
திண்ணையில் பழைய சேலைத் துணியை விரித்து ஒவ்வொரு சாமானாக வைத்துக் கொண்டிருந்தாள் தேவானை அத்தை. திரித்த கேப்பைமாவு முடிச்சு, பிள்ளைங்க திங்கிறதுக்கு இருக்கட்டும் என்று கம்பு மாவு, நாட்டுச்சக்கரை, பனைவெல்லம்… காபித்தூளை எடுத்து சாமான்களுக்குள் ஒளிப்பது போல் வைத்தாள். காப்பித்தூளைப் பார்த்தால் கிழவி கத்துவாள். அது இல்லையென்றால் அத்தை செத்துவிடுவாள். “மழைக்குமின்ன கெளம்புங்க” என்று அம்மா வெளக்கெண்ணை சீசாவை கொண்டு வந்து வைத்தாள். பிடிக்க வாகாகக் கட்டியிருந்த சணல் கயிறு கருப்பாக அழுக்குப்பிடித்து கோழி முட்டை அளவில் விரைத்துக்கொண்டிருந்தது. அதை வைத்த கண் எடுக்காமல் பார்த்து நின்ற வையாளி உள்ளுக்குள் துடித்துக்கொண்டிருந்தான். தம்பூ இன்னும் காணோம். இந்த இரண்டு வருடத்தில் அத்தை கற்றுக் கொண்ட மிகச்சில தெலுங்கு வார்த்தைகளில் இந்த தம்பூவும் ஒன்று. அவனுக்கு இப்போது கிழவி கண்ணில் படாமல் அம்மாவுக்கும் மனம் புரளும் முன்னால் அத்தையோடு தொற்றிப் போய் விடவேண்டும்.
பய எங்க போறானாம்… மம்மலும் மசங்கலுமான நேரத்துல?”
அய்யோ கிழவி வந்து விட்டாள். தெரியாமலா இருக்கு கெழவிக்கு. பேச்சை இழுப்பதற்காகக் கேட்கிறாள். இந்த அம்மாவாலதான் எல்லாம். வேண்டுமென்றே அதைத்தரேன் இதைத்தரேன் என்று நேரத்தைக் கடத்திக் கிழவியிடம் சிக்க வைத்துவிட்டாள். அத்தை எதுவும் பேசாமல் மூட்டையைக் கட்டிக்கொண்டிருந்தாள் இருவருக்கும் பேச்சு வார்த்தை எப்போதும் இருப்பதில்லை.
“வையாளிக்கு பள்ளிக்கொடம் லீவு விட்டாச்சில்ல… அதான் ஒருவாரம் பத்துநா தோட்டத்தில இருக்கட்டும்ன்னு அக்கா அவன அழைச்சிக்கிட்டு போறாங்க,”
கடையிலிருந்து வந்த அப்பா கிழவியைப் பாராமல் சொல்லிக்கொண்டே மேத்துண்டு முந்தியில் முடிந்து வந்த பொட்டலங்களை அத்தையின் மூட்டையுடன் சேர்த்தார். “ஆமா இந்த முண்டை இவனோட ஒட்டிக்கிட்டு பொறந்தவ… அக்காவாம் அக்கா… இது அங்கிட்டு போ” கைக்கம்பை தூரத்தில் இறக்கையை விரித்துப் பார்த்துக்கொண்டிருந்த கோழி மீது வீசினாள் கிழவி. அத்தை கை இயக்கத்தை நிறுத்திவிட்டு அப்பாவை பார்த்தாள். ‘ம்ம்ம்… ஆகட்டும்’ என்று அப்பாவின் பார்வையும் விரல்களும் கிழவி அறியாமல் சொன்னது. எங்கோ ஆடிக்கொண்டிருந்த தங்கமும் விஜயாவும் கிழவியின் சத்தத்தைக்கேட்டு ஓடிவந்து பாவாடையை இறக்கிவிட்டு முகம் தொங்கிப் போய் நின்றனர். அத்தை சாமான் மூட்டையை இடது தோளுக்கு ஏற்றிக்கொண்டு, “தம்பூ கவலைத்தோல் கிழிஞ்சு எறைக்கிற தண்ணியெல்லாம் கிணத்துக்குள்ளே கொட்டிப்போகுது ரெண்டு சேர்கூட வாய்க்கால்ல பாய்றதில்ல. பழனிய அனுப்புறிங்களா… தைக்கிறதுக்கு” என்றாள்.
“ஆமாண்டா. இந்த நாட்டாமை பண்ற அழக, இருந்து பாக்க எம்மகனுக்குத்தான் கொடுத்து வைக்கல போ”
கிழவியின் பார்வை எதிர் சுவரில் குத்திக் கொண்டிருந்தது. மாமா இறந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. வையாளி அவரைப் பிணமாகத்தான் பார்த்திருக்கிறான். நீளமான மரப்பெட்டியில் முகப்பகுதி மட்டும் பார்க்கும்படிக்கு கண்ணாடி வைத்திருந்தார்கள். முகம் தலையெல்லாம் எதுவும் அடியில்லை. வெளேர் என்ற முகத்தில் பூசிய பவுடர் ஒற்றாமல் திட்டுத்திட்டாக இருந்தது.
நெஞ்சுக்கு கீழே வயிறுவரை சதையை வெட்டி வெட்டித்தான் உடலை எடுக்க முடிந்தது. ஸ்டீரிங்குக்கும் ஸீட்டுக்கும் இடையில் மாமாவின் உடல் அப்படி மாட்டிக்கொண்டது. அன்றைக்கு அவன் மாமாவை விட அந்த வழவழப்பான மரப்பெட்டியையும் பந்தலில் தலையை இடித்துக் கொண்டு கரும் பச்சை உடையில் நின்ற ஆட்களையும் தான் மாறிமாறிப் பார்த்தான். அவன் மட்டுமல்ல ஊரில் பலரும் அப்படித்தான், கிழவி அந்தக்கண்ணாடி மீது உள்ளங்கையால் ஓங்கி ஓங்கி குத்தினாள். அவள் குத்தியதை ஏந்திக்கொள்ள வந்த அகலமான மணிக்கட்டு கொண்ட மிலிட்டரி ஆள் கையை பிடித்து இழுத்து விட்டான்.
அவ்வளவு திடகாத்திரமான ஆள் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். அத்தை, தங்கம், விஜயா இருவரின் தலைகளையும் தன் மாருக்கும் மடிக்கும் இடையில் இரண்டு பக்கத்திலும் சாய்த்துக்கொண்டு குறுகி உட்கார்ந்திருந்தாள். கிழவி ஒப்பாரிக்கு இடையிடையே அத்தைக்கு சாபம் விட்டுக்கொண்டிருந்தாள். கீழத்தெரு ஆட்கள், “அந்தப் பொண்ணு நம்மாளுகளாமில்ல…” என்று அத்தையை கட்டிப்பேசிக் கொண்டார்கள். அய்யா கிழவி கண்ணில் படாமல் அலுமினியத் தூக்குவாளியில் காபி வாங்கிக்கொண்டு வந்து அத்தைக்கும் தங்கம் விஜயாவிற்கும் ஆத்தி ஊற்றிக் கொடுத்தார். இறந்தவரின் மனைவி செய்ய வேண்டிய சடங்குகள் எதுவும் செய்துவிடக் கூடாது என்று கிழவி கவனமாக இருந்தாள். அத்தைக்கு
அதுபற்றி ஒன்றும் தெரியாது. அக்கறையும் இல்லை. மாமாவை அடக்கம் செய்த அன்று இரவு அத்தை சாவு வீட்டிற்கு முன் போட்டிருந்த பந்தலில்தான் பிள்ளைகளை அணைத்துக்கொண்டு படுத்திருந்தாள். சாதாரணமாகவே வற்றிய அத்தையின் முகம் அப்போது மேலும் வற்றி மூக்கு, கண், நாடி எல்லாம் துலக்கமாகத் தெரிந்தன. வீட்டில் மற்றெல்லோரைக் காட்டிலும் அத்தையின் நிறம் மட்டுதான், ஆனால் தெளிவான நிறம். மாமாவுக்கு இடுகாட்டில் பால் ஊற்றிவிட்டு வந்தபின் பெரிய மனிதர்கள் எல்லாம் உட்கார்ந்து பேசினார்கள். கிழவி, அத்தையை ‘வீட்டில் சேர்க்க முடியாது’ என்று உறுதியாக கூறுகிறாள்.
அத்தை “நான் கோத்தகிரிக்குத் திரும்பிப் போக முடியாது. அம்மா, அப்பா முகத்துல முழிக்கமுடியாத அளவு நாங்க பகைச்சிட்டோம். நா இங்கதான் இருப்பேன். உங்களுக்கு பிடிக்கலயா… என்னையும் என் பொண்ணுங்களையும் விஷம் ஊத்திக் கொன்னுபோட்டுடுங்க” என்று கூறினாள்.
நாலும் தெரிந்த பெரிய மனுசர்கள் சொல்வது அறியாமல் மண்ணுத்தரையைக் கீறிக் கொண்டிருந்தனர். கடைசியில் அப்பா தான் சொன்னார்.ரெண்டுக்கும் பொதுவா சொல்கிறேன். பாட்டியயும் வீட்டில சேர்க்க வேண்டாம். அவங்களும் ஊருக்கு போக வேண்டாம். தோட்டத்து வீட்டில் இருக்கட்டும். மாடுகன்னுகள மேப்பாத்துட்டு இருக்கட்டும் மத்தத அப்புறம் பேசிக்கிறலாம் என்று.
கிழவிக்கு இஷ்டம் இல்லை என்றாலும் ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அத்தை எண்ணை சீசாவை இடது கைக்கு மாற்றிக்கொண்டாள். வலக்கையை வையாளி பற்றிக்கொள்ளத் தோதாக. நாலைந்தெட்டு வைத்துவிட்டு, பின்பு சன்னமான குரலில் சொன்னாள், “ஏய் பிள்ளைகளா! அவ்வாட்ட சொல்லிட்டு வாங்கடி”
தங்கமும் விஜயாவும், ‘சொல்லியே ஆகணுமா’ என்ற கேள்வியை பார்வையிலேயே கேட்டுவிட்டு பின்னால் திரும்பி ஓடினார்கள். அவர்கள் தலை விளக்கெண்ணை தடவி அழுத்திச் சீவிவிடப்பட்டிருந்தது. அழுத்தின அழுத்தலில் முகமே பின்னுக்கு இழுத்துக் கொண்டிருந்தது. மாமாவின் தலையும் இப்படித்தான் ஏற்றிச் சீவிவிடப்பட்டிருந்தது. தெருமுனை திரும்பியதும் அவர்கள் இருவரும் குதியாட்டம் போட்டுக் கொண்டே ஓடினார்கள்.
“கழுத மாதிரி வளந்திட்டாளுங்கே ஒழிய ஒரு கூறு இல்ல… இம்புட்டு செமையும் ஒருத்தியாச் செமந்திட்டு வாரனே உறைக்குதா? ஆக்கி வைச்சா வட்டியத்தூக்கிட்டு வந்திருவாளுங்க திங்க. எப்பிடித்தான் கரையேத்துவேனோ’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டாள் அத்தை.
“வையாளி நீ கட்டிக்கிறியா ரெண்டுபேரையும்?” என்றாள்.
“போ அத்தே. அவளுங்களாவது குமரிங்க, வயசு இருக்கு. எவனாவது பொறந்திருப்பானுக
என்றான்.
“எனக்குத்தான் யாருமே இல்ல. என்னைய கட்டிக்கிறியா’
“போ அத்தை…கெட்டவார்த்தை பேசற!‘ பற்றியிருந்த கையை விசுக்கென்று உருவிக்கொண்டான்.
“சரிடாப்பா. ரெண்டும் வேணாம்… உங்க வீட்டுத் தூணைக் கட்டிக்க’.
“அத்தே… ஏஏ…” காலை ஓங்கித்தரையில் உதைத்தான். தேனாற்றை நெருங்கி விட்டார்கள்.
“வையாளி! காலு வலிக்குதா சாமி. நாந் தூக்கிக்கிறவா’
“வேணாந்த்தை. தோட்டம் வரைக்கும் என்ன அதுக்கும் மேலேயும் நடப்பேன்”
ஆத்துக்குள் இறங்க அத்தை சேலையை, முட்டிக்கு மேலாகப் பிடித்துக்கொண்டாள். கால் மஞ்சளாக ஒளிர்ந்தது. அவனைத் தூக்குவதற்காக அத்தை கையை ஏந்தினாள். மறுத்து விட்டான். பாதத்தில் நழுவி ஓடும் மணலின் குறுகுறுப்பு அவனுக்கு வேண்டியிருந்தது. அத்தையின் தொடைகளைக் கெட்டிம்மாகப் பிடித்துக் கொண்டான். இந்த அத்தை எவ்வளவு இலக்கமாக இருக்கிறாள். ஆனால் அவளுக்கு எவ்வளவு கஷ்டங்கள். கிழவி அத்தைய அருவாமனையில் வைத்து வகிராத குறையாக பேச்சிலேயே துண்டம் போடுகிறாள். மாமா சாகாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். மாமா சாகவில்லையானால் அத்தை, தங்கம், விஜயா இங்கே வந்திருக்கவே மாட்டார்கள்.
வெலிங்டனிலேயே இருந்திருப்பார்கள். அவனுக்கு அத்தையை, ஒரு முறை தெரிந்திருக்கக் கூட வாய்ப்பில்லை. அவன் பிறக்கும் முன்னாடி ஏன் அவன் அப்பாவுக்கும் கல்யாணம் ஆகும் முன்னாடி, அத்தையைக் கட்டிக்கொண்டு கோயில்களெல்லாம் சுற்றிக்கொண்டு ஊருக்கு வரப்போவதாக தந்தி கொடுத்திருந்தார்.
மாமாவின் கூட்டாளி மதுரை ரயிலடியிலேயே காத்திருந்து, இறங்கியதும் பிடித்து, “மாப்புளே… வந்த காலோட தங்கச்சியைக் கூட்டிக்கிட்டு திரும்ப போயிரு. தந்தியக் கண்டதும் மருமவ அழைப்புக்கு பலமான ஏற்பாடு செஞ்சிருக்கு கிழவி. கமுதியிலர்ந்து அஞ்சாறு ஆளுங்களக் கூட்டிக்கிட்டு வந்து தோட்டத்தில வைச்சி
கோழியடிச்சி சோறாக்கி போட்டுக்கிட்டு இருக்கு”
“சர்தான்… இம்புட்டுத்தூரம் வந்திட்டு அதப்பாக்காமப் போனா பெத்தவங்களுக்கு மரியாதை இல்லை. ஒரு எட்டு பார்த்துட்டுப்போவோம்”.
“அட சும்மா இருப்பா… இதப் பாக்கத்தான் இவ்வளவு நிமுந்து கல்யாணம் கட்டிக்கிட்டியாக்கும்.. ஓம் வீராப்பு பொழப்பு நடத்துறதுல காட்டு. கொஞ்சம் ஆறவிட்டு பின்னால் பார்த்துக்கிறலாம்” என்றவர் அத்தையைப் பார்த்து, “ஏம்மா… இவ்வளவுதானா நீ இஷ்ட்டபட்ட வேகம்?” என்றார்.
காலேஜ் ஹவுசில் ரூம் களைப்போட்டு, கருத்த மிலிட்டரி ரம்மில் சின்ன வயசுக்கதைகளைக் கலந்து சேக்காளிகள் பேசிக்குடிக்க… குடித்துப்பேச…
அத்தை, மீனாட்சியம்மன் கோயிலில் சில்லென்ற கல் தரையில் புதுப்பாதம் வைத்து, ஓடிஓடி கழுத்து வலிக்கப் பார்க்க…
மறுநாள் மாமா அப்படியே ரயிலேறிவிட்டார். தெளிந்த போதையில் திருப்பரங்குன்றம் பக்கம் திரும்பி, ‘முருகா! சாகறதுக்குள்ள அக்கம்மாளுக்கு நல்ல புத்தியக்கொடு. ஒரு வரிக் காயிதம் போட வையி. வந்து பார்த்துட்டுப் போறேன்’ என்று வேண்டிக்கொண்டார்.
சின்ன ஆற்றுக்கரை ஏறியதும் தோட்டத்து வீடு வெள்ளைப்புள்ளியாக கண்ணுக்குக் கிடைத்தது. கிட்டத்தில் வெளிர்பச்சையாக இருந்த பயிர்களின் நிறம் தூரம்போகப்போக அடர்ந்தது கருப்பாகி அப்படியே வானத்துடன் பிணைந்திருந்தது. கண்டதையும் தின்ற வயிறு போல வானம் கடாமுடா என்றது. மேகம் சாம்பலாக அலைந்து கொண்டிருந்தது. ங்ஙொய்ய் என்றது. பூச்சியினங்கள் ஒத்துக்குரல் எழுப்பின.
“ஏ குட்டிகளே ரொம்ப முன்னாடி ஓடாதிங்கடீ… அடங்காப் பிடாரிங்க.”
அத்தையின் குரலில் அரண்டு போய் வண்டிசை திப்பென்று நின்று போனது.
ஒரு நிமிடம் கழித்து மீண்டும் அனைத்தும் எல்லாம் ஒரு சேரதுவங்கின. ங்நொய்ய்ய்.. பயிர்களின் தாள்கள் முளையை காற்றில் ஒற்றிஒற்றியெடுத்து பச்சை வாசனையை ஏற்றி அனுப்பின. காற்று புதுசு புதுசாக வந்து நின்று அப்புறம் போய்க்கொண்டிருந்தது.
கம்மங்கதிர்களும் கேப்பைக்கதிர்களும் நாட்டியத்தின் துவக்கம் போல அளவுடன் தலையாட்டின. இருட்டு முன்னரே மின்னாட்டம் பூச்சிகள் விளக்கு போட்டு அலைந்தன. தட்டான்பூச்சிகளும் விட்டில் பூச்சிகளும் அவர்களுக்கு வெகு கிட்டத்தில் பறந்தன. தட்டான் பறப்பதைக்கண்டு,
“கட்டாயம் மழ வரும் வையாளி… நடைய வெரசாப்போடுய்யா’
“மழை வந்தா என்ன அத்தே நனைஞ்சிக்கிட்டே போவோம்.”
“நீ நனைஞ்சி… காய்ச்ச எதுவும் வந்ததுன்னு வச்சிக்க… இதுதான் சாக்குன்னு கிழவி’ என்ன கழுவேத்திருவா. அது அப்புறம். இப்ப ஏந்தலையில இருக்கிற மாவும் உப்பும் சேர்ந்து கூழாயிரும்.”
வையாளி இப்போது சந்தோஷமாகச் சிரித்தான். பச்சைகளை தடவித்தடவி ஓடினான். காட்டுப்பச்சையில் தண்ணீரில் அரவமற்ற இயற்கையில் தானும் ஆகிவிடத் துடிக்கிற வையாளியைக் கண்டு அத்தைக்கு அங்கமெல்லாம் குளிர்ந்தது. தோட்டத்தை நெருங்கிவிட்டனர். அவர்கள் போய்ச் சேரட்டும் என்று காத்திருந்தது போல வானம் பொட்டு வைக்கத் துவங்கியது. அவர்களது வரவைக் கண்டு மாடுகள் எழுந்து நின்று உடலை வளைத்தன. தொழுவின் விட்டத்தில் அடங்கி விட்ட கோழிகள் குரல் எழுப்பி தங்கள் இருப்பை உறுதி செய்தன. அத்தை மூட்டையை இறக்கி தங்கம் கையில் கொடுத்துவிட்டு அங்கங்களில் பரபரப்பேற்றி மாடுகளுக்கு தீவனம் அள்ளிப்போட்டாள். மாடுகள் தலையசைத்து நன்றியறிவித்தன.
வையாளி சாணம் மெழுகி வழவழப்பேற்றிய தரையை பார்த்தும் நீண்ட நாளைக்குப்பின் வந்ததால் அவனுக்கு எட்டிய வீட்டின் வாசனையை பிடித்துக்கொண்டிருந்தான். வெளியே வானம் ஒருவழியாக சுருதி சேர்த்து முடித்து சோவென்று பிடிக்கத் தொடங்கிவிட்டது. தங்கம் களிக்கு மாவு கரைத்துக் கொண்டிருந்தாள். விஜயா வெங்காயம் மிளகாய் கருவாடு எல்லாம் ஒன்றாக போட்டு இடித்துக் கொண்டிருந்தாள். அத்தை கைகளையும் கால்களையும் நீளநீளமாக வைத்து கண்ணுக்கு நிலைக்காத வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தாள். அதோடு,” வையாளி பசிக்குதா சாமி?’ என்று கேட்டுவிட்டு சேலையை ஏற்றிச்செருகிக்கொண்டு களிப்பானைக்குள் துடுப்பு போட்டாள். அத்தையின் முகம் அடுப்பு வெளிச்சத்திலும் துடுப்பு அசைவிலும் விட்டுவிட்டு ஆடியது. அந்த அழகை அப்படியே வாங்கி கண்ணுக்குள் இருத்திக் கொண்டான் கொஞ்ச நேரம்.
பாரமில்லாத கட்டை வண்டி ஓடுவதுபோல வானம் இடித்துக் கொண்டிருந்தது. சூரியனை கீற்று போட்டது போன்ற மின்னல் வந்து, ‘என்ன நடக்குது இங்கே’ என்று எட்டிப் பார்த்து மறைந்தது. ஒவ்வொரு இடிக்கும் வையாளி தங்கத்தைப் போய் இறுக்க அணைத்துக் கொண்டான். கூரை ஓடு ஏதோ ஓரிடத்தில் ஒழுகி ஒரே சீராக தட்தட் என்று சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அடுப்புப் பக்கம் இருந்து காப்பி, கருவாட்டு குழம்பு, களி எல்லாம் கலந்து வாசனை வந்து கொண்டிருந்தது.
அத்தை கெட்டியான ஆவி பறக்கும் கருப்பான கருப்பில் ஒரு சின்னப்பாத்திரத்தைக் கொண்டு வந்து கூடத்தில் வைத்தாள். விஜயா, ‘அம்மா எனக்கு கொஞ்சோண்டு காபி குடுக்குறியா?” என்றாள்.
“வேணாம். களி ஆறினதும் அதச்சாப்பிடு”
“குளுருக்கு கொடுத்தா என்ன?”
“வேணாண்டி இந்த கோத்தகிரிப் பழக்கம் ரெட்டியார்பட்டிக்கு ஒத்துவராது.”
“இரு இரு, ஒரு நாளைக்கு கிழவிகிட்ட முடிஞ்சி விடுறேன்.”
“போடி இனியென்ன இருக்கு புதுசா முடிஞ்சுவிட. நன்றி கெட்ட நாயே. அந்த மனுசனுக்கு இஷ்ட மகளாச்சேன்னு பார்க்கிறேன். இல்லே, அந்த ஆடுற வாயக்கிழிச்சி உப்பு மௌகா தடவி விட்டுடுவேன்” தங்கம் களியை தட்டுகளில் வைக்க போராடிக்கொண்டிருந்தாள். அத்தை காபியை டம்ளர்களில் ஊற்றி கீழே கொட்டிவிடுமோ என்று பயப்படுகிற உயரத்தில் தூக்கி ஆற்றினாள். இரண்டு கால்களையும் ஆன மட்டும் நீளமாக நீட்டி நீவிக்கொண்டாள். காப்பியை ஆவி பறக்கப்பறக்க ரொம்ப இஷ்டமாகக் குடித்தாள். காப்பி குடிக்கிற சடங்கு முடிந்ததும் அத்தை விசுக்கென்று எழுந்து பிள்ளைகளுக்கான களித்தட்டுகளை நீட்டி, “கொஞ்சம் சூடா இருக்கு, பரவாயில்லை சுடச்சுடச்சாப்பிடுங்க. இந்தக் குளிருக்கு ஒடம்புல சூடு தங்கி இருந்தாத்தான் நல்லது,” என்றவள் தண்ணீரில் விரல்களை முக்கியெடுத்து ஏடுகட்டிய களியின் மத்தியில் குழி செய்து கருவட்டுக்குழம்பை ஊற்றினாள். கருவாடு புளியும் மிளகாயும் கலந்த வாசனை உணவுகளில் நான்தான் அரசன் என்பது போல் சுழற்றி அடித்து வந்தது. களியைப் பிள்ளையார் பிடிப்பதாகப் பிடித்து கருவாட்டு குழம்பில் தொட்டு உள்ளே தள்ளினார்கள். அது நளினமாக உள்ளிறங்கிப் போனது. குழம்பில் தூக்கி நின்ற உரைப்பு, களியின் அடுத்த பிடியைத் தானாக் கேட்டு வாங்கிக்கொண்டது. பிள்ளைகள் சாப்பிடும் அழகு ஒரு சீருக்கு வந்ததும் இனி தான் தேவையில்லை என்று அத்தை அடுப்பை நேர் செய்யப் போய்விட்டாள். வெளியே மழை எப்போதும் பெய்வது போல் அமைதியாக பெரிய பெரிய துளிகளாய்
பெய்து கொண்டிருந்தது. மழையின் சத்தம் உலகில் நிரந்தரமாக தங்கிவிட்ட ஒன்றுபோல் ஜீம்மம்ம் என்று இரைந்து கொண்டிருந்தது.
தென்னந்தட்டிகளை அத்தை சொல்லாமலே தங்கம் எடுத்துப்போட்டு அதன் மேல் சாக்குகளை விரித்துக் கொண்டிருந்தாள். வையாளி குழம்பின் உரைப்புத் தாங்காமல் அடிக்கடி தண்ணீரைக் குடித்தான். “சும்மா சும்மா தண்ணீயக் குடிக்காதே. ராத்திரியில் நெறைய உச்சா வரும்” என்றாள் அத்தை.
“வாய் எரியுது அத்தை”
“அத்தை கைப்பக்குவம் பிடிக்கலையோ மருமகனுக்கு,’
அவசரமா மறுத்தான், அத்தை ஈரக்கையோடு அவன் தலையைத் தொட்டு முத்தமிட்டாள். ‘அய்யே’… என்று வலிப்புக் காட்டினாள் விஜயா.
“போடி பொறாமை பிடிச்சவளே’ என்று செல்லமாகக் கடிந்துவிட்டு அத்தை தலையில் சாக்குக் கொங்காணி போட்டுக்கொண்டு, காற்றில் பயந்து ஆடும் லாந்தர் விளக்கை எடுத்துக்கொண்டு தொழுவுக்குப் போய் சுற்றிலும் பார்த்தாள் பூச்சிபொட்டு எதுவும் உலவுகிறதா என்று. மாடுகள் குளிரில் முடி விரைக்க நின்றிருந்தன. என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே வெறித்துப்பார்த்தபடி இருந்தாள். கொஞ்சம் கூளத்தை அள்ளித் தரையில் பரப்பி விட்டு குளிருக்கு கொஞ்சம் சூடா இருக்கும் என்று சொல்லிக் கொண்டாள். பின் வீட்டுக்குள் வந்து கதவருகில் நின்று வேலைகள் ஏதும் விடுபட்டுப் போனதா என்று வரிசையாக அடுக்கிச் சரி பார்த்துக்கொண்டாள். முடிந்த சமாதானம் கிடைத்ததும் வட்டியில் களியைப் போட்டு பெரிய பெரிய உருண்டைகளாகத் தள்ளினாள்.
இரண்டு வருடங்களாகியும் அவளால் இஷ்டமாக சாப்பிட
முடியவில்லை. படுக்கையில் உட்கார்ந்து இரண்டு நிமிடம் கண்களை
மூடி மாமாவை நினைத்துக் கொண்டாள்.
உடல் சரிந்து துணி மூட்டையில் தலையை வைத்ததும் அதற்காகவே காத்திருந்த விஜயா, அத்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
“குரங்குக்கு பெறந்தவளே இன்னும் தூங்கலியா நீ?”
“ம்ஹீம்…”
அத்தை பக்கத்தில் திரும்பி வையாளியை ஒரு கைக்கும் விஜயாவை ஒரு கைக்கும் இழுக்க தங்கம்
“அம்மா…” என்று இழுத்தாள்.
”ஏய் சும்மா படுடி… ரெண்டு கழுத வயசாகப் போகுது இனியும் என்ன நொம்மா.?”
“வயசாயிட்டா அனாதையா…?”
‘சரி சரி.’
“வாடிம்மாபப்பா.” என்று அத்தை அவளையும் இழுத்துக்கொள்ள, எது யாரோட கால் கை என்று தெரியாத படிக்கு மேலும் கீழும் கிடக்க.. காற்று வெளிப்போக முடியாதபடி அழுக்குத் துணியும் கெட்டியான சாக்கும் குளிர் தாக்காதபடி அவர்களது வெப்பத்தை காத்துக்கொடுத்தது.
தூங்கச் செய்வதற்கு தட்டிக் கொடுப்பது போல் மழை வழிந்து கொண்டிருந்தது. ஒழுகுகிற நீரைப்பிடிக்க வைத்தப் பாத்திரத்தில் குறிப்பிட்ட நேரம் விட்டு ‘ம்மிழ்ழிக்கும்’ என்ற இசை, எந்த வாத்தியமும் எழும்ப முடியாதபடி வந்து கொண்டிருந்தது. அன்றும் அடுத்த அடுத்த நாளும் மழை பெய்துகொண்டே இருந்தது. மரத்தில்
ஏறவும் கிண்ணத்தில் குதிக்கவும் விடாத மழை மீது வையாளிக்கு கோபம் கோபமாய் வந்தது. அதை ஈடு செய்ய அத்தை கம்பு அவலும் கேப்பை அவலும் இடித்துக் கொடுத்தாள்.ட்ரவுசர்ப் பொத்தாள் திணறத்திணற தின்ற வையாளி, வெட்கமில்லாமல் அத்தையை அழைத்துக்கொண்டுபோய் அடிக்கடி உட்கார்ந்து விட்டு வந்தான். நாலாம் நாள் லேசாக வானம் வெறிக்கத் தொடங்கி இருந்தது.
சூரியன் பௌர்ணமிபோல் தென்னை மரத்திற்கு மேலாக ஏறிக்கொண்டிருந்தது.
மழைக்கென்று கொண்டு வந்த ஜவ்வுத்தாளை மடக்கி கக்கத்தில் இடுக்கிக்கொண்டு அப்பா வந்தார்.
“அக்கா எக்கட.?” என்று கேட்டார். முகத்தில் சின்ன பரபரப்பு இருந்தது. வீட்டுப்பக்கம் கையை நீட்டிக்கொண்டு விஜயா முன்னால் போக நல்லா இருந்த வேட்டியை அவிழ்த்து கட்டிக்கொண்டு அப்பா வரப்பில் பயமில்லாமல் வேகமாக நடந்தார்.
கையில் பிடித்திருந்த விளக்குமாற்றைத் தூர எறிந்துவிட்டு, “வா தம்பூ… மூணு நாளா நல்ல மழ இங்க. மேகாட்டுப் பக்கம் எப்படி?”
“அக்கா… ரெண்டு நாளா அவ்வாவுக்கு உடம்பு சொல்லும்படி இல்ல”
அத்தை அப்பாவின் பேச்சை சரியாக வாங்கிக் கொள்ளவில்லை. “அந்த நாத்துக்கால் பக்கம் ஓடைக்கரை அறுத்துக்கிட்டு போயிடுச்சுதம்பூ…”
‘ம்ம்ம்.. அக்கா ரெண்டு நாளா அவ்வாவுக்கு ஜன்னி. நடமாட்டமில்லாம கெடக்கு.’
“அதெப்பிடி… அவங்களுக்கு எப்பவுமே எதுவும் வராதே..?”
“வராதுதான். இந்தக்குளிர் நேரத்தில வாயக் கொஞ்சம் கட்டி வச்சிருக்கணும், யார்தான் அவளுக்கு சொல்லமுடியும். சாமான்சட்ட ஒழுங்கு பண்ணிட்டு எங்கூடக் கெளம்புறிங்களா”
“இந்தா ஒரு நிமிட்ல… மருந்து மாயம் எதுவும் பாத்திங்களா தம்பூ…
ஒரு சொட்டு உள்ள போனா ஆழாக்கு வாந்தி வெளியே வருது” அத்தை வாய் பேசிக்கொண்டே கிளம்பத் தயாராகிக்கொண்டு இருந்தாள்.
“என்ன சாப்ட்டாங்க. மூலத்துக்கு மருந்தா கட்டைக்கால் சாப்டுற பழக்கம் உண்டு ?” அத்தை கேள்வியாக நின்றாள்.
கிழவிக்கு சீத்தமய்யா நாயக்கர் காலத்தில் இருந்தே கள் குடிக்கிறபழக்கம் இருந்தது.
தோட்டத்திற்கும் வீட்டிற்கும் அலைவது நின்று இந்தப் பத்து வருடத்தில் மூலம் வந்துவிட்டது. எங்கு சுத்தியும் சரியான மருந்து பன்னிக்கறிதான் என்பது தெளிவானபிறகு கீழத்தெருவில் அறுக்கப்படும் போதெல்லாம் காரவீட்டு ஆத்தாளுக்கென்று தடித்த வார் போட்டு ஒரு கூறு ஒதுக்கப்பட்டுவிடும். அது உள்ள போக துணை பனங்கள்தான். இந்த அடைமழையில் வேலைவெட்டிக்குப் போக வழியில்லாத கீழத்தெருவில் பன்னி சரியான அறுத்தார்கள்.
வயசு மறந்து கிழவி ஒரு பிடிபிடித்துவிட்டாள். குளுந்த காற்று. குளுந்த கள், நெய் கட்டிய பன்றித் தோல் எல்லாம் சேர்ந்து ரத்தம் சுண்டிய கிழவியின் உடலை ஆட்டி விட்டது. இந்தப் படுக்கையில்தான் கிழவியின் மொத்த ஆயுளுக்கும் பயம் கண்டிருக்கிறது. சுக்குக் கஷாயம் ஒரு மடக்கு உள்ளே தங்கிய தெளிவில் அப்பாவை கிட்டக்க அழைத்துச்சொன்னாள்.
“தேவானையையும் பிள்ளிங்களையும் கூட்டிட்டு வந்துடு” என்று. கிழவிக்குத் தோன்றிய பயத்தின் நிஜம் எல்லோருக்கும் பரவிவிட்டது. ‘கொஞ்சமா ஆட்டிப் படைச்சா..! அதான் மழையோட போறா’ என்றுகூட சொல்லத் தொடங்கி விட்டனர். ‘ஈரத்துல கட்டை சரியா வேகாது’ என்பது வரை அந்தப் பேச்சு போய் விட்டது. அத்தை திண்ணையோடு நின்று கொண்டாள். அப்பா கிழவியின் பக்கத்தில் குனிந்து சன்னமாக,
‘அக்கா வந்திட்டாங்க” என்றார். கிழவி மெதுவாக உலர்ந்த உதட்டைப் பிரித்தவாறு சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். கண்கள் ஈரமாகவும் வெளிச்சமாகவும் இருந்தது.
“வெளியவே நின்னுகிட்டா நானா எந்திரிச்சு வந்து பார்க்க
முடியும்?”
ஒவ்வொரு மாத்திரைக்கும் அழுத்தம் கொடுத்து தனியாக உச்சரித்தாள். “கெழவி சரியான எடக்குப் பிடிச்சவப்பா” என்று பொம்பளங்க கூட்டத்திலிருந்து யாரோ முனகினார்கள்.
அப்பா வந்து சொன்னார். அத்தை தயங்கி பெண்களை இரண்டு பக்கம் பிடித்துக்கொண்டு கிழவியைப் பார்க்க நடந்தாள். அத்தையை ஒட்டிக்கொண்டிருந்த வையாளியை அம்மா பிடித்து இழுத்துக் கொண்டாள்.
கிழவி அத்தையை நோக்கி கையை நீட்டினாள். அத்தை தங்கத்தின் கையை கிழவிக்குக் கொடுத்தாள். கிழவி
குலுக்கிக்கொண்டு,
தலையைக்
“உங்கையக் கொடு” என்றதும் அத்தை கை கொடுத்தாள். அந்தச் சுருங்கிய கைகளுக்குள் நிறைய குளிர்ந்து வந்தது.
“நீயும் நல்ல பிடிவாதக்காரிதான் ஒந்தலையில எங்கயோ சுழிச்சு எழுதிப்புட்டான். அதா இங்க வந்து கெடக்குற பொட்டச் சிங்களானாலும் சீத்தமய்யா வம்சம் தழைச்சிடுச்சு. இந்தா…” விரல்கள் நடுங்க தலையணைக்கு கீழே இருந்து முடிந்த சின்னத்துணி மூட்டையை எடுத்தாள். அத்தையின் கையில் வைத்து இன்னொரு கையால் பொத்தினாள். அது ஒரு நகை முடிச்சு என்பதை அத்தையைா?ல் உணர முடிந்தது. அப்படியே அதைத் தங்கத்திடம் மாற்றிவிட்டாள். உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த வையாளியை மெதுவாக பற்றி இழுத்தாள். பின்னுக்கு சாய்த்து கொண்டு முன்னோக்கி நகர்ந்தான்.
‘பொண்ணுங்க, கட்டிக்கொடுத்து புருஷன் வீட்டுக்கு போயிடுவாளுங்க. வீட்டுக்கு ஆம்பள வாரிசு நீதான். கடைசி காலத்துல நம்ம வீட்ட நம்பி வந்த அத்தையப் பார்த்துக்குவியா?
கையை மெதுவாக உருவிக்கொண்டான். தன் லீவைக் கெடுப்பதற்கென்றே இந்தக் கிழவி சாகிறாள் என்று கோபமாக வந்தது வையாளிக்கு.

One Comment on “போப்பு/தேவானை அத்தை”
Comments are closed.