போப்பு/ஈரம்

மழை இப்போது அடுத்த வேகத்திற்கு தயாராகிக்கொண்டு இருந்தது. குளிரற்ற ஈரமான காற்று சன்னல் இடுக்கின் வழியாக தாளவாத்தியத்தினுடைய ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. அது ஒரு செல்லப்பிராணி அவனைத் தீண்ட விரும்புவது போல் இருந்தது.
சன்னல் திறப்பில் மின்னல் கீறிவிட்டுப் போனது. இடிக்கும் வரை காத்திருந்து “வசி… வசி…’ எனக் குரல் கொடுத்தான். முயக்கத்தின் களைப்பில் ஆழ்ந்திருக்கலாம். பிசிரற்ற சற்றே கனமான குரலுக்கு தொண்டையை தயாரித்து, ‘வசீ’ என்றான். போர்வையை விலக்கி, “ஜன்னல ஏந்திறந்து வச்சிங்க? அத மூடுங்க மொதல்ல!” என்று புகுந்த போர்வையின் விறைப்பு அவனை நிராகரித்தது.
அனேகமாக முயக்கத்திற்கு பின் உடல் மனம் எல்லாம் மிகவும் இலகுவாகி பரபரக்கும் அவனுக்கு. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் காலால் சுற்றித் திரிவான். எதுவும் மொழியாமல் நடு வயது மாது அவனுக்கு பொசு பொசுவென்று உப்பின சப்பாத்தியும் வதக்கின தக்காளியும் கொடுப்பாள். அவன் எழுதி முடித்த இரண்டாயிரத்து நானூற்றி பதினாறு பக்க நாவலின் மூன்று வால்யூம்களும் அறிவின் வெப்பத்தில் கனன்று கொண்டும், உணர்வுக் கொந்தளிப்பில் தட தடவென்று ஆடிக்கொண்டும் இருக்கும்.
எல்லாவற்றிலும் கவனப்படுத்திக் கொள்ள வேண்டியது, விருது பெறும் நாளில் தன்னடக்கம் ததும்பும் அவன் உடல் மொழியும், அலட்டலற்ற பேட்டியும்தான். அதில் ஈர்க்கப்பட்ட பின்னரே நாவலை ஒரே மூச்சில் வாசித்த, அதற்கு முன்னர் வார இதழ்களைக்கூட வாசித்திராத பெண் மிகக் கஷ்டப்பட்டு தேடி அவன் வீடு வந்தடைவாள்.
வேறொன்றும் வேண்டாம். இரண்டே இரண்டு நாள் உங்களுடன் இங்கே இருந்துவிட்டுப் போகவேண்டும் எனக் கேட்பாள், அவளது விரிந்த விழிகள் அவனது ஒவ்வொரு அசைவையும் கொஞ்சங் கொஞ்சமாக ருசிக்கும். அதை வாசுகி நுட்பமாக கவனிப்பாள். அவளை வழியனுப்பி வைத்த அன்று இரவு வாசுகி அவன் தோள்களை பற்றிக் கொண்டு அவன் நெஞ்சில் முட்டிமுட்டி அழுவாள்,
“இப்ப என்ன… சரி சரி, அத விடு. ஒண்ணும் இல்லடா கண்ணூ ‘ என்று மிகவும் பெருந்தன்மையுடன் வாசுகியைத் தேற்றுவான். அதற்குப் பின்னர் வாசுகி ஊற்றும் தோசையின் புள்ளிகள் ஒரே சீராக இருக்கும். கடுகுகள் கருகாமல் தாளிதம் பெறும். முட்டை தோசையின் மிகச் சரியான நடுவில் மஞ்சள் கரு அமுங்கி இருக்கும். ஜலந்தரில் இருந்து அவளது தம்பி போடும் கடிதங்களை உள்ளே விரல் விட்டுக் கிழிக்கமாட்டாள். அதற்கென்று ஒரு கூர்மைமிக்க கத்தியை பெங்களூர் பிரிகேடியர் ரோட்கடையில் நூறு கத்திகளுக்கிடையே இரண்டுபேரின் விரல்களும் ஒரே நேரத்தில் கண்டடையும்.
தலையணைகளை அழுத்திக் கொண்டிருந்த முழங்கைகளை நீக்கி அதிக சிரத்தையுடன் சன்னலைச் சாத்திவிட்டு நின்றான். பூரணமாக போர்த்தி இழுத்துக் கொண்ட வாசுகியின் நிலை ஒருவிபத்தில் இறந்து போர்த்தின் உடலை நினைவுறுத்தியது. கண்களைக் குத்தாத விளக்கொளியும் வெளியில் பெய்யும் மழையின் அடங்கின ஓசையும்
அந்நினைவைப் பெருக்கியது. மிகுந்த கவனத்துடன் எல்லாம் ஒழுங்கு செய்து வாசலில் வந்து நின்றான்.
கனத்த துளிகள் சிதறி பாதங்களில் அதன் மேற்பகுதிகளில் கிளர்ச்சியூட்டியது. இதேபோல் கிளர்ச்சி பெறும் இன்னொரு ஜோடிக்கால்கள் அவனுக்கு எப்போது கிடைக்கும். அவனுக்கு முன் விரிந்த வெளி, ஓவியம் போல் நிலைத்திருந்தது. எதிர் உள்ள காலி மனையில் தோண்டிப் போட்ட பள்ளங்கள் நீரில் நிறைந்து வெள்ளைக் கட்டங்களாகப் பிரிந்திருந்தது. மையங்கொண்ட புயல் கரையைக் கடக்கும்வரை இந்த மழை இப்படியே பெய்யும்.
ங்கணங் ங்கணங். பாத்திரஓசை அவன் தூக்கத்தை வெட்டிகொண்டு பாய்ந்தது. விலக்கின போர்வையில் குளுமை பரவி இருந்தது. மழையின் ஓசை நிரந்தரப்பட்டிருந்தது. பார்வையில் பட்டஅனைத்தின் மீதும் ஈரம் சினேகமாக கை குலுக்கி இருந்தது. அவனது சலனம் உறைத்து,
“அய்யா ஒரு முடிவோட தூங்கினாப்ல தெரிஞ்சது. ஆமா இன்னக்கி ஒரு சி.எல். போடப் போறேன். நேத்தைய வேகத்துலேயே இப்படிச்செய்விங்கன்னு தெரியும்” என்றாள்.
அவன் தலையில் அவமானத்தைக் கொட்டினது போல இருந்தது. ஆனால் அதைத் துடைத்தெடுக்க நிறைய பேச வேண்டும். பேச்சு சூழலைக் கெடுக்கும், வேறு திசைக்கும் கொண்டு போய் விடலாம். பதமாகவே இருக்க விரும்பினான்.
அவள் தளர்வாக முடிந்திருந்த கூந்தலில் வெள்ளைப் பூ இருந்தது.
அலுவலகத்திற்குப் போன் அடித்து விடுப்பு சொன்னான். நேற்று இரவில் வாசலில் நின்று பல முறை பார்த்த ஒத்திகை லகுவாக காரிய சித்தியானது. அப்படியே டீ போல வயிற்றுக்கு கனமில்லாத ஒன்றை சாப்பிட்டுவிட்டு வண்டியில் நிதானமாக வெகு நிதானமாக சுற்றி
வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்ட நிமிஷத்தில் வாசுகி கேட்டாள்.
“ஒரு சி.டி எடுத்துட்டு வர்ரிங்களா…படம் பாக்கலாம்”
திரண்டு வந்த கோபம் அடங்கினதை அவன் கண் காட்டியது,
“சரி. சரி மொதல்ல போய்க் குளிங்க”
ஈரம் தங்காத துணியிலான உடைகளை தேர்ந்து அணிந்து கொண்டான். இந்தத் தேர்வின் நுட்பம் என்றைக்காவது வாசுகிக்கு கைகூடுமா. அவன் ரசனைக்கு இசைவாக சாரலை விட வலுத்த
துளியாக மழை பெய்து கொண்டிருந்தது.
“நீங்க எங்கயோ போங்க நான் ஏன்னு கேட்கல, போறதுக்கு முன்னாடி பேங்குல போய் இந்த பணம் எடுத்துக் கொடுத்துட்டுப் போங்க, விஜயா அக்காவுக்கு கொடுக்கணும்.” மேற்படி அக்காவுடன் எப்போது நட்பார்ந்து, பகைத்து இருப்பாள் என்பது யூகங்களைக் கடந்த ஒன்று. அதற்கு இடையுற வேண்டாம் என பேங்க் போக சம்மதித்தான். வங்கிப் புத்தகத்தை பாலிதீன் பையில் சுற்றிக்கொண்டு வந்து நீட்டினாள்.
“உள்ளேயே சிலிப் வச்சிருக்கேன். பணம் எடுத்து இதப் போலவே பத்திரமாகொண்டு வாங்க.”
வாசுகி என்பது அவனது முதல் காதலியின் பெயர். இன்றுவரை ஒரு செடியை, ஒரு ரயிலை பார்ப்பதான பார்வையையும் வாசுகி அவள் மீது வீசினதில்லை. என்றாலும் அவள் உருவம் பதிந்த மனத்தில் கடுமையின் சாயல் கூடப்படாமல் பாதுகாத்து வருகிறான். திருமணத்தன்று இரவே செண்பகத்திற்கு அப்பெயரை வைத்து நிரந்தரமாகிவிட்டது.
கொஞ்ச காலமாகத்தான் புழக்கத்திற்கு வந்துள்ள மண் சாலை ஈரத்தில் உள்ளிறங்கி பயணத்தை சுகமாக்கியது. தெள்ளிய நீர்ப்படிவம் சிற்சிறு கற்களில் அறுபட்டு ஓடிக் கொண்டிருந்தது.
வீட்டை விட்டு தார்ச்சாலை நெருங்கு முன்னரே முழுமையாக நனைந்து விட்டான். அவனை எதிர்த்த போக்கில் தவிட்டு நிற நாய் ரோமங்கள் குத்திட வந்தது. ஏய் ஜிம்மி என்ற அவனது குரலை ஏறிடவில்லை அது. இந்த வீட்டிற்கு குடிவந்த புதிதில் இங்கே தான் அவசியப்படலாம் என நினைத்து அங்கேயே வலம் வந்த அதை அவ்வளவு கடுமையாக துரத்தியது தவறு என்று பட்டது அவனுக்கு. அதில் கோபித்து கொண்டுதான் ஜிம்மி அவன் வீட்டுப் பக்கமும் வருவதில்லை, இப்போது அவன் அழைப்பையும் பொருட்டாக்காமல் போய்க் கொண்டிருக்கிறது.
தார்ச்சாலையின் இரண்டு பக்கங்களிலும் வாய்க்கால் கட்டி ஓடிக் கொண்டிருந்தது மழைநீர். காலங்காலமாக இப்படி ஓடுவதற்கு விதிக்கப்பட்டால் சந்தோஷமாக ஓடுவேன் என்று சொல்வது போல் இருந்தது அதன் ஓட்டம். அந் நகரை ஒரு மாலை போல கட்டிப்போட வந்த கயிறாக ஓடிக் கொண்டிருந்தது. நேற்றைய மழையில் ஊரின் கறுத்த சாக்கடை நீரை, குப்பைகளை, பாலிதீன் பைகளை எல்லாம் அடித்துக் கொண்டு போய் ஏரியில் சேர்த்து இப்போது மண்ணின் இயல்பு நிறத்தில் தெளிந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
வங்கியின் பேன் காற்றில் நனைந்த புத்தகத்தை விரித்துப் பிடித்திருந்தனர்.
அவன்போய் உரிய கவுண்டரில் கணக்குப் புத்தகத்தை நீட்டினான். பாலிதீன் பையை ஒரு கையிலும் அவனது புத்தகத்தை ஒரு கையிலும் உயர்த்திப்பிடித்து அப்பெண்மணி கூவினாள்.
“சார் ப்ளீஸ்…. எல்லாம் இங்க வாங்க. எல்லாரும் இங்க வாங்க சார்.”
சின்னத் தயக்கத்துடன் அவள் அழைப்பிற்கு இணங்கினர். தயவு செஞ்சி நீங்க இத ஃபாலோ பண்ணுங்க. கூட்டத்தில் ஒருவனாகிவிட்ட
அவனை அப்பெண் அழைத்தாள்.
“இப்பிடி வாங்க சார்… இவர் பாருங்க சொதசொதன்னு நனைஞ்சிருக்காரு ஆனா புக் நனையல . நாங்கதான் இந்த ஐடியா சொன்னோமா.”
இந்தக் கேள்விக்கு எதிர்வினை என்ன என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. அவளே தீர்த்தாள்.
“இது உங்க சொந்த யோசனைதான.’
கூச்சமும் பெருமிதமுமாக ஏற்றுக் கொண்டான். நாடகப்பாங்கு மிக்க அந்நிகழ்வு முடிந்ததும் தாழ்ந்த குரலில் அப்பெண் கேட்டாள், “சார் ஐம்பதினாயிரத்துக்கு எப்.டி. ஒரு புது ஸ்கீம் இன்ட்ர்ர டியூஸ் பண்ணியிருக்கோம். உங்களுக்கு ஒண்ணு போடலாமே.”
பளபளப்பான வண்ணக் காகிதங்களை எடுத்துப் பரப்பினாள். “எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க” என்று காகிதங்களை எடுத்துக் கொண்டு நழுவினான்.
இதற்காகவே காத்திருந்த மழைக் கோட்டுகளும் ஜர்க்கின்களும் வெளியே வந்திருந்தன. வாகனங்கள் எல்லாம் பளபளப்பாகி நீரை இறைத்து ஓடிக்கொண்டிருந்தன. காத்திருப்புப் பகுதியில் மழை விடும் சின்ன இடைவேளைக்காக பலர் நின்றிருந்தனர்.
அவர்களுடன் நல்ல வயிறு புடைத்த கறுப்பு ஆடும் அதன் இரு குட்டிகளும் மினு மினுப்பான விட்டைகள் உதிர்த்து நின்றிருந்தன. தாய் ஆடு மெல்ல அசைபோட்டுக் கொண்டிருந்தது. குட்டிகள் அடிக்கொரு
தரம் உடலைக் குலுக்கி நீரைச் சிதறடித்தது. மழை வங்கியை, மனிதர்களை இளக்கி ஆடுகளுக்கு இப்படி இடம் கொடுத்திருக்கிறது.
மிக உயரமாகி விட்ட அவன் பரந்த வெளியில் வானத்தை நோக்கி தன் இரண்டு கைகளையும் உயர்த்தி மழையே போற்றி… மழையே போற்றி என்று நீண்டு அதிரும் குரலையும் சித்திரத்தையும் மனதிற்குள் எழுப்பினான்.
அவன் பக்கத்தில் நின்றிருந்த முதிர்ந்து உடல் சுருங்கின பாட்டி, “என் ஆயுசுக்கு இத்தினி நாள் இப்பிடி நிதானமா பெய்ஞ்ச மழையப் பாத்ததில்ல. நல்லா பெய்யுது. பெய்யட்டும் பெய்யட்டும். பூமி குளுந்தாத்தான் பயிர் எல்லாம் பிடிச்சி வெளையும்” என்றாள்.
“ஏம் பாட்டி… எத்தனி ஆயிரம் ஏக்கரா பண்ணயம் பண்றே ?” கூட்டத்தில் ஒரு குரல் கேட்டது.
“பண்ணயம் பண்ணாட்டி மழை தேவயில்லியா. மழை ரெண்டு பருவம் தப்பினாப் போதும் எப்பேர்ப்பட்டவனுக்கும் நெருப்பு பத்திக்கும் ஆமா.”
இதுக்கு மேல் பேச மாட்டேன் என்கிற விதமாக தன் சேலை முந்தியை வாயில் வைத்து ஊதி வெப்பப் படுத்திக்கொண்டாள்.
பணத்தைப் பெற்றுக் கொண்டு நகரை சின்ன வலமிட்டு வீட்டுக்குப் போக நினைத்தான். அதில் முதலிடத்தை ஏரி வாங்கிக் கொண்டது. கணிசமாக நீர் வந்திருக்கவில்லை என்றாலும், விளிம்பு நீர் அகலமான செவ்வண்ணத்தில் கரை கட்டியிருந்தது. ஏரி நீருக்கு மேலே தனித்த வெள்ளை நிறத்தில் மழை பிடித்துக் கொண்டிருந்தது. நகரின் கட்டடங்களும் மரங்களும் துலங்கி இருந்தன.
பதிற்றுக் கணக்கான உத்திகளில் நகர மக்கள் மழைக் கவசம் அணிந்து அந்த நாளை சகஜ நாளாக்க முயன்றிருந்தனர். நில அடிக்
கடைகளிலிருந்து நிறைய நீரையும் முணுமுணுப்பையும் சாலையில் வாரி இறைத்துக் கொண்டிருந்தனர்.
டீக்கடையில் நின்றிருந்த நண்பன் கூவி அழைத்து அதே வேகத்தில் இன்னொரு டீ என வேண்டினான். அவன் நனைவை முழுதாக வாங்கிக்
கொண்டு,
“இப்படி நனைஞ்சிட்டு எங்க போய்ட்டு வர்ரே?”
‘பணம் எடுக்க பேங்க் போய்ட்டு வர்ரேன்.’
“யார்ட்டயாவது கடன் வாங்கி சமாளிச்சிருக்கலாமே?”
அவனுக்கு இந்த அனுபவத்தைக் கடனாகப் பெற முடியாதே என்று சொல்லத் தோன்றியது.
நண்பனின் கேள்விகளுக்கு அசுவாரஸ்யமாக பதில் கொடுத்துக் கொண்டு டீக்கடை கூரையினின்று சொட்டி மண் தரையைத் துளையிடும் நீரின் தீவிரத்தில் ஊன்றி இருந்தான். விடை பெறலுக்காக டீக்காசு தர பாலிதீன் பையை வெளியே எடுத்தான். நண்பன் கொடுத்தாகி விட்டது என்பதற்கான பாவனையும் கூடவே புன்னகையும் அளித்தான்.
சாலை குளிக்கப் பண்ணின யானை போல கறுப்பான மினுமினுப்பில் இருந்தது. சாலையோர அரிப்பிலும் ஒரு சுத்தமும் நேர்த்தியும் இருந்தது.
கழுவின சாலையில் சக்கரங்களின் ஓட்டம் லகுவான வண்டி ஓட்டியின் உடல் உணரும்படியான சுகத்தைக் கொடுத்தது. ரயில் பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி இருந்தது. தயக்கத்துடன் கடந்து கொண்டிருக்கையில் எதிர்த்தாற் போல் வந்த பேருந்து, தேங்கின நீரை அவன் மீது இறைத்து விட்டது. திரும்பிப் பார்த்தான்.
டிரைவர் மன்னிப்புக் கோரும் சைகையில் பேருந்துக்கு வெளியே உடலை வளைத்து தலையில் சலாம் போட்டு மறைந்தான். இன்றைக்கு எல்லோரும் இப்படி இருக்கிறார்கள். ஜட்ஜ் பங்களா காம்பவுண்டு மரங்களில் இருந்து உதிர்ந்து சாலையில் பரவிய மஞ்சள் பூக்கள் விழாக் குதூகலத்தைத் தந்தது.
பங்களா சுவரின் முடிவுவரை போய் திரும்பி வந்து வண்டியின் சக்கரம் பூக்கள் மீது ஏறாத வண்ணம் வளைத்து வளைத்து ஓட்டினான். நிறுத்தி ஸ்டேண்ட் போட்ட வண்டி ஈரத்தில் தொபுக்கென்று உள்ளிறங்கியது.
வாசுகி அடுப்படியில் ஏகத்திற்கும் மசாலா வாசனைகளையும் சத்தங்களையும் கிளப்பிக் கொண்டிருந்தாள். வாய் விடாமல் சொல்லிக் கொண்டான், ‘அருமை மனைவியே மென்மையாக தூங்குகிற குழந்தையைத் தூக்குவது போல் சூழல் சிதையாமல்…’ ஈரப் பாதத்தை முன் விரல்களால் நடந்து உள்ளே போனான்.
பேண்ட் பாக்கெட்டினுள் கையை விட்டான். நுழைவிலேயே சரசரத்த பாலிதீன் பை விரல்களுக்கு நெலு நெலுப்பைக் கொடுத்தது. படபடப்புடன் வாசுகி கவனிக்கிறாளா என அடுப்படியைப் பார்த்தபடியே படுக்கை அறையில் நுழைந்தான். அறைக் கதவை பாதி இழுத்து விட்டு பையை வெளியே எடுத்தான்.
ரூபாய்க் காகிதங்கள் சோர்ந்து பையில் ஒட்டியிருந்தது. கிட்டத்தட்ட கால்வாசி அளவில் நீர் இருந்தது. வங்கிப் புத்தக பக்கங்கள் ஆசையாக நீரை உறிஞ்சி இருந்தது. ரூபாய் நோட்டுகளைப் பதமாக எடுத்து மெத்தையில் வைத்து நீவினான்.
“அய்யோ… அதையும் ஏன் ஈரமாக்குறிங்க மழைக் காலத்துல” என்றாள் வாசுகி.
மெத்தையில் இருந்து காகிதங்களை அவசர அவசரமாக எடுத்து உள்கையைத் திருப்பி முழங்கையில் இருந்து உள்ளங்கை வரை ஒற்றிக்கு கொண்டே போனாள். அந்தக் காகிதங்களுக்கும் அவளுக்கும் இடையே நீண்டகால ஒப்பந்தம் இருப்பது போல மிகச் சாதாரணமாக ஒட்டிக்கொண்டது. அவன் மீது பார்வை எதுவும் வீசாமல் அடுக்களைக்கு துரித எட்டுகள் வைத்துப் போனாள்… கையில் ஒற்றின காகிதங்களில் கவனமாக.

போப்பு/தேவானை அத்தை – விருட்சம் நாளிதழ்