ஸ்ரீராம்/ஜெய ஜெய ஜெயந்தி

ஃபோன் ஒரு ரிங் வந்து விட்டு நின்றது. அதிகாலை கோலம் போட வெளியில் வந்த ஜெயந்தி சட்டென உள்ளே திரும்பி ஃபோனை எடுத்தவள் ‘மிஸ்ட் கால்’ கணவன் ஜெகனிடமிருந்து என்று தெரிந்து, கீழே வைக்கப் போனவள் வாட்ஸாப்பில் ஏதோ வருவது தெரிந்து ஓபன் செய்தாள்.
அவளுடைய புகைப்படம். ‘குட்மார்னிங் மெசேஜோ’டு சுடச்சுட வந்திருந்தது.
“கண்ணழகுக் காதலியே
என்னழகு தேவதையே..
இப்போது திருப்தியா?
உன்
முகமழகு, முடியழகு
கண்ணழகு, கையழகு
இடையழகு கலைந்த உன்
உடையழகு..
ஜெயராஜ் ஓவியம்போல்
நீ மொத்தமும் அழகு
என்னருகிலேயே இருக்கும்
மெல்லியமலர்
தேவதையே
தினம் தினம் சொல்ல வேண்டுமோ
உன் அழகை…
இயல்பாய் நீ இருக்க
ரகசியமாய் ரசிப்பதில்தானடி ஆனந்தம்
இல்லையெனில்
செயற்கை சேர்ந்து விடுமடி
உன் செய்கைகளில்
செவ்விதழ் தேவதையே”
சட்டென புகைப்படம் எடுத்து, ஏற்கனவே எழுதி வைத்திருந்த கவிதையோடு அனுப்பி இருக்கிறான். அவள் முகம் விகசித்தது. மனதில் காதல் சுரந்தது. பழைய ஜெகன் மாறவில்லை என்பதில் ஒரு மனமலர்ச்சி.
இரண்டு நாட்களாய் அவனிடம் “நீ முன்போல இல்லை. என்னை கவனிப்பதில்லை. காதலிக்கும் காலத்தில் மட்டும் உருகி உருகி மெசேஜ் அனுப்பினே.. கல்யாணமானதும் அலட்சியமாகி விட்டேன் இல்ல?” என்று புலம்பியதன் விளைவு என்று தெரிந்தது.