16.07.2018

பொதுவாக ஒரு சிறுபத்திரிகை 3 வருடங்கள் தொடர்ந்து வருவது ரொம்ப கடினம். அதுவும் ஒரு குழுவாக நடத்தப்பட்டால் 3 வருடம் தாக்குப்பிடிப்பது பெரிய விஷயம். குழுவில் உள்ளவர்களுக்குள் கருத்து வேற்றுமை தோன்றி பத்திரிகை நின்று விடும்.
தற்செயலாக எனக்கு ஒரு கசடதபறவின் கடைசி இதழ் கிடைத்தது. ஏன் அந்தப் பத்திரிகையைத் தொடர்ந்து கொண்டு வர முடியவில்லை என்று காரணம் எழுதப்பட்டிருந்தது. அதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஜுன் – ஜூலை 1973 கசடதபற இதழில் வெளிவந்த தலையங்கம்.
“மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய கசடதபற இந்த அறிவிப்புடன் தனது வெளியீட்டை நிறுத்திக் கொள்கிறது. இலக்கியச் சிற்றேடுகளின் புறப்பாடும், நிப்பாட்டும் ஆன வாழ்க்கை அதை இயக்குபவர்களின் உற்சாகத் தைப் பொறுத்தது என்று இந்தியச் சிற்றேடுகளைப் பற்றிக் கூறப்படுவதுண்டு. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டு வெளியீட்டை நிறுத்தி கொள்கிறது கசடதபற. இலக்கியம் என்பதை ஒரு கலைஞனின் அனுபவத்தைக் கொண்டு பார்த்தால் அதற்குத் தொடர்ச்சிதான் குறிப்பே தவிரத் தொலைதல் இல்லை என்பது தெளிவாகிறது. இலக்கிய முயற்சிகளும் அப்படித்தான். கசடதபறவின் இதழ்கள் வெளிவந்த சமயத்தில் அதனோடு தொடர்பு கொண்டிருந்த அத்தனைப் பேர்களுக்கும் கசடதபற நன்றி தெரிவிக்கிறது.”
கசடதபற பத்திரிகைக்குப் பின் வந்த பிரக்ஞை இதழும் நின்றுவிட்டது. 3 ஆண்டுகள் என்றுதான் நினைக்கிறேன். இப்படிச் சிறு பத்திரிகை வருவதும் நிற்பதும் வாடிக்கை.
சமீபத்தில் தமிழ் இந்து 14.07.2018 அன்று வந்திருந்த பத்திரிகையின் தலையங்கத்தில் üசிறுபத்திரிக்கைகள் களம் மாற வேண்டும்,ý என்ற பெயரில் சிறு பத்திரிகையைப் பற்றிய குறிப்பு வந்தது.
இதில் தமிழ் சிறுபத்திரிகை தன் வாசக பலத்தை இழந்து கொண்டிருப்பதாகத் தமிழ் இந்து புலம்புகிறது. எப்போது சிறுபத்திரிகைக்கு வாசக பலம் இருந்திருக்கிறது. கசடதபற பிரக்ஞை பத்திரிகைகள் வந்த காலத்தில் கூட ஆயிரம் பேர்கள் அந்தப் பத்திரிகைகளைப் படித்திருப்பார்களா என்பது சந்தேகம்.
எனக்குத் தெரிந்து ழ பத்திரிகையை 500 பிரதிகள்தான் அச்சடிப்பது வழக்கம். ஏன் இந்த மாதத்திலிருந்து 30 ஆண்டை நிறைவு செய்யும் விருட்சம் இதழ் 700 பிரதிகள் மேல் தாண்டியது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் லைப்பரரி ஆர்டர் வாங்குவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். ஒவ்வொரு ஆண்டும் வாசகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஏன் குறைந்துகொண்டே போவார்கள். இதையெல்லாம் உணர்ந்துதான் சிறுபத்தரிகையைக் கொண்டு வர வேண்டி உள்ளது.
சிறு பத்திரிகையைப் பயன்படுத்திக்கொண்டு எழுதும் எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு. பெரிய பத்திரிகைகளில் சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் புகுந்துகொண்ட பின் தீவிர எழுத்தாளர்கள் என்பதே இல்லாமல் பத்தரிகை உலகம் ஜனநாயகப்படுத்தப்பட்டு விட்டது.
ஐராவதம் என்ற என் நண்பர் சொல்வார் : 'வேற வழி இல்லாதவர்கள்தான் சிறுபத்திரிக்கையில் எழுதுவார்கள்' என்று. அது ஓரளவு உண்மை. நான் 1988ஆம் ஆண்டு விருட்சம் ஆரம்பித்தேன். அதன் தொடர்ச்சியாக 30 ஆண்டுகளில் பெரிய வித்தியாசத்தை நான் உணரவே இல்லை.
எப்போதும் போல சிறுபத்திரிகையைப் படிக்காதவர்கள் அப்போதும் உண்டு. இப்போதும் உண்டு. சரி, சிறுபத்திரிகை வர வேண்டுமா? வேண்டாமா? கட்டாயம் வேண்டும்.
(இன்னும் வரும்)
