்க உறவுக்காரங்களையே மறந்துட்டோம். அப்பிடியிருக்க சாதிக்காரங்க கிட்டப் போயி நிக்கப்போறமா என்னம?
ஏதொண்ணுக்கும் கூட வேலை செய்யிற ப்ரண்ட்ஸுங்களத் தவிர எங்க யூனியனத் தவிர எங்களுக்கு வேற எதுவும் கெடையாது.?”
“நீங்க மறந்தாலும் நீங்க யாரு என்னான்னு உங்க சாதிக்காரங்க தெரிஞ்சு தான் வைச்சிருப்பாங்க. இன்னக்கி ஊரு ஒலகத்துல என்ன நடக்குதுன்னு பாத்துட்டு தான இருக்கிங்க. எங்களுக்கு அந்தப் பயம் இல்லாமலாப் போகும். அதான் அந்தத் தொல்லையே இல்லாத எடத்துக்கு அனுப்பி வைச்சிருக்கேன். அவங்க எங்க இருக்காங்கன்னு என்னோட அப்பா அம்மாவுக்குக் கூடத் தெரியாது”
“இப்போ எங்க இருக்காங்க.?”
“அதச் சொல்றதுக்கு முன்னாடி நீங்க எனக்கு ஒரு உறுதி தரணும். ’”
“இன்னுமா நீ எங்கள நம்பல.” அவன் குரல் சற்று உயர்ந்து, கடுமையானது.
“நாங்க உங்கள நம்பலைன்னா அதுக்குக் காரணம் நீங்க இல்ல. எங்களுக்கு நேர்ந்த பழைய அனுபவம் அப்பிடிப் பேசச் சொல்லுது. எந்தச் சூழ்நிலையிலயும் மாயாவையும் அருளையும் பிரிக்க மாட்டேன்னு சத்தியம் செய்யணும்.”
“நான் என்னிக்கும் என் மக விருப்பத்துக்குக் குறுக்க நிக்க மாட்டேன். இது சத்தியம். அவளை வளத்து ஆளாக்கி அவ விரும்புறவனோட சேத்து வைச்சிட்டா எங்கடமை முடிஞ்சது.”
“சரி இப்போ உங்களோட எல்லாக் கடமையும் முடிஞ்சதுன்னு வைச்சிக்கங்க. இப்போ அருளும் மாயாவும் ஆந்திராவுல இருக்காங்க. ஒரு போலி ஜாதகம் தயார்ப்பண்ணி நேத்துக் கல்யாணமும் நடந்து, அது சம்பந்தமான எல்லா சடங்கும் முடிஞ்சது. இப்போ அவங்க
பிரிக்கக் கூடாத ஜோடி.”
கீதாவுக்கும், அவனுக்கும் முகம் சுருங்கியது. அந்த வீட்டை கனத்த மௌனம், இருட்டைப் போல ஆக்கிரமித்தது.
”அவளுக்கு இப்பத்தான் பதினேழு வயசு முடிஞ்சது. அதுக்குள்ள என்ன அவசரம். இதெல்லாம் சட்டப்படி..”
“நீங்க இப்பிடில்லாம் பேசுவீங்கன்னு தெரிஞ்சுதான் ஒங்கள மீறி ரகசியமாக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. எந்தம்பி அடுத்தவாரம் வேலைக்காக சிங்கப்பூர் போறான். மாயாவுக்குத் தெரிஞ்சா விட மாட்டாளேன்னு அவளுக்குத் தெரியாமலே எல்லா ஏற்பாட்டையும் செஞ்சி முடிச்சிட்டோம். அது மாயாவுக்குத் தெரிய வந்ததும் அருள் மேல சந்தேகப்பட்டு ஆத்திரமாயிட்டா. என்னக் கல்யாணம் பண்ணிக்காம சிங்கப்பூர்ப் போனா நான் உயிரோட இருக்க மாட்டேன்னு அருள மெரட்டினா. அதான் எங்களுக்கு வேற வழி தெரியல.”
மீண்டும் கனத்த மௌனம்.
“நான் அப்பவே சொல்லல, நம்ப பொண்ணுதான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு.” என்றாள் கீதா.
“யார் காரணம் என்னான்றதெல்லாம் இப்போ முக்கியமில்ல. மேற்கொண்டு பிரச்சனை வரமா சுமூகமா இருக்கணும். இதுவரைக்கும் எங்களுக்குத் தெரிஞ்ச வகையில செய்துட்டோம். அடுத்து என்ன செய்யிறதுன்னு நீங்க தான் சொல்லணும்.”
“நடந்த கல்யாணம் நடந்ததாவே இருக்கட்டும். இப்போதைக்கி உங்க பக்கத்து ஆட்கள் யார்ட்டயும் சொல்லிக்க வேண்டாம். அருள் வெளிநாடு போய்ட்டு வரட்டும். மாயாவுக்குப் பதினெட்டு வயசு ஆனதுக்கப்புறம் முறைப்படி ரிஜிஸ்டர் பண்ணிட்டு நீங்க கூட்டிட்டுப் போங்க. அதுவரைக்கும் மாயா எங்க வீட்ல இருக்கட்டும்”
“மாயாவை இதுக்கு ஒத்துக்க வைக்கிறது என் பொறுப்பு. நீங்க தலையிடறதுக்கு அடுத்தவங்களுக்கு எடமில்ல. நமக்கும் சொல்ற பேச்சுப் படியே நடந்துக்கிட்டா, குறுக்கப் புகுந்து தொல்லையில்ல. ஆனா ரிஜிஸ்டர் பண்றதுக்குள்ள மாயாவுக்கு வேற ஏற்பாடு செய்ய மாட்டீங்ன்றதுக்கு என்ன உத்திரவாதம்?”
“நாங்க அப்பிடிக் கேவலமா நடந்துக்க மாட்டோம்ன்னு மாயா நம்பினா அவ எங்களோட இருக்கட்டும். இல்லேன்னா அவ ஒங்க * பாதுகாப்புலேயே இருக்கட்டும். நாங்க ஒங்கள நம்புறோம். எங்களப் பொறுத்த மட்டில எங்க பொண்ணு அவளுக்கு விருப்பமான எடத்துல பாதுகாப்பா இருக்கணும். அவ்வளவு தான். “
“நீங்க எங்கள நம்புறப்போ. நாங்களும் உங்கள நம்பித் தான் ஆகணும். இருங்க அவங்களுக்குப் போன் அடிக்கிறேன். அவங்களோட பேசிர்லாம்”
அருளின் அக்கா சேரில் முழுமையாக உட்கார்ந்து கர்சிப்பை மடிப்பு நீக்கி தன் தொடை மீது வைத்து விட்டு அருளையும், மாயாவையும் போனில் அழைக்க எண்களை ஒற்றினாள்.
கீதாவும், அவனும் அந்த இரண்டு நாள் பதைபதைப்பின் உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்.
