தி சோ வேணுகோபாலன் கவிதைகள் – விசாரணை

தொகுப்பாசிரியர் : அழகியசிங்கர்

   

                                       

    தத்துவம்தானே? வெங்காயம்!
    போடா! போ!
    மூடியதை மூடிப்
    பின்மூடி?...முடிவா?...
    உரித்தால்? மேலும் உரித்தால்?

    கண்ணீர் கொட்டும்
    முட்டாளுக்கு உருக்கம்:
    மூளைமோதினால்
    தலைக்குத் தேங்காய்!

    உனக்கும் எனக்கும்
    முடிந்தால்
    இதயத்துக்கு மருந்து;
    அநேகருக்கு
    வயிற்றை நிரப்ப
    வேகும் கூத்துத்தான்!

    வெட்டித் தனமாய்
    வேடிக்கையாய்
    அட; வீம்புக்குத்தான்
    வைத்தாலும்
    தோலுரிக்கும் தொல்லையின்றி
    வேறென்ன கண்டபயன்?

    முட்டிமோதி முடிந்தமட்டும் 
    பார்த்து
    முக்கித் திணறி முடிவில்
    சிக்காத சிக்கல் என்று
    நடையைக் கட்டும்
    வேலை!