S.அர்ஜுன்/தத்துவமஸி

ஹரே ராமா ஹரே ராமா,
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
தெரு முழுதும் ஒலிக்கச்செய்து, ஒரு சிறிய குழு தாளம் போட்டு பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் சென்றது.
சப்தம் கேட்டு வீட்டிலிருந்து வேகமாக வந்த சிறுவன் தினேஷ், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான்.
அவனைத் தேடி வந்த அவனது அம்மா சுஜாதா, மகனைப் பார்த்து சிரித்தபடி..
“என்னடா.. அப்படி பாக்கிறே?..” என்றாள்.
“ஒண்ணும் இல்லம்மா.. இப்படி பக்தி செலுத்துறவங்க எல்லோருமே அம்பது வயசு கடந்தவங்களா இருக்காங்களே?.. ஏன்மா?..”
சுஜாதா சிரிப்பை அடக்கிக்கொண்டு..
“பக்திக்கு வயசெல்லாம் பெரிய விஷயமில்ல.. சின்ன வயசிலேயே பெருமாள் பக்தன் ஆன பிரகலாதன் கதை உனக்குத் தெரியுமே?..” என்றாள்.
“ஆனா.. அதெல்லாம் புராண காலத்து உதாரணம் தானே? இப்ப கோவிலுக்குப் போனா.. பெரும்பாலும் வயசானவங்களா தானே இருக்காங்க..”
மடக்கினான் தினேஷ்.
ஒரு நிமிடம் மௌனமான சுஜாதா..
“சரி.. நான் அவ்வளவா கோயிலுக்கு போறதில்ல.. கவனிச்சிருக்கியா?..” என்றாள்.
“ஆமாம்மா..”
“பக்தி என்பதே இறைவனைத் தேடும் வழிபாடு தான்.. எல்லா உயிரும் கடவுள்தான்னு முடிவு பண்ணிட்டா.. பார்க்கும் இடமெல்லாம் கடவுள் தான்.. கோவிலுக்கு போய் தேட வேண்டியதில்லை..”
“அப்படியா?..”
“அதனால்தான் அடுத்தவரை வாழ்த்தும்போது ‘தத்துவமஸி’ – நீ அதுவாக (இறைவனாக) இருக்கிறாய் – என்றும், நமது பிரார்த்தனையின் போது ‘அஹம் பிரம்மாஸ்மி’ – நான் பரம்பொருளாக இருக்கிறேன் – என்றும் சொல்லும் வழக்கம் இந்து மதத்தில் இருக்கிறது..” என்றாள் சுஜாதா.
“கிரேட்மா.. குட் லெஸன்..” என்றான் தினேஷ்.

One Comment on “S.அர்ஜுன்/தத்துவமஸி”

  1. பார்க்கும் இடத்தில் எல்லாம் நிந்தன் பிம்பம் தோன்றுதடா நந்தலாலா..மிகப் பெரிய உண்மையை அழகான குத்திக் கதை மூலம் சொல்லி விட்டீர்கள். வாழ்த்துகள்

Comments are closed.