பி.ஆர்.கிரிஜா/கூட்டுப் பிரார்த்தனை

தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு இந்த அறுவர் குழு கிளம்பி விடும். இவர்கள்
அறுவருக்கும் உள்ள ஒற்றுமை இசை. ஒருவர் நன்றாகப் பாடக் கூடியவர். மற்ற ஐந்து பேரும் ஒவ்வொரு வாத்தியம் வாசிப்பதில் வல்லவர்கள். இவர்கள் அறுவருக்கும் இறை நம்பிக்கை அதிகம். காலை ஒரு மணி நேரம் ஒரு பூங்கா வாசலில் நின்று பஜனை செய்து விட்டு கிளம்பி விடுவார்கள். மீண்டும் அவர்களை அடுத்த நாள் காலை ஐந்து மணிக்குத் தான் பார்க்க முடியும். அந்த பூங்காவைச் சுற்றியுள்ள அனைவருக்கும் இவர்களை மிகவும் பிடிக்கும். யாருக்கும் தொந்தரவு செய்யாமல் சன்னமாக இசை பொழிந்து விட்டு சரியாக ஆறு மணிக்கு தங்கள் வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுவார்கள்.
ஒரு நாள் இவர்கள் வரவில்லை. அந்த பூங்காவைச் சுற்றியுள்ள குடியிருப்பு மக்களுக்கு ஒரே கவலை. இன்று என்னவாயிற்று இவர்களுக்கு என்று.
அதே சமயம் இந்த அறுவரும் அடுத்த தெருவில் அதே ஐந்து மணிக்கு ஒரு குடிசையின் முன்பு வாசித்துக் கொண்டிருந்தனர். சாவின் விளிம்பில் உள்ள ஒரு வயதான பெண்மணியின் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர். அவள் இந்த அப்பழுக்கற்ற, பிசிறில்லா இசையை ரசித்தவாறு கண்ணை மூடினாள்.
நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த அவள் உயிர் பிரிந்தது. இதுவும் இறைவன் சித்தம் என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டு அந்த அறுவரும் அந்த மூதாட்டிக்கு இசையினாலேயே இறுதி மரியாதை செலுத்தினர்.
அந்த இறைவனுக்கு மனதார நன்றி செலுத்தி விட்டு அவரவர் இடத்திற்குத் திரும்பினார்கள்.

29/11/2025

2 Comments on “பி.ஆர்.கிரிஜா/கூட்டுப் பிரார்த்தனை”

Comments are closed.