
“ஒரு வீக் எண்ட் டிரிப் ‘காந்தளூர்’ க்குச் சென்று வரலாமா?” என பாலாஜி கேட்டபோது, சுஜாதாவின் ‘காந்தளூர் வசந்தகுமாரன்’ நாவல்தான் நினைவுக்கு வந்தது! ‘அங்கு என்ன விசேஷம்?’ என்றேன். ‘தென்னிந்தியாவிலேயே ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி விளையும் இடம். மேலும் கலப்படமில்லாத வெல்லம் தயாரிக்கும் இடம். கொடைக்கானல் போன்ற ஒரு மலைவாசஸ்தலம்’ – என்றான்! ஏற்காடு, மேகமலை போன்ற இடங்களுக்குச் சென்று வந்த அனுபவம் இருப்பதால், பார்த்து வரலாம் என்று கிளம்பினோம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் ‘மினி காஷ்மீர்’ என அழைக்கப்படும் காந்தளூர் மலை கிராமம், இடுக்கி மாவட்டம் மூணாறு செல்லும் வழியில் அமைந்துள்ளது. மலைகள், குன்றுகள், காடுகள் நிறைந்த, பல அருவிகளும், நீரோடைகளும், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு போன்ற பழத்தோட்டங்களும் உள்ள ஓர் அழகிய சுற்றுலா தலம். திருப்பூர் அல்லது உடுமலைப்பேட்டையில் இருந்து கிளம்பினால் ஒரே நாளில் சுற்றி பார்த்து விட்டு வரலாம். சுமார் 4842 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ள ஓர் அழகிய மலைக் கிராமம் காந்தளூர்.
காந்தளூர் கிராமம் மழை மறைவு பிரதேசமாகும். இது மறையூரில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலையிலே உள்ளது.
செப்டம்பர் 2023 இல், “சிறந்த கிராமப்புற சுற்றுலா கிராமங்கள்” பிரிவில் ஐந்து கிராமங்களுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் மதிப்புமிக்க “தங்க” விருதை காந்தளூர் கிராமப் பஞ்சாயத்து பெற்றது!
சென்னை சென்ட்ரலிலிருந்து, சேலம் வழியாக பாலக்காடு செல்லும் விரைவு வண்டியில் சென்றோம். காலை ஆறு மணிக்கு, உடுமைலைப் பேட்டை – நான்கு நடைமேடைகளுடன், அரச மரம், வேப்ப மரம் நிற்கும் அழகிய சின்ன ரயிவே ஸ்டேஷன் – வந்து சேர்ந்தோம். வெளியே வந்தவுடன், முன்னமேயே ஏற்பாடு செய்திருந்த காரில் காந்தளூர் சென்றோம். ரயிலிலிருந்து இறங்கிய பயணிகளைத் தொந்திரவு செய்யும் ஆட்டோ, டாக்சிகள் இல்லை!
ஒரு திருப்பத்தில், சாலை ஓரத்தில் தேங்காய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், செள செள, பீட்ரூட், காரட், பீன்ஸ், சேப்பங்கிழங்கு என கடை விரித்திருந்தார்கள்! அன்று உழவர் சந்தை – சுவற்றில் “புத்தம் புதுக் காய்கறிகள், என்ன விந்தை! நித்தம் வழங்கும் உழவர் சந்தை” என்று எழுதியிருந்தார்கள்! தூரத்தில் தெரியும் மலைகள், கீழே தென்னை, வாழை மரங்கள், கட்டாந்தரைகள், ஓட்டு வீடுகள், மாடி வீடுகள், கடைகள் எனப் பார்த்தபபடி வந்தோம். வழியில் ஆரியாஸ் ல் சுமாரான இட்லி, தோசை, வெங்காயம் போட்ட மெதுவடை, காப்பி எனக் காலை சிற்றுண்டி முடித்தோம்! ஓட்டலின் ஒரு ஓரத்தில், வீட்டிற்கான மிதியடிகள், சிறு துண்டுகள், படுக்கை விரிப்புகள் என விற்பனைக்கு வைத்திருந்தார்கள் – ஏற்காட்டிலும் இப்படி ஒரு கடையை, ஓட்டலுடன் பார்த்திருக்கிறேன்!
உடுமலைப் பேட்டையிலிருந்து, காந்தளூர் செல்ல சுமார் இரண்டுமணி நேரம் – கிட்டத்தட்ட 60 கிமீ – ஆகிறது. போடிப்பட்டி, பள்ளப்பாளையம், மானுப்பட்டி, தமிழ்நாடு வனத்துறை செக்போஸ்ட், கேரளா வனத்துறை செக்போஸ்ட், சின்னார் வைல்ட் லைஃப் சாங்சுவரி, மறையூர் தாண்டி, காந்தளூர் வருகிறது! காலை வேளையில், மலைப் பாதையில் அருமையான கார் டிரைவ். யேசுதாஸ் அருகில் இருந்திருந்தால், ‘செந்தாழம் பூவில், வந்தாடும் தென்றல்’ என இசைத்திருப்பார்!
இரண்டு பக்கமும் மரங்களுடன், தூரத்தில் மலைகளுடன், சீரான தார் சாலையில் காலையில் பயணம் செய்வது மனதுக்கு சுகமாக இருந்தது. ‘சின்னார் வைல்ட் லைஃப் சாங்க்சுவரி’ காட்டுப் பாதையில் கார் சென்று கொண்டிருந்தது. தூரத்தில், அடுக்கடுக்கான மலையிலிருந்து வெள்ளிக் கம்பிகளாய் நீர்வீழ்ச்சிகள் தெரிந்தன.
ஓட்டுனர் சுவாரஸ்யமானவர்! தமிழ்நாடு, கேரளா அரசியல், தமிழ்நாட்டு வண்டிகளை கேரள டிரைவர்கள் மதிக்காமல் வண்டி ஓட்டுதல் எனப் பேசியபடி வந்தார். பேச்சுவாக்கில் ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி தெரியும் என்று வியக்க வைத்தார். ‘ஆமங்க்ணா, இல்லீங்க்ணா’ டைப் ‘கோய்ம்..முத்தூர்’ பாணியில் பேசி வந்தார். உடுமலைப் பேட்டையில் எல்லோருமே இப்படித்தான் பேசுகிறார்கள்! மூனார் செல்லும் பாதையைக் கடந்து, சிறிது தூரம் பயணம் செய்து, மறையூர் தண்டி, காந்தளூர் கிராமம் வந்தோம். ஏழெட்டு அடிகளே அகலம் உள்ள, வளைந்து, வளைந்து செல்லும் மலைப் பாதைகள்; மேலே ஏற ஏற, குளிரத் தொடங்கியது. இரண்டு பக்கமும், ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா மரங்கள் மற்றும் பெயர் தெரியா தாவரங்கள்.
வழியில் ஒரு பள்ளிக்கூடம், யூனிபார்மில் குழந்தைகள் ஸ்வெட்டர், லெதர் ஜாக்கட், தொப்பியுடன்!. மஞ்சள் நிற பள்ளிக்கூட பஸ், சில சைக்கிள்கள்…
ஒரு சிறிய ஏற்றத்தில் இருந்தது நாங்கள் தங்கிய ‘ஷோலா ஹெவென்’ ரிசார்ட். அறைகள் வசதியாக, பால்கனியுடன் இருந்தன. வெளியே சிறிய பார்க், எதிரில் கிச்சன் மற்றும் டைனிங் ஹால், காதலிக்க நேரமில்லை பட ஸ்டைலில், ரிசார்ட்டின் முன் அரை வட்டமாக தார் சாலை! மேற்குத் தொடர்ச்சி மலையின் சில உச்சிகளில், மேகங்கள் தவழ்ந்துகொண்டிருந்தன. மார்கழி மாதக் காலை போல, எங்கும் பனி மூட்டமாக இருந்தது! மணி பதினொன்றை நெருங்கியிருந்தது.
மதிய லஞ்ச் ஸ்பெஷல் வெஜிடேரியன் மீல்ஸ்! கோஸ் பொறியல் (எப்படித்தான் அவ்வளவு பொடிசாக நறுக்குகிறார்களோ!), அவியல், பப்படம், கதம்ப சாம்பார், காரசாரமான பூண்டு ரஸம், தயிர் (அந்தக் குளிரில் எப்படித்தான் தயிரை இவ்வளவு புளிப்பாகச் செய்தார்களோ!), ஊறுகாய் – சிறப்பாக எங்களுக்காக தயாரித்திருந்தார்கள்!
மதியம் இரண்டு மணி வாக்கில் லோக்கல் டிரிப் – ஜீப்பில் சென்றோம். அங்கு முக்கியமான இடங்களைச் சுற்றிப்பார்க்க, ஜீப்புகள் தான் ஏற்றவை என்பதை, இரண்டு நாட்கள் மலைகளிலும், பாறைகளிலும் பயணித்தபோதுதான் புரிந்துகொண்டோம் – மேல் கம்பியைப் பிடித்துக்கொண்டு, ஒரு கால் படியில் வைத்து, ஜீப்பில் ஏறுவதற்கே தனியாக டிரெய்னிங் எடுத்துக்கொள்ள வேண்டும்! காரில் போகலாமா என்று சூப்பர்வைசர் ஜோசப் பீட்டரைக் கேட்டேன். “போகலாம், திரும்பி வரும்போது, காரின் ஆக்ஸில் தண்டு, சக்கரங்களைக் கையில் எடுத்துவரத் தயாராக இருக்க வேண்டும், சம்மதமா?” என்றார் முகத்தில் புன்னகை மாறாமல்!
21 வயதே ஆன மனோஜ்தான் ஜீப் டிரைவர். 61 நாட்கள் விரதமிருக்கும், கறுப்பு ஆடையில் ஐயப்ப பக்தர். சிரித்த முகம். அப்பா விவசாயம், அம்மா அருகில் ஒரு கடை வைத்திருக்கிறார். அக்கா நர்சிங் முடித்து வேலையில்…. தனக்கு படிப்புக்கு வெளியூர் செல்ல விருப்பமில்லாததால், இந்த வேலையை விரும்பிச் செய்வதாக புன்னகைக்கு நடுவே சொன்னார். அனாயசமாக ஜீப்பை ஓட்டினார். உள்ளே அமர்ந்திருந்த எங்களுக்குத்தான் அடிவயிற்றில் புளி! எல்லா மூட்டுகளும் லூசாகி விட்டமாதிரி இருந்தது! ஒவ்வொரு முறையும் ஜீப்பில் ஏறி, இறங்குவது சிரமமாக இருந்தாலும், சுற்றிலும் இருக்கும் இயற்கையழகு, அந்த சிரமத்தைப் போக்குவதாக இருந்தது!
முதலில் சென்ற இடம் “குச்சரம் அருவி” என்கிற காந்தளூர் வாட்டர் ஃபால்ஸ்……
தொடரும்….

Interesting
இப்பவே போக வேண்டும் என்ற ஆசை எழுகிறது
அருமை சார். படிப்பவர்களுக்கும் காந்தளூர் என்றதும் சுஜாதா தான் ஞாபகம் வருவார். இனி நீங்களும்.