தேவன்/வீரபாகுவின் சஞ்சலம்

வீரபாகு சொல்கிறார்:

என் மனதில் என்னமோ சாந்தியே இல்லை; அன்றைக்கும் இல்லை; இன்றைக்கும் இல்லை. உலகம் எல்லாம் சேர்ந்து, நான் கிராதகன், கொலை பாதகன் என்று தூற்றின. அந்தக் காலத்திலும் சஞ்சல சித்தனாக அலைந்தேன். இப்போது உலகம் ஒரே நொடியில் அதன் தீர்ப்பை மாற்றிக் கொண்டு நான் என் கடமையைத் துணிச்சலுடன் செய்தேன் என்று பாராட்டுகிறது. அந்தக் குரல் என் மூளையை எட்டி என் ஹிருதயத்தை சமாதானப் படுத்துகிறதோ என்றால் – அதுவும் இல்லை.
ரயில் உத்தியோகத்தில் நான் நுழைந்து பதினெட்டு வருஷங்கள் ஆகிவிட்டன. வேலைக்குச் சேரும் காலத்திலேயே பெரிய மனிதர் சிபார்சில் சேர்ந்தேன். ஆகையால், நல்ல சம்பளத்தில் உத்தியோகம் ஆரம்பித்தது; நானும் சோம்பேறி இல்லை. நன்றாக உழைத்தேன்; மேல் அதிகாரிகளைத் திருப்தி செய்தேன்; அதனால் வருமானத்தையும் மள மளவென்று உயர்த்திக் கொண்டேன். அதன் காரணமாக என்னைச் சுற்றிப் பொறாமைக்காரர்கள்
ஏராளமாக இருந்தார்கள்; வளர்ந்தார்கள்; என்னை ஓயாமல் தூஷித்தார்கள். ஆனால், என்னைச் செய்யக் கூடியது எதுவும் இல்லை. நான் ஒரு நிமிஷம் இல்லையென்றால் அவர்கள் பாடு சங்கடம் ஆகிவிடுமே…! இதே காரணத்தினால் நான் ஆபீஸில் லீவ் எடுத்துக் கொண்டதே இல்லை. ஆகவே, அந்த வருஷம் நான் பத்து நாட்கள் லீவ் எடுத்துக் கொண்டபோது, என் ஸகாக்கள், ‘ஏதோ உ த்பாதம் வரப் போகிறது… வீரபாகு லீவ் எடுத்து விட்டான்!” என்று தமாஷாகப் பேசிக் கொண்டது என் காதில் பட்டது. பற்களில் விஷப்பல் என்கிறார்களே – அதில் எத்தனை உண்மை இருக்கிறது!
என்னுடன் கூட லீவ் எடுத்துக் கொண்டவன் விருத்தாசலம். இவனைப் பற்றி இங்கே ஒரு வார்த்தை சொல்லியாக வேண்டும். பதினெட்டு வருஷ ஸர்வீஸில் என் வாழ்க்கையில் யாரேனும் ஒருவன் சளைக்காது என்னிடம் விச்வாஸமாக இருந்திருக்கிறான் என்றால் அவன் இவன் தான். எனக்கு உதவியாக இருப்பவன் என்றாலும், இவ்வளவு உண்மையாக இவன் அமையவேண்டு மென்பதில்லையே. நான் இட்ட கட்டளையைக் கீழ்ப் படியும் எத்தனையோ பேர் என்னை வெறுத்துக் கொண்டே செய்யும்போது, இவன் நான் எப்போது என்ன சொல்வேன் என்று காத்திருப்பான்! என் பின்னால் என்னைக் குறைவாக யாராவது பேசினாலும் சகிக்க மாட்டான். என் உலகம் என் உத்தியோகம் என்றால், விருத்தாசலத்தின் உலகம் நானாக இருந்தேன். இப்போது நான் லீவ் எடுத்துக் கொண்ட போது, எனக்காகவே ஆறு மாத கர்ப்பிணியான தனது மனைவியைப் பிறந்தகம் அனுப்பிவிட்டு, என் கூடவே அவனும் கிளம்பினான்.
என் பெட்டி படுக்கைகளுடன், ‘ஸகிண்ட் கிளாஸில்’
ஏறினேன். விருத்தாசலம் மூன்றாம் கிளாஸில் தான் இருந்தான் என்றாலும், பக்கத்து வண்டியாகப் பார்த்து ஏறிவிட்டான். ஆகையால் நிற்குமிட மெல்லாம் என்னை வந்து கவனித்துக் கொண்டான். வானம் கறுத்து, இரண்டொரு மழைத்துளிகள் கூட விழுந்து கொண்டிருந்த படியால் நான் விருத்தாசலத்தை, “ஏன் தொந்தரை செய்து கொள்கிறாய்! வேண்டுமானால் நான் சொல்லி அனுப்புகிறேனே!” என்று நிறுத்த முயன்றேன். அவன்
கேட்கவில்லை.
அது திருநெல்வேலி ஜங்ஷன் என்று நினைக்கிறேன். ஏழெட்டு தினங்களாகவே அங்கே விட்டுவிட்டுப் பெய்து கொண்டிருந்த மழை பலமாகப் பிடித்துக் கொண்டது. என் பெட்டியைத் தடார் என்று திறந்து கொண்டு ஒரு கான்ஸ்டபிள் ஏறினான். அவன் பின்னால் ஒரு ஸ்திரீயும் ஒரு போலீஸ் ஆபீஸரும் ஏறினார்கள். மூவரும் என்னைத் தாண்டி அப்பால் சென்றார்கள். போகும் போது நான் கவனித்தேன். சுமார் 28 வயதுள்ள அந்த ஸ்திரீ, சௌந்தர்யத்தின் சிகரத்தைப் பிடித்து விட்டாள் என்று சொல்லலாம். அவள் தனது நீண்ட கேசத்தைப் பெரிய முடிச்சாகப் போட்டிருந்தாள். நெற்றியையும் நாசியையும் பார்த்த பேர், தந்தத்தில் கடைந்தது என்று தான் எண்ணுவார்கள். ஆனால் அந்த வேல் விழியையும் பவழ உதடுகளையும் கண்டுவிட்டால், அப்ஸர ஸ்திரீ என்று சந்தேகிப்பார்கள். அழகு என்பது வேறு, கவர்ச்சி என்பது வேறு – அழகாயிருப்பவர் கவர்ச்சிகரமாகவும் இருப்பார் என்று சட்டம் இல்லை என்று சில பேர் சொல்வார்கள். இந்த உருவத்தில் அழகும், கவர்ச்சியும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன! ‘போலீஸ் ஆபீஸர் அதிர்ஷ்டசாலி, சரியான மனைவியைப் பொறுக்கிக் கொண்டார்’ என்று நான் நினைத்த சமயம், ‘அப்பப்பா, என்ன மழை!
நியூ ஸென்ஸ்!” என்று சொல்லிக் கொண்டு அந்த ஆபீஸர் என் எதிரே வந்து உட்கார்ந்தார்.
“குடும்பத்துடன் போவது இன்னும் சங்கடம்” என்றேன் நான்.
அவர் என்னைப் பார்த்துவிட்டு, “குடும்பமா! ஹஹ்ஹா!” என்று சிரித்தார். “அந்த அம்மாள் என் ஸம்ஸாரம் என்று நினைத்து விட்டீர்களா! பேஷ், பேஷ்…! நமக்கு வேண்டாம் ஸார், அந்த பாக்கியம்! அது கிட்டி இருந்தால் நான் இன்றைக்கு பிதிர் லோகத்தில் இருக்க வேண்டும். அதற்கு விஷப் பாம்பைக் கல்யாணம் செய்து கொள்ளலாமே ஸந்தோஷமாக. ஒரு நாள் நிச்சயம் கடிக்கும் என்றாவது எதிர் பார்க்கலாமே!” என்று கூறினார் பட படப்பாக.
அவரைச் சமாதானப் படுத்தினேன். அவருக்கு ஒரு ஸிகரெட்டையும் எடுத்துப் பற்ற வைத்தேன். அவர் விஷயத்தைச் சொன்னார்.
“அந்த ஸ்திரீயின் பெயர் சுகந்த சுந்தரி. ஒரு பிரபல | வியாபாரியின் மனைவியாக இருந்தவள். அந்தப் பயித்தியக்கார மனிதன், கண்ணாடி விரியன் உடல் அழகாயிருக்கிறதே உள்ளமும் அப்படியே இருக்கும் என்று * எண்ணிவிட்டான். ஒரு நாள் சுந்தரி அவனுக்கு விஷம் * வைத்துத் தீர்த்து விட்டாள். பேப்பரில் நாலு மாசம் முந்தி இதே செய்தியாக இருந்ததே, தெரியாதா!” என்று கேட்டார்.
எனக்கு ஞாபகம் வந்தது. ஒரு ஸ்திரீ புருஷனைக் கொலை செய்ததாகவும், விஷம் விற்ற கடைக்காரர்கூட சாக்ஷியம் சொன்னதாகவும், புருஷனுக்கும் மனைவிக்கும்
அடிக்கடி சண்டை பூசல்கள் உண்டென்று குமாஸ்தா கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. கடைசியில் நீதிபதி, சுகந்த சுந்தரியைக் குற்றவாளி என்று தீர்ப்புச் செய்ததும் பளிச்சென்று நினைவுக்கு வந்தது. ”ஆஹா, இவளா இந்தக் கொடூரமான காரியத்தைச் செய்தவள்? களங்கமற்ற சந்திரன் போன்ற முகத்தை வைத்துக் கொண்டு, கரு நெஞ்சம் படைத்தவளா இவள்?” என்னால் நம்ப முடியவில்லை. துணிச்சலுடன் இன்ஸ்பெக்டரிடம் என் மனதில் பட்டதைச் சொல்லி விட்டேன். அவர் மறுபடி சிரித்தார்.
“பெண்மையின் அழகு உலகத்தை மதி மயங்கச் செய்கிறது. நீர் என்ன விதிவிலக்கு! சாக்ஷிகளின் வாக்கு மூலத்தின் மீது கூட அது அவநம்பிக்கை உண்டாக்குகிறது. ஆனால், எவன் பெண்ணின் முகத்தைப் பார்த்துத் தீர்ப்புச் சொல்கிறானோ, அவன் தவறு தான் செய்வான்… நல்ல வேளை, நீர் ஜட்ஜாக இல்லை. இருந்திருந்தால் இந்த ஸர்ப்பத்துக்கு ஒரு தங்கப் பதக்கம் கூடப் பரிசாக வழங்கி இருப்பீர் போல் இருக்கிறது!” என்று என்னை ஏளனம் செய்தார்.
“அதிருக்கட்டும். என்னால் இவள் அந்தப் பாதகம் செய்யக் கூடியவள் என்று நம்ப முடியவில்லையே!” என்றேன்.
அந்த சமயம் ஏதோ ஸ்டேஷனில் ரயில் நின்றது. விருத்தாசலம் என்னைப் பார்க்க வந்தான். அவனிடமும் விஷயத்தைச் சொன்னேன். அவன் அடுத்த பெட்டியின் பக்கமாக நடந்து, ஜாடையாக சுகந்த சுந்தரியைக் கவனித்துவிட்டுத் திரும்பினான். “மனுஷியைப் பார்த்தால் தோன்றவில்லை. உண்மை எப்படியோ…! ஏன் ஸார் இவள் புருஷனைக் கொலை செய்யணும்?” என்று | விசாரித்தான் அங்கலாய்ப்புடன்.
“பணத்தின் மேல் ஆசைதான். கிழவன் செத்தவுடன் ஐந்து லக்ஷ ரூபாய் சுளையாகக் கிடைக்கிறதே இனிமேல் இவள் இஷ்டம் போல் இருக்கலாம் அல்லவா?” என்றார் இன்ஸ்பெக்டர்.
பிறகு என் முகத்தைக் கவனித்து, “நான் சொல்வதெல்லாம் உங்களுக்கு நம்பிக்கையாகத் தோன்ற வில்லை. மொத்தம் பதினேழு சாட்சிகளை விசாரித்திருக் கிறோம், ஸார்!” என்றார்.
“என்னமோ, ஸார்!” என்றேன்.
“இந்த மாதிரி பெண் பிள்ளைகளைப் பெரிய பானையில் போட்டு, கோட்டை அடுப்பின் மேல் ஏற்றி, வதக்கவேண்டும், ஸார்! ஹைக்கோர்ட்டுக்கு அப்பீல் செய்திருக்கிறாள், லங்கினி. ‘பெயில்’ கிடையாது என்று சொல்லி விட்டோம். தண்டனை இரட்டிப்பாகா விட்டால் பாருங்கள்!” என்றார்.
“ஓஹோ! அது தான் இப்போது அவளை அழைத்துப் போகிறீர்களோ!” என்றேன்.
இதற்குப் பதில் சொல்லாமல் வேறெதையோ உற்றுக் கேட்பவர் போலிருந்தார் இன்ஸ்பெக்டர். பிறகு என்னைக் கூப்பிட்டு, “அப்படி எட்டிப் பாருங்கள், அம்மாளை! கோபாவேசத்தில் இருக்கிறார். அழகான முகம் எப்படி கோரமாகி விட்டது! தளிர்க் கரங்கள் பிசாசத்தின் கைகளாக வீசுகின்றன! இப்போது சொல்லுவீர்கள்!” என்றார்.
நான் பார்த்தேன், சுந்தரி, அவளுக்குக் காவல் இருந்த கான்ஸ்டபிளுடன் ஏதோ வாக்குவாதம் செய்திருக்கிறாள். அவனும் பிடிவாதமாக இருக்கவே, அவள் கோர ரூபிணி க மாறி, ரௌத்ர பேதாளியாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தாள். பழைய சௌந்தர்ய வதனம் எங்கே போயிற்று, மிருதுத் தன்மையும் ஸாத்வீக முகபாவங்களும் எப்படி மறைந்தன என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. இவர்கள் வாக்குவாதம் முற்றவே, சமாதானம் நிலவச் செய்ய இன்ஸ்பெக்டர் எழுந்து செல்ல வேண்டி இருந்தது!
நான் வெளியே நின்று கொண்டிருந்த விருத்தாசலத்தைப் பார்த்தேன், ”உனக்கு என்ன தோன்றுகிறது!” என்று கேட்டேன்.
அவனுக்குத் தோன்றியதைச் சொல்ல பகவான் அவனுக்குச் சந்தர்ப்பமே கொடுக்கவில்லை. அதை நான் அறிந்திருதாலாவது, அவ்வளவு கொடூரமானதொரு உத்தரவை அன்றிரவு நான் அவனுக்குக் கொடுத்திருக்க மாட்டேன். ஆனால், விதியின் விளையாட்டுகளைக் கண்டது யார்? மனிதன் ஒருவனை தண்டிக்கவோ, கஷ்டத்துக்கு ஆளாக்கவோ திட்டம் போடுகிறான். ஆனால் கடவுள் வேறொரு முடிவு வைத்திருக்கிறார். ஆண்டவன் சித்தப்படியே கடைசியில் நடக்கிறது. அதற்கேற்றாப்போல் மனிதன் மாற்றிப் பேசுகிறான்.
அடுத்தபடி மதுரை ஜங்ஷனில் வண்டி நின்ற போதுதான் மழை சற்று ஓய்ந்தது. “ஸார்! ஏதாவது சாப்பிடுவதானால் இங்கே சாப்பிட்டு விடுங்கள். மழையும் பலத்து, பனியும் அதிகமாகி விட்டால் வழியில் எதுவுமே கிடைக்காது” என்று எச்சரித்தார் இன்ஸ்பெக்டர். அதன்படி விருத்தாசலத்தை என் சாமான்களுக்குக் காவலாக வைத்துவிட்டு இறங்கி விரைந்தேன். சாம்பார் – தயிர் சாதங்கள் சாப்பிட்டு விட்டு, விருத்தாசலத்துக்கும் வாங்கிக் கொண்டு திரும்பினேன். ஒரு ஷண காலம் அடுத்த பெட்டியின் வெளியில் தயங்கி நின்று ஓரக் கண்ணால் உள்ளே கவனித்தேன். உயர்த்தின முகம்; ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் முகபாவம், பெரிய விழிகள் விழித்தபடி இருந்தும், எதையும் பார்க்காத கோலம் – ஸ்வர்ண விக்ரகம் போல் உட்கார்ந்திருந்தாள் சுந்தரி. பழைய சாந்தமும், சௌந்தரியமும் திரும்பி விட்டன. “இவளா குற்றவாளி! ஒருகாலு மிராது!” என்றது என் மனச்சாக்ஷி மீண்டும் ஒரு தரம்.
ரயில் புறப்படும் அறிகுறியாக, ‘விஸில்’ ஊதப்படவே, பெட்டியில் ஏறிக்கொண்டு, விருத்தாசலத்தை அவனுக்காக வாங்கின சாதப் பொட்டணங்களுடன் அவசரமாக அனுப்பினேன். மறுபடி இன்ஸ்பெக்டர் வந்து உட்கார்ந்து கொண்டு என்னைப் பார்த்து விஷமப் புன்னகை செய்தார். “கவனித்தேன் உம்மை!” என்றார் மெள்ள.
“என்ன கவனித்தீர்கள்?”
“இன்னம் சந்தேகம் சரியாகத் தீரவில்லை. பெண் புலியைக் கூட்டில் அடைத்து விட்டுப் பார்த்தால் நல்ல லக்ஷணமாகத்தான் இருக்கும். வெளியே விட்டல்லவா பார்க்க வேண்டும், அதன் அட்டகாசத்தை உணர!”
“இன்ஸ்பெக்டர்! நீர் ரொம்ப ரொம்பக் கடுமையாக இருக்கிறீர்!”
இன்ஸ்பெக்டர் பேச்சை நிறுத்திக் கொண்டு விட்டார். என்னிடம் பேசி உபயோகம் இல்லை என்று அவருக்குத் தோன்றி, விருதாவாகத் தொண்டைத் தண்ணீரைச் செலவழிக்க வேண்டாம் என்று தீர்மானித்திருக்க வேண்டும். ஸீட்டில் சாய்ந்து கொண்டேன் நான்.
வெளியே மழை பலத்தது. இடிகள் தலைமேல் விழுவது போல் கர்ஜிக்க, சில்லென்ற காற்று ரயிலையே தள்ளுவது போல் உக்ரத்துடன் வீசியது. பெட்டிக்குள்
அடக்கமாக உட்கார்ந்திருந்த என்னை மெள்ள மெள்ள நித்திராதேவி ஆட் கொண்டாள்.
நான் மறுபடி விழித்துக் கொண்டதன் காரணம் என்னவென்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. பெரிய பெரிய இடியொன்று ரயிலின் மேல் விழுந்திருக்க வேண்டும் என்று நான் முதலில் ஊகித்தேன்.
ரயில் வண்டியே துகள் துகளாகப் போய் விட்டது போலவும், நான் எங்கோ வான வெளியில் வீசி யெறியப் பட்டது போலவும் உணர்ந்தேன். அப்படி ஆகாய வீதியில் நான் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும்போது பூமியே வெடித்து ரயில் வண்டியை விழுங்குவதுபோல் எனக்குத் தோன்றியது. பிறகு என்னைச் சுற்றி அந்தகாரம் சூழ்ந்து வந்தது. மறுபடி பத்து நிமிஷங்களுக்குப் பிறகு, நான் முழு உணர்வு பெற்று என்னைச் சுற்றிலும் பார்த்தபோது, உண்மை வெளியாயிற்று.
நான் வந்த ரயில் வண்டி கோர விபத்துக்குள்ளாகி விட்டது! அதிக தீவிரமாகப் பொழிந்து கொண்டிருந்த மழை, ரயில் இருப்புப் பாதைகளை ஏதோ இறக்கத்தில் பெயர்த்து விட்டிருக்கவேண்டும். எஞ்சின் உருத் தெரியாமல் போய் மற்றும் நான்கு வண்டிகளுடன் நிலை பெயர்ந்து தூரக் கிடந்தது. அடுத்த இரு வண்டிகள் ஒன்றின்மீது ஒன்று ஏறிக் கொண்டு, பார்க்கப் பரிதாபமா இருந்தது. ஏழாவது வண்டி கீழே சாய்ந்திருக்க, அதனுள்ளிருந்து ஜனங்களின் பயங்கரக் குரல் ஒருமிக்க எழுந்தது. எட்டாவது ஒன்பதாவது வண்டிகளில் அதிகம் சேதம் இல்லை. நான் வெளியே எறியப்பட்டு, மழையில் நனைந்து கொண்டு கிடந்தேன்.
பளீர் என்று மின்வெட்டு ஒன்று அடித்தது. அப்போதே என் முளையிலும் நான் அந்த ரயிலில் பிரயாணம் செய்ய நேர்ந்ததும், படுக்கும் முன் இருந்த நிலையும், இன்ஸ்பெக்டரும் அவர் சொன்ன கதையும், அழகிய ஸ்திரீயும், கொலையுண்ட கணவனும், விருத்தாசலமும் – மள மளவென்று ஞாபகத்துக்கு வந்தன. ஐயோ! விருத்தாசலம் என்ன ஆனான்!
மறுபடி ஒரு மின் வெட்டு. விருத்தாசலம் வண்டியிலிருந்து இறங்கி என் பக்கம் வந்து கொண்டிருப்பது புலனாயிற்று. அதே வெளிச்சத்தில் சுந்தரியையும் பார்த்தேன்! ரயில் விழுந்த உடனே அவள் எப்படியோ இறங்கிவிட்டாள். அந்தக் காரிருளில், காட்டுப் பாதையில், கொட்டுகிற பிரவாகத்தில் திக்கு திசை தெரியாது நடந்து ஒரு மரத்தடிக்குச் சென்று விட்டாள்.
‘பளீர் பளீர்’ என்று மேலும் மின்னல்கள் வெட்டின; இடிகள் தீர்ந்தன. காற்று சண்டமாருதமாக வீசியது. என் மனத்தில் ஒரு திகில் பிறந்தது. சுந்தரி மரத்தடியில் இருப்பது மிக ஆபத்து என்று தோன்றியது. எந்த நிமிஷமும் அது தரையில் சாய்ந்து விடும்போல் ஆடிக் கொண்டிருந்தது. நான் இருந்த நிலையில் எழுந்து செல்வது என்பது இயலாத காரியம். ஆகவே என்னை நெருங்கி விட்ட விருத்தாசலத்தின் மீது என் பார்வை திரும்பியது. “விருத்தாசலம்!” என்று கூப்பிட்டேன்.
“ஸார்!“ என்றான் அவன்.
“ஒடிப் போய் அந்தப் பெண் பிள்ளையை இப்படிக் கொண்டு வந்து சேர்!” என்றேன். சொன்னவுடனேயே, ஏன் சொன்னோம் என்று வேதனைப் பட்டேன். என் கட்டளையை ஒருபோதும் மீறாதவன் விருத்தாசலம்; தவிர, அந்த இடத்துக்கு ஒரு ஆளை அப்போது
அனுப்புவதென்றால், அவன் திரும்புவது இரண்டாம் பக்ஷம். ஒரு சிறு மதகு அப்போதுதான் பெயர்த்துக் கொண்டிருந்ததாகையால், எங்கும் ஜலப்பிரளயமாக சுழலிட்டும் கொண்டு போயிற்று. சொன்ன உத்தரவை வாபஸ் வாங்கி விடலாம் என்று நான் வாய்த் திறப்பதற்குள் விருத்தாசலம் பாதி தூரம் போய்விட்டான்.
காற்று வெகு வேகமாக வீசிற்று. மரத்தின் கிளைகள் ஒன்றோடொன்று உராய்ந்து கொண்டு ஏக காலத்தில் பதினாயிரம் பைசாசங்கள் ஓலமிடுவது போன்ற பிரமையை உண்டாக்கின. தன்னந்தனியே திகைத்து நின்ற அந்த ஸ்திரீயை நெருங்கிவிட்டான் விருத்தாசலம். இவன் உதவியை எதிர்பார்த்தவள் போல் அவளும் வந்தாள். இவன் கையைப் பற்றிக் கொண்டாள்… இருவரும் புறப்பட்டார்கள். காற்றின் வேகத்தினால் ஏற்படும் சப்தத்துடன் இன்னொரு பெரிய சப்தமும் கலந்து கேட்டது.நான் காண்பது கனவா என்று திகைத்துப் போனேன். அந்தப் பெரிய மரம் வேருடன் பெயர்ந்துக் கொண்டு அவர்கள் இருவர் மீதும் சாய்ந்து விட்டது ! இந்த அதிர்ச்சி தாங்காது அப்போதே எனக்கு கண்கள் இருண்டன. மூர்ச்சை அடைந்து அங்கேயே கீழே சாய்ந்து விட்டேன்.
மூன்று நாள் கழித்துத் திருச்சிராப்பள்ளி ஆஸ்பத்திரி ஒன்றில் நான் கண் விழித்தபோது, ரயில் விபத்தைப் பற்றிய பூரா விவரங்களையும் கேள்விப்பட்டேன். அவை பத்திரிகைகளில் எல்லோரும் படித்துத் தெரிந்துகொண்ட விஷயங்களே தான்; ஏராளமான பேர் இறந்து போனார்கள். காணாமலும் போனார்கள். எனக்கு முக்யமாகக் காதில் பட்ட விஷயம், விருத்தாச்சலம் உயிர் நீத்ததுதான்! ஒரு பெண்ணைக் காப்பாற்றப் போய்; மரக்கிளை அடியில்
அகப்பட்டு மாண்டு போனான். அந்த ஸ்திரீ மட்டும் எப்படியோ ஒரு காயமும் இன்றி தெய்வாதீனமாகப் பிழைத்து விட்டாள்/
நான் வாய்விட்டுக் கதறினேன். விருத்தாசலத்தைக் கொன்றவன் நானே தான் என்று சொல்லி அழுதேன். என் மீது யாரும் இரக்கப்பட வில்லை. ஒரு உயிர்த் தோழனை இழந்த துக்கத்துடன், என் வார்த்தையைக் கேட்டவர் களுடைய சொல்லம்புகளையும் கேட்க வேண்டியவனானேன்.
“என்ன மனுஷன் ஐயா நீர்! ஒரு உயிரைக் கொடுத்தா ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும்!” என்றார்கள் சிலர்.
“அதுவும் எப்பேர்ப்பட்ட உயிர்! அப்படிப்பட்ட மனுஷன் அகப்படுவானா! லக்ஷத்தில் ஒரு பிறவி” என்று அங்கலாய்த் தார்கள் பலர்.
“ஒரு கொலைக்காரியைக் காப்பாற்ற அனுப்பின புத்திசாலித்தனம் உண்டே! அதைச் சொல்லுங்கள்!” என்று கேலி செய்தார்கள் பலர்.
“எப்படியும் தண்டனை அடைய வேண்டியவள். தெய்வ தண்டனையை உடைய விட்டிருக்கலாம். அதற்கு மாறாக நல்ல மனிதனை பலி கொடுத்து, அவளைப் பிழைக்கச் செய்ய வேண்டாம்!” என்றார்கள் எத்தனையோ பேர்.
இப்படி வாய்க்கு வந்தபடி பேசினார்கள். என் நெஞ்சு வெதும்பியது.
ரஜாவை ரத்து செய்து கொண்டு ஊர் திரும்பினேன். அங்கும் சாந்தி இல்லை. என்னைக் கண்டு எல்லாரும் ஒதுங்கினார்கள். முன்பு பயத்தினால் ஒதுங்கினவர்கள், இன்று அருவருப்பினால் தான் அவ்வாறு செய்தார்கள்.

நான் ஒரு கொலைகாரன் என்று அவர்களுக்குள் முடிவு செய்து கொண்டு விட்டார்கள்.
நாளுக்கு நாள் என் நிலைமை வெகு மோசமாகி வந்தது. சில நண்பர்கள், என் எதிரிலேயே விருத்தாசலம் இல்லாதது குறித்து வருந்தத் தொடங்கினார்கள்.
” அவன் மட்டும் இருந்தால் இப்போ நம் கோஷ்டி வேறே மாதிரியாக இருக்கும். ஐந்து நிமிஷம் சேர்ந்தாற்போல் சிரிக்காமல் இருக்க முடியுமா அவன் இருந்தால்!” என்றார்கள். வேண்டுமென்றே கூட இந்த முறையில் பேசினார்கள்.
அவன் சாவுக்குப் பொறுப்பாளி நான்தான் என்று என் மனமே இடித்துக் கூற, பலமுறை இதை என் சூழ்நிலை ஞாபகப்படுத்தியது. உலகத்தின் ஏச்சுக்கு முன்னால் நடைப்பிணம் போல் திரியலானேன்.
அன்றொரு நாள் காலையில் நான் கடைத்தெருப் பக்கம் சென்று கொண்டிருந்த போது அவசர அவசரமாக விச்வநாத முதலியார் வந்தார். என்னுடன் பேசாமலே ஒதுங்குபவர் என்னை நெருங்கி, “பாருங்கள் இந்த ஜட்ஜ்மெண்டை!” என்று ஒரு பத்திரிகைச் செய்தியை நீட்டினார்.

கணவனை விஷம் வைத்துக் கொன்றதாக
ஹைக்கோர்ட் அப்பீலில் கேஸ் தள்ளுபடி!!

என்ற தலைப்புக்கு அடியில் ஒரு செய்தி வந்திருந்தது. அதன்படி சுந்தரி ஹைக்கோர்ட்டில் விடுதலை பெற்று விட்டாள். காரணம், உண்மைக் குற்றவாளியான குமாஸ்தா குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டதுதான்! அவள் விஷம் வாங்கியதும் வைத்திருந்ததும் உண்மை என்றாலும், அது வியாபாரியின் உத்தரவு பேரில் வேறு காரணமாகத் தருவிக்கப்பட்டது. குமாஸ்தா தான் சமயம் பார்த்திருந்து
தன் கைவசம் பணம் அதிகம் சேர்ந்திருந்த சமயம் எஜமானையும் முடித்து, குற்றத்தையும் மனைவி பேரில் தள்ளி விட்டான். வேறொரு பெரிய குற்றத்திற்காக அவன்
கைது செய்யப்பட்ட போது இதையும் ஒப்புக் கொண்டான்! இதுதான் அந்தச் செய்தியின் சாராம்சம்!
“உம்மைப் போய்க் குற்றம் சொன்னார்களே, |முட்டாள்கள்! இதைப் பார்க்கட்டும்! ஒரு நிரபராதியைத் தண்டிக்கவும் இருந்து, பிறகு ரயில் விபத்தில் சிக்க வைத்து மரத்தைத் தள்ளிக் கொல்லவும் முயன்ற குற்றம் சமூகத்தைச் சேராதா? நீர் அவளைக் காப்பாற்றக் கொண்டு தானே உண்மை வெளிப்படுகிறது?” என்றார்.
அன்று மாலைக்குள் ஊரில் பலர் என்னை வந்து கை குலுக்கினார்கள். அபார மேதாவி நான் என்றார்கள். முகத்தைப் பார்த்துக் குற்றவாளி இல்லை என்று நான் கண்டு பிடித்தது எப்படி என்று அலமாந்து போனார்கள். என்னைத் திட்டின அவ்வளவு பேரும் இன்று ஒருமிக்கப் பாராட்டத் தொடங்கினார்கள்.
உலகம் தனது அபிப்பிராயத்தை க்ஷண காலத்தில் மாற்றிக் கொண்டு என்னைக் கொண்டாடியது.
ஆனால் – என் வரையில் ஆனால் தான் – என் மனதில் சாந்தியில்லை. உலகம் வைதாலும், வாழ்த்தினாலும், நிந்தித்தாலும் வந்தித்தாலும் என் மனதில் சஞ்சலம் தான் மிகுந்து நிற்கும், அதற்கு அயனான காரணம் ஒன்று உண்டு.
நான் விருத்தாசலத்தை ஆக்ஞாபித்து அனுப்பினபோது, சுகந்த சுந்தரி நிரபராதி அல்லவென்றும், நிச்சயம் குற்றவாளிதான் என்றும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தான் இருந்தேன். எனினும் அவனை
அனுப்பினேன்; அவன் மீண்டு வருவது சிரமம் என்று தெரிந்தும் அனுப்பினேன். அவள் சௌந்தரியத்துக்கு அடிமையாகித்தான் நான் அதைச் செய்தேன்!

தேவன்/பெண்புலி! – விருட்சம் நாளிதழ்