
அலைபேசியில் மாதவனோடு பேசிய
அதிர்ச்சியில், சுகந்தியின் குதுகலம், காற்று போன பலூன் மாதிரி சப்பி விட்டது
இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி; என்ற யோசனையை விட இது ஒரு பிரச்சனையா; என்பதில் கூட அவளுக்கு தெளிவில்லை.
உடனடியாக சுகந்தி தனது அலுவலகத்திலிருந்து வேகமாக அடையாறு நோக்கி தன் ஸ்கூட்டரில் விரைந்தவள்; வழியில் கொஞ்சம் இனிப்பும் வாங்கிக் கொண்டாள்.
அடையாறு பேருந்து நிலையம் அருகே இருந்த, அந்த அடுக்குமாடி குடியிருப்பில், இருபது குடியிருப்புகள் மட்டும் இருந்ததால், அதிக கூட்டம்; சத்தம் இல்லாமல் அமைதியாக இருந்தது; வார இறுதியிலும்.
மின்தூக்கியில் ஏறினவள், வழிப்பாதையின் கடைசி குடியிருப்பை அடைந்து அழைப்பு மணியை அழுத்த கையை உயர்த்த அவசியம் இல்லாது , சிவனேசன், கதவைத் திறந்தார்.
“வா! வா!” என்று உற்சாக குரல் கொடுத்தவர்; தன் மனைவி சுந்தரியை அழைத்து’ யார் வந்திருக்கா; பார்’ என்றவர்; சுகந்தி பக்கம் திரும்பி, அவன் இல்லையே! சிநேகிதர்களோடு வெளியே போயிருக்கான்’ என்றார்.
மாதவனின் அம்மா, புன்னகையுடன்’ வாம்மா! ஏது ‘திடுதிப்’ பென இங்கு வந்திருக்கிறாயே; இங்கு வந்திருக்கிறது, உன் அப்பா, அம்மாவுக்கு தெரியுமா?’ என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்
‘அத்தை! நான் உங்கள் இருவரையும்,கலா அண்ணியையும் பார்க்கத்தான் வந்தேன்’.
பேச்சுக் குரல் கேட்டு எட்டிப்பார்த்த கலா அண்ணியிடம் இனிப்பைக் கொடுத்தவள்;’ ‘அண்ணி சாப்பிடலாமா?’ என்று உரிமையுடன் கேட்டவளை,’ உட்கார்! மூவரும் சேர்ந்தே சாப்பிடலாம்’ என்றாள் கலா அண்ணி.
இரண்டு மணி நேரம் இனிமையான, பேச்சும் இயல்பான சிரிப்புமாக போயிற்று.
விடைபெறும் நேரத்தில், அடுத்தமுறை வரும் போது அவன் இருக்கும் போது வா!’ என்ற போது;’அண்ணி! நான் உங்களை எல்லாம் பார்க்கத்தான் வந்தேன்.’ என்று சொல்லிவிட்டு கிளம்பின சுகந்தி யின் மனம் மகிழ்ந்து மலர்ந்திருந்தது.
இத்தனை அன்பானவர்களை விட்டு எவராவது தனிக்குடித்தனம் போவார்களா? வீட்டுப் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள அன்பான வீட்டுப் பெரியவர்கள் இருக்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில் ,கையில் ஒரு அளவு பணம் சேர்த்து வைக்கணும் ;என்றால் கொஞ்சம் அனுசரித்துப் போவதில் தவறு ஒன்றும் இல்லை’.
இந்த மாதவனுக்கு ஏன் புத்தி இப்படி மாறாட்டமாய் போகிறது’ என்று நினைத்துக் கொண்டவள்; அவனை ஃபோனில் அழைத்தாள்.
‘மாதவன்! நீ ஃபோன் பேசிய பின் எனக்கு மனம் விட்டுப் போய்விட்டது.
எனக்கு தனி குடித்தனம் போகும் ஆவல் கொஞ்சமும். இல்லை.
நம் வாழ்வு சீரும் சிறப்புமாக இருக்க வேண்டுமெனில், நாம் கூட்டுக் குடித்தனத்தில் தான் இருக்க வேண்டும்; என்பதை
நீ முதலில் புரிந்து கொள்.
அலை பேசியில் அடுத்த முனையில் இருந்த மாதவன் முகமும் அகமும் மலர்ந்தது.
சுகந்தியின் மன ஓட்டத்தை அறிந்து கொள்ள அவன் போட்ட திட்டம், இனிதே அரங்கேறிய மகிழ்ச்சியில் இருந்தான்; மாதவன்.
