
“ஏங்க, விஷயம் தெரியுமா?”
உங்க தம்பி வரப்போறாராம். இத்தனை நாள் இல்லாம இப்ப எதுக்கு வராருன்னு தெரியலையே”
மனைவி மீனா சொல்லியதைக் கேட்ட கோதண்டராமன், “வேறெதுக்கு? எல்லாம் பணத்துக்காகத்தான்” என்றான் சலிப்போடு.
அதே வேகத்தில் எழுந்து அண்ணன் சிவராமனிடம் சென்றான். “அண்ணா! ஒரு விஷயம்”என்றான். அவன் மனைவி அருணா மட்டும் என்ன ஒன்றும் தெரியாதவளா? ஏற்கனவே கணவனிடம் அந்த விஷயத்தைத் தெரிவித்திருந்தாள்.
“என்ன, ராஜாராமன் வர விஷயம் தானே! அவன் வந்தாலும் ஒண்ணும் குடுக்கறதா இல்லை. அப்பாவை பாத்துகிட்டதெல்லாம் நாம. இப்போ அப்பா இறந்தது தெரிஞ்சதும் பறந்து வரானோ. எதாவது உயில் எழுதி வச்சிருப்பாருன்னு வரான் போலிருக்கு”
அப்பாவுக்குப் பிடிக்காத திருமணத்தைச் செய்து கொண்டு நாட்டை விட்டே போய், வெளிநாட்டில் வாழ்ந்து வருபவன் ராஜாராமன்.
வீட்டுக்கு வந்த ராஜாராமனிடம் யாரும் முகம் கொடுத்தே பேசவில்லை. குழந்தைகள் மட்டும் பேசினார்கள். அப்பா தங்கியிருந்த அவுட்ஹவுசில் தான் ராஜாராமனும் தங்கிக் கொண்டான்.
சாப்பாட்டைக் கூட வேலைக்காரனிடம் கொடுத்து விட்டார்கள்.
காரியங்கள் முடியும் வரை அவனும் எதுவும் பேசவில்லை.
ராஜாராமன் கிளம்பும் நாள் வந்தது. அண்ணன்களைக் கூப்பிட்டான். “இந்த வீட்டை வித்துட்டு இரண்டு பேரும் வெளியூருக்குப் போவதா கேள்விப் பட்டேன். நீங்க சொல்ற விலைக்கு நானே இதை வாங்கிக்கறேன். அப்பாவைப் போல இறுதிநாட்களைத் தனிமையில் கழிக்கும் முதியோர் இல்லமா இதை மாத்தப் போறேன். அப்புறம் முக்கியமா ஒரு விஷயம். அவர் உபயோகப் படுத்திய நாற்காலியும், உயிரா நினைச்ச புத்தகங்களையும் எடைக்குப் போட்டுடாதீங்க. அதையும் நானே விலை கொடுத்து வாங்கிக்கறேன்”
பதிலை எதிர்பாராமல், கம்பீரமாக வெளியே சென்ற ராஜாராமனை ஒன்றும் சொல்லத் தோன்றாமல் வெறித்துப் பார்த்தபடி நின்றது மொத்தக் குடும்பமும்.

மிக்க நன்றி சார்.
மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்
மிக்க நன்றி அனுராதா
சிறப்பு சகோதரி
மிக்க நன்றி சிவகாமி
அருமை சகோதரி
மிக்க நன்றி
நறுக் என்ற மனதைத் தொட்ட முடிவு. அற்புதம்
-நளினிசாஸ்திரி
மிக்க நன்றி சார்