
“முகம் தாம்மா மனசோட வாசல் அது தெரியுமா உனக்கு?”
முகவாசல் செய்யும் வேலைக்காரி ரஞ்சிதம் என்னிடம் கேட்ட போது இவளுக்கு எப்படி இப்படியெல்லாம் பேச வருதுன்னு நான் வியந்தேன்.
“ம்க்கும்! உனக்குத் தெரியாதா என்ன? நீ தான் எழுத்தாளரச்சே!” மீண்டும் சொன்னாள்.
என் முகத்தில் கொட்டிய மேளச் சத்தமும், நாதஸ்வரச் சத்தமும் அவளுக்குக் கேட்டிருக்கக் கூடுமோ? என் முக வாசல் எனக்கு கூச்சத்தைத் தந்தது.
நெளிவும் வளைவுமாய் பளிச்சென்று கோடிழுத்துக் கோலமிட்டவள் “ இப்படித் தான் இங்கயும் அங்கயுமா நடக்கற சம்பவங்களை நினைவாக்கிக்கறோம். நினைவை குழப்பமாக்கிக்கறோம். குழப்பத்தைக் கோடியாக்கி முக வாசலையே இருட்டாக்கிக்கறோம்.” என்றாள்.
கண்ணீரை மறைத்துச் சிரித்தேன். முகம் மலர்ந்தது அவளுக்கு.
கோடி வீட்டில் மேளச்சத்தம். வசீகரமற்ற என்னைப் பெண் பார்த்து விட்டுப் போனவன் வேறு ஒருவளுக்குத் தாலி கட்டிக் கொண்டிருந்தான்.

அருமை. முகவாசல், மனதின் பிரதிபலிப்பு
Thank you ma
நெகிழ்வு.
ஆஹா! என்ன ஒரு விளக்கம்! அருமை.