அழகிய சிங்கர்/ ப்ளேக்

                                      

 14-11-25 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில்  வாசித்த கவிதை 3

சூரத்திலிருந்து வருவதற்குமுன்
நீ வந்தாய் செய்தியாய்
பய நாக்குகளைத் தொங்க வைத்துக்கொண்டு
நின்றிருந்தாய்
பொறி கலங்கும் மரண பயம்
டிவி ஸ்கிரீனில் நிழலாடியது
செய்தி வாசித்தப் பெண்
உன்னை விட்டுச் சென்றாள்
கவலைகளைப் பரப்பியபடி
நடுத்தெருவில்
காக்கைக்கு ஆகாரமான
எலியைக் கண்டு
உன்னைக் கண்டதுபோல் பதறினான் நண்பன்
கொடைக்கானல் பயணம் பார்த்துப்போ
என்றார் இன்னொரு நண்பர்
நிழலாய் நீ தொடரலாமென்றுதான்
பங்களூர் போவதைத் தவிர்த்தான் சகோதரன்
மக்களைப் பலிகொண்ட
கறுப்பு நாக்குக் கொண்டவளே
கட்டுக்கடங்காமல் உலாவத் தொடங்கிவிட்டாயா?
மக்கள் பெருக்கத்தைக் குறைக்க
யாரிடமாவது சூளுரைத்தாயா
புதிய பலிகொண்ட விபரங்களைத்
தந்த வண்ணம்
சுழன்று சுழன்று வருகின்றாயா
எழுந்தவுடன் மனதில்
உன்னைப்பற்றி செய்திதான்
நிற்க, நடக்க
சாப்பிட யாருடனும் பேச
என்றெல்லாம் நீ எங்களைத் தொடருகிறாய்
இங்கே வராதே
எங்காவது தொலைந்துபோ

அழகியசிங்கர்/ இவர் – விருட்சம் நாளிதழ்