
பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சிகால வேட்கைமிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கைகள் கூட வாயைத் திறந்துகொண்டு மௌனமாக மரங் களில் உட்கார்ந்திருந்தன. நாய்கள் மட்டும் எச்சில் இலை களுக்காக பிரமாதமாக ரகளை செய்து கொண்டிருந்தன. பிராமணர்கள் துடித்துக்கொண்டு நடந்து வந்து சேர்ந் தார்கள்.
புரோஹிதர் கண்ணை மூடிக் கொண்டு மந்திரங்களை அர்த்தமில்லாமல் ஓட்டினார். ‘ பிராசீஞவிதி ‘ ‘ பவித்ரம்’ ‘திருத்வா ‘ என்பவைகளையும் மந்திரத்துடன் சேர்த்து ஒரே , ராகத்தில் பாடிக்கொண்டே போனார். பிராமணர்களுக்கு வஸ்திரம், கும்பம், தக்ஷிணை இவைகள் கொடுக்கப்பட்டு சாப்பிட உட்கார்ந்தார்கள்.
சுந்தரேசய்யரின் தாயாருக்கு அன்று சிரார்த்தம். அவர் நாஸ்திகருமல்ல, ஆஸ்திகருமல்ல. தென்னிந்திய ஆங்கிலம் படித்த பிராமணர்களின் திரிசங்கு கூட்டத்தைச் சேர்ந்தவர். ஸ்நான ஸந்தியா வந்த ருதிகள் விதிப்படி நடக்காது. ஆனால் தர்ப்பணமும் சிரார்த்தமும் மட்டும் தவறாமல் நடை பெறும். அந்த தினங்களில் மட்டும் விபூதி, பஞ்சகச்சம் இவைகள் பவித்திரத்தை சந்திக்கும். சுந்தரேசய்யரிடம் பஜனை ஒன்றும் விளங்கும். அவர் அதில் அஸாத்திய மோகங்கொண்டவர். ராம ஸங்கீர்த்தனத்தில் உருகிக் கண்ணீர் விடுவார். ஆநந்தத் தாண்டவமாடுவார். அதற் காக அவரை ஊரில் கொஞ்சம் கேலி கூட செய்கிறதுண்டு. ஆனால் மொத்தத்தில் வெகு ஸாதுவான பிரகிருதி. பிச்சைக் காரனென்றால் ஏதாவது கொடுக்காமல் அனுப்பமாட்டார். அதிலும் கூன் குருடென்றால் அரை, கால் என்று கொடுத்து விடுவார். இதற்காக அவரைப்பற்றி ஊரில் உலகம் தெரியா தவரென்றும், கொஞ்சம் ‘கிருக்கு’ மநுஷ்யனென்றும் பேசிக்கொள்வதுண்டு.
பிராமணர்கள் சாப்பாடு முடிந்து பிண்டப் பிர தானமும் ஆய்விட்டது. பிராமணர்கள் ‘ திருப்தி’ சொல்லவேண்டிய கட்டம். சுந்தரேசய்யர் மூன்று வயதுக் குழந்தை, வாசலில் விளையாடிக்கொண்டிருந்தவன் உள்ளே ஓடி வந்து,
” அப்பா, வாசல்லே பாட்டி வந்திருக்கா. சாதம் வேணுமாம் ” என்றான்.
“பாட்டி வந்திருக்காளா ? அதார்ரா ?” என்று கேட்டுக் கொண்டே சுந்தரேசய்யர் வாசலில் போய்ப் பார்த்தார்.
வாசற்படியில் கையில் தடியும் தகரக் குவளையுமுள்ள ஒரு குறக்கிழவி சாய்ந்துகொண்டிருந்தாள்.
“ஐயோ! கிருகிருண்ணு வருதே. இந்தப் பாவி ஊர்லே ஒரு பிடி சோறு போடறவங்க இல்லையா ? ஐயோ ” என்று பெருமூச்சுக்களிடையே சொல்லிக்கொண்டிருந்தாள்.
அந்த தவிப்பைப் பார்த்த சுந்தரேசய்யர் மனதில் திடீரென்று ஏதோ ஓர் எண்ணம் ஏற்பட்டது. ஜாதியாசாரம் என்று சொல்லப்படும் மூடபக்தியை மனிதனின் ஸ்வபாவ குணமான இரக்கம் ஒரேயடியில் வென்று விட்டது. ஒரு நிமிஷத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதையும் தீர் மானித்து, அதற்கு மதநம்பிக்கைக்கேற்ற சமாதானத்தை யும் மனதிற்கொண்டார்.
சட்டென்று உள்ளே சென்று ஒரு பிண்டத்தையும் தன் தீர்த்த கலசத்தையும் எடுத்துக் கொண்டு வாசலில் வந்து உருண்டையைக் கலசத்தில் கரைத்துக் கிழவியின் குவளை யில் ‘ பிடி’ என்று ஊற்றினார். அதை மடமடவென்று குடித்துவிட்டு கிழ வி, ” அப்பாடா, உசிர் வந்திச்சு ! மகாராசா, நீ நல்லா இருக்கணும். உன்னைப் பெத்த வயிறு என் வயிறைப் போலே குளிரணும் ” என்று சொல்லி சிரமம் மேலிட்டு படியில் சாய்ந்துவிட்டாள்.
” என்ன, என்ன !” என்று ஓடி வந்து பிராமணர்கள் இதைப் பார்த்துத் திகைத்துப் போய், ” அடாடாடா, என்ன அபசாரம்! சிரார்த்தம் நஷ்டமாய்விட்டதே! என்ன அக்ரமம்! யார் இப்படி சிரார்த்தம் செய்யச் சொன்னார்கள்!” என்றார்கள்.
“ஏன் ?” என்றார் சுந்தரேசய்யர்.
“வாயசத்துக்குக்கூட இன்னும் பிண்டம் வைக்கவில்லை. பித்ருக்கள் காக்கையாக வந்து காத்திருப்பார்களே !”
“மனித ரூபத்துடன் வந்து என் தாயார் இதோ திருப்தி யடைந்துவிட்டாளே ! காக்காயைக் காட்டிலும் மனித ஜன்மம் மேலல்லவா ?”
”உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. உம், இனி மேல் இங்கே ஜலபானம் செய்யக்கூடாது. ஓய், சாஸ்திரி களே, தாம்பூலத்தை இங்கேயே எறிந்துவிடும் ” என்று சொல்லி பிராமணர்கள் வஸ்திரம், கும்பம், தக்ஷிணைகளை கைபடாமல் எடுத்துக்கொண்டு, கீழே கால்வைத்துக்கூட நடக்காமல் சென்றார்கள்.
“ஐயோ, இதென்ன, இப்படிச் செய்துவிட்டீர்களே !” என்று கவலையோடு மனைவி வெளியே வந்தாள்.
“என்னடி அசடு ! வாசலில் பார் அம்மா உருவெடுத்து வந்திருப்பதை !”
