எஸ்ஸார்சி/பெண்பாவம்

அண்ணன் தருமங்குடி கிராமத்திலிருந்து என் வீட்டிற்கு வந்திருந்தார். கடைத்தெருவில் ஏதேனும் வேலை ஒன்றை வைத்துக்கொண்டுதான் இப்படிப் பயணமாய் வருவார். கிராமத்தில் கிடைக்கும். காய்கறிகள் கீரைகள் எலுமிச்சம்பழம் தேங்காய் இவற்றை எடுத்து வந்து தவறாமல் கொடுப்பார். அண்ணனின் விஜயம் மாதம் ஒருமுறை கட்டாயம் இருக்கும். அப்படித்தான் ஒரு நாள் வேகாத வெயிலில் அண்ணா வந்தார். நான் என் வீட்டு சமையலறையில் சில்லறை வேலைகள் செய்துகொண்டிருந்தேன்.
‘என்னடா நீ பத்து பாத்திரம் தேய்க்கற, இது என்ன புது சேதியா இருக்கு. இந்த வேலைக்கெல்லாம் ஒரு வேலைக்கார பொண்ணு இருந்தாளே அவ என்னடா ஆனா. ஒரு கல்யாணத்த பண்ணிண்டு போற வயசும் இல்லயே அவளுக்கு’
‘அவ இப்ப இங்க இல்ல. சொந்த ஊருக்கே போயாச்சி. நானும் எங்காத்துக் காரியும் கெளம்பினோம். அவள கையோடு அழச்சிண்டோம். அவ சொந்த ஊர் அரியலூர். அதுக்கு ரயில்ல போனோம். அவ அம்மாண்ட அவள விட்டுட்டு வந்துட்டம்’
‘அது என்ன ரயில்ல போனோம்னு அழுத்தி சொல்ற. ’
‘ அதுல விஷயம் இருக்கே. அரியலூருக்கு ரயில்ல போய் அந்த ஸ்டேஷன்ல எறங்கினாத்தான் தன் வீட்டுக்குப் போக வழி தெரியும்னு அந்தப் பொண்ணு சொல்லித்து. அவ அம்மா அரியலூர் ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்துல வாடிக்கையா வெள்ளரி பிஞ்சு விக்கறவ . அதுதான் அங்க முக்கியம்’
‘ஏண்டா ஆத்து வேலைக்கு மனுஷா கெடைக்கிறது அபூர்வமா இருக்கு. கெடச்ச பொண்ணயும் கொண்டு போய் அவா அம்மா கிட்ட உட்டுட்டு வந்துட்டேன்கிற எனக்கு ஒண்ணும் புரியலயே. அந்த வேலக்கார பொண்ணு சேதி இருக்கட்டும் உன் பசங்க ஸ்கூல் போயிருப்பா. உன் ஆத்துக்காரி வாத்தியாராச்சே அவளும் ஸ்கூல் போயாச்சு. என்ன ஆச்சுடா உன் ஆபிஸ் உன் உத்யோகம்’
‘எல்லாம் சொல்றேன். கேளு. நா வீட்லே இருந்துண்டு என் வேலய பாக்கறேன். ஆபிஸ் போகவேண்டாம். கம்ப்யூட்டர்ல வேல செய்யணும். மடியில வச்சிண்டு வேல செய்யுற கம்ப்யூட்டர் ஆபிஸ்காரா எனக்கு வாங்கி குடுத்துருக்கா. அத ஓயாம தொட்டுக்கணும். ஆத்துலேயே நா வேல செஞ்சா போறும். இததான் ’வர்க் ஃப்ரம் ஹோம்’னு சொல்லுவா, ஆத்துலேந்து பண்ற வேலன்னு வச்சிக்கோ’
‘அதே சம்பளம் தருவாளா’
‘சம்பளம் அதே தான். ஆபிஸ் போய் வேல செஞ்சா எவ்வளவோ சம்பளமா தருவாளோ அதுவேதான். இதுக்கு வர்க் ஃப்ரம் ஹோம்னு பேரு’
‘அது போறது.. இப்ப சொல்லு நீ ஆத்து வேலைக்கு ஒரு பொண்ண வச்சிருந்தயே அவ இப்ப என்ன ஆனா எங்க போனா ’
நான் சமையல்கட்டு வேலையை அசமடக்கிவிட்டு அண்னனுக்கு ஒரு கப் காபி போட்டுக்கொடுத்தேன். காபியை நிறைவோடு சாப்பிட்டார். முகத்தில்தான் எத்தனை சந்தோஷம் அவருக்கு.
‘ நீ நன்னா காப்பி போடற. ஃபில்டர் காப்பின்னா விருதாஜலம் கடைத்தெருவுல குட்டி அய்யர் ஹோடல்ல நாராயணன்னு ஒத்தர் போடுவார் அவருக்கப்பறம் காப்பியாவது மண்ணாங்கட்டியாவது யாருக்கென்ன தெரியர்து’
அண்ணாவும் நானும் சோஃபாவில் அமர்ந்து கொண்டோம்.
‘ஊர்ல எல்லாரும் சவுக்கியம்தானே புதுசா சேதி ஏதும் உண்டா’
‘ஒண்ணும் புது சேதி இல்லே. அது அது பாட்டுக்கு ஓடிண்டு இருக்கு’
‘நா ஏன் பத்து தேக்கிறேன். அந்த வேலக்காரப் பொண்ணு என்ன ஆனான்னு ஒன்கிட்ட சொல்லிடவேண்டாமா’
‘சொல்லுடா அதுலதான் நானே பேச்ச ஆரம்பிச்சேன்’
பத்து நாள் ஆகியிருக்கும் இது நடந்துன்னு வச்சிக்கோ, அன்னிக்கி ஒரு நா கம்பியூட்டர் வச்சிண்டு வேலயில மும்முரமா இருந்தேன். என் ஆத்துக்காரிய கூப்பிட்டேன்.’ தாகமா இருக்கு ஒரு டம்ப்ளர் ஜலம் குடுன்னேன்.’ அவ பாத் ரூம்ல் இருந்துருக்கா எனக்கும் தெரியல. வீடு கூட்டிண்டு இருந்த அந்த வேலக்கார பொண்ணு ஒரு டம்ப்ளர்ல ஜலம் எடுத்துண்டு வந்தா என் கிட்ட வந்து நீட்டினா. என்னடா இது புது பழக்கம்னு அந்த டம்ப்ளர கையில வாங்கினேன். என் மொழங்கையை கெட்டியா புடிச்சா. என்னயும் மொறச்சி பாத்தா. நா பதறிப்போனேன். இது விபரீதம். இது ஒண்ணும் சரியில்ல. ஏதோ பெரிய தப்புதான் இதுன்னு என் மண்டையில பட்டுது’
‘ ஒன் கைய கெட்டியா புடிச்சாளா’
‘ஆமாண்ணா, என் கையைத்தான் புடிச்சா’
‘’இது என்ன புதூ சேதியா இருக்கு. பயம்மா இருக்கேடா’
‘நா ஒண்ணுமே பேசல. சமாளிச்சிண்டேன். அவ கொண்டு குடுத்த டம்ப்ளர் தண்ணிய குடிச்சேன். அவளும் வேற ஒண்ணுமே செய்யல. அன்னிக்கி இருந்த ஆத்து காரியம் எல்லாம் முடிச்சிட்டு அவ வீட்டுக்கும் போயிட்டா’
’ அப்பறம்’
‘என் ஆத்துக்காரிண்ட நடந்த விஷயத்த அப்பிடியே சொன்னேன். அவுளுக்கு வயறு கலக்க ஆரம்பிச்சுட்து. இத இப்படியே விடப்பிடாது. விட்டா மொதலுக்கே மோசமாயிடும்னுட்டு யோஜனை பண்ணினா. இந்த வேலக்கார பொண்ண எங்களுக்கு அனுப்பி வச்ச அந்த அம்மாவ தேடிண்டு போனா. அவளும் ஒரு ப்ரொஃபசர் ஆத்துல ஆத்துக்காரியம் பண்றா. அந்த ப்ரொஃபசர என் ஆத்துக்காரிக்கும் நன்னா தெரியும். அன்னிக்கி அந்த ப்ரொஃபசர் வீட்டுல இல்ல. அவா வீட்டுல வேல செய்யுற வேலக்கார அம்மாவ பாக்கணும்னு ப்ரொஃபசர் வீட்டு அம்மாகிட்ட என் மனைவி கேட்டிருக்கா. அந்த வேலைக்காரிய் இப்பதான் மாவு மிஷினுக்கு அனுப்பியிருக்கேன். அந்த அம்மாவோட ஒங்க வீட்டுல வேல செய்யுற அந்த குட்டியும் போயிருக்குன்னு அவசொன்னா’
‘ரொம்ப சுவாரசியமா போறதேடா’
‘ உங்க வீட்டுல வேல பாக்குற அந்த அம்மா எப்பிடின்னு கேட்டிருக்கா என் வயிஃப்.’
‘அது எதுக்கு கேக்குறீங்கன்னு அந்த ப்ரொஃபசர் வயிஃப் கேட்டிருக்கா.’
‘ உங்க கிட்ட ஒரு சேதி. இது நேத்து நடந்திருக்கு .நா இல்லாத நேரம். எங்க வீட்டுல அந்த பொண்ணு வேல செய்யுறா. எம் புருஷன் என்னண்டதான் குடிக்க தண்ணி குடுன்னு சொல்லியிருக்கார். நா பாத் ரூம்ல இருந்திருக்கேன். அவருக்குத் தெரியாது. ஒரு டம்ப்ளர் தண்ணி எடுத்துண்டு போய் அவருக்கு அவளே குடுத்துருக்கா. அத சாக்கா வச்சி எம் புருசன் கைய புடிச்சிட்டான்னு அவரே என்னண்ட சொன்னார். எனக்கு ஒண்ணுமே புரியல. இனி தாமதிக்க கூடாது. இவ எப்பிடி என்னா சேதின்னு தெரிஞ்சிக்கலாம்னுட்டு உங்ககிட்ட வந்தன்’ என் மனைவி சொல்லியிருக்கிறாள்.
அந்த ப்ரொஃபசர் வயிஃப் தன் வீட்டுக்குள்ளார என் வயிஃப அழச்சிண்டு போனா. ‘ என் வீட்டுல பத்து பாத்திரம் தேச்சி வேல சேயிறவ இப்ப என் புருசனயே வளைச்சி போட்டுகிட்டா. எனக்கு அது தெரிஞ்சிபோச்சி. என்னடா செய்யுறதுன்னு நா இப்ப திண்டாடிட்டுக்கு இருக்கன். இவகிட்டேந்து எம்புருசன எப்பிடி காப்பாத்தி கொண்டாறதுன்னு எனக்கு தெரியல. அவுரு லோகல் பெரிய காலேஜில ஃபிசிக்ஸ்ல எச் ஓடி. பிரின்சிபலாவும் ஆகப் போறாரு. இது ப்ரமோஷனுக்கு ஆர்டர் வர்ர நேரம்.. இப்பிடி ஒரு தப்பான சேதி வெளிய தெரியக்கூடாதுன்னு பாக்குறன். என் புருசன் நல்ல மனுசந்தான். யாராயிருந்தா என்ன, ஒரு பொம்பள கச்சிதமா திட்டம் போட்டு ஒரு ஆம்பள மேல மனசு வச்சுட்டா அதிலேந்து மீண்டு வர்ரது சங்கடமாச்சே. உங்கள என் உடன் பொறப்பா நெனச்சி சொல்லுறன். இத வெளில சொல்லிடாதிங்க. என் வீட்டுல வேல செய்யிறது ஒரு பெரிய கொள்ளி. அந்தக்கொள்ளிதான உங்களுக்கும் வீட்டு வேலைக்கு சின்னக்கொள்ளிய அனுப்பியிருக்குது. அப்பறம் இதுல பேச என்ன இருக்கு.’
ப்ரொஃபசர் மனைவி சொல்ல என் மனைவி நொந்துபோனாள். கடைசியாக ப்ரொஃபசர் மனைவியிடம்,
‘இவுங்களுக்கு சொந்த ஊர் எதுன்னு’ என் மனைவி கேட்டிருக்கிறாள். ‘ அரியலூர் ரயில்வே ஸ்டேஷன் தான் இவாளுக்கு எல்லாமே’ அவர் பதில் தந்திருக்கிறார். என் மனைவி வீட்டுக்கு வந்து எல்லா சேதியும் சொன்னாள்.
மறுநாள் காலை. எனக்கும் அன்று விடுமுறை அவளுக்கும்தான். அந்த வேலைக்காரப்பெண் என் வீட்டிற்கு வேலைக்கு பரபரப்பாக வந்தாள்.என் மனைவி அவளிடம் பேச ஆரம்பித்தாள். நான் என் அலுவலக வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
‘ உனக்கு ஒரு சேதி.’ என் மனைவி அவளிடம் ஆரம்பித்தாள்.
‘என்னங்க அம்மா’
‘அரியலூர் ஸ்டேஷன்ல உங்கம்மா அடிபட்டு கெடக்குறாங்கன்னு சேதி வந்துருக்கு’
‘என்னம்மா சொல்றிங்க’ அவள் பதறிப்போனாள்.
‘நீ எங்க வீட்டுல வேல செய்யுறதா உங்க அம்மாவுக்கு தெரிஞ்சி இருக்கு. இந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் வந்துருக்கு. அவுங்க ரயில்வே ஸ்டேஷன்ல வேல செய்யுற ஹெல்த் மேஸ்திரி சுப்பையா பிள்ளைகிட்ட சொல்லி அந்த சேதிய என்கிட்ட சொல்லியிருக்காங்க. நா உன் கிட்ட சொல்லிட்டேன்’
அந்தப்பெண்ணின் கண்கள் குளமாகியிருந்தது.
‘இப்ப என்ன செய்யுலாம்’
‘ எனக்கு அம்மாவ உடனே பாக்குணும்’ அவள் அழ ஆரம்பித்தாள்.
‘எப்பிடி போறது’
‘ரயில்ல ஏறி போவுணும்’
‘அரியலூர்னு டிக்கட் வாங்கி என்ன ரயில்ல ஏத்தி உடுங்க. நா அரியலூர் ஸ்டேசன்ல எறங்கிகுவேன் என் அம்மாவ பாத்துகுவேன்’
‘இங்க யார்கிட்டயும் எதாவது சொல்லுணுமா’
‘மொதல்ல அரியலூர் ஸ்டேசன் போயிடணும். அம்மாவ பாக்கணும். மத்தத அப்பறமா பாத்துக்கலாம்’ அவள் சொன்னாள்.
அவளை அழைத்துக்கொண்டு நானும் என் மனைவியும் ரயில்வே ஜங்கஷன் நோக்கிப்புறப்பட்டோம். என் குழந்தைகள் மாலை ஐந்து மணிக்குத்தான் வருவார்கள். அவர்களுக்குப் பள்ளி இருந்தது. என் பக்கத்து வீட்டில் தாலுக்கா சர்வேயர் குடியிருந்தார். அவரிடம் வீட்டுச் சாவியை கொடுத்துவிட்டு குழந்தைகள் வந்தால் சாவியைக் கொடுங்கள் என்று சொல்லிப் புறப்பட்டோம். பதினோறு மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ். அதனில் டிக்கட் வாங்கிக்கொண்டு ஜெனரல் கம்பாட்மெண்டில் ஏறி நின்று கொண்டோம். ஒரு மணி நேரப்பயணம். அரியலூர் வந்தது. மூவரும் இறங்கினோம்.
‘எப்பிடி போறது உன் வீட்டுக்கு’
‘என் பின்னாலேயே வாங்க’ என்றாள். நாங்களும் அவளைப்பின் தொடர்ந்தோம். ஸ்டேஷன் அலுவலகம் இருப்பதற்கு எதிர்த்திசையில் நடந்தாள். தண்டவாளங்கள் சில குறுக்கிட்டன. ரயில் எதுவும் வரவில்லை. நான்கு தெருக்கள் இருந்தன . பனை மட்டைப்போட்ட குடிசை வீடுகளாய் இருந்தன. ஒரு வீட்டு வாயிலில் காடைப்புறா கூண்டு இருந்தது. அதனுள் ஒரு பெரிய புறாவும் சில குஞ்சுகளும் இருந்தன. இரைக்கம்பும் தண்ணீரும் அவற்றின் அருகில் கிண்ணங்களில் இருந்தன. அவைகளைப் பார்த்த அந்தப் பெண் ‘ நீங்க தேவலாம் இங்க குந்தி குதியாளம் போடுறீங்க’ சொல்லிக்கொஞ்சினாள்.
‘அம்மா அம்மா அம்மா’ குரல் கொடுத்தாள். வீட்டுக்கதவு சும்மாதான் சாத்தியிருந்தது. கதவைத்திறந்து கொண்டு உள்ளே போனாள். வீட்டில் யாரையும் காணோம்.
‘ஒத்தரையும் காணுல’ என்றாள்.
அவள் அம்மா அடுப்பு எரிக்க குச்சி பொறுக்க வெளியே சென்றிருக்கிறாள். தலையில் ஒரு கட்டு காய்ந்த விறகோடு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள்.
‘என் அம்மா என் அம்மாவே’ என்று ஓடி கட்டி பிடித்துக்கொண்டு அவள் அழுதாள்.
‘உனக்கு ஒடம்புக்கு ஒன்னும் இல்லயே அம்மா, நல்லா இருக்கதானே’ அம்மாவைக் கேட்டாள்.
‘நா நல்லாதான் இருக்கேன் பாப்பா எனக்கென்ன’
நானும் என் மனைவியும் ஒரு ஓரமாக நின்றோம்.
‘இவுக ரெண்டு பேர் யாரு பாப்பா’
‘இவுக வீட்டுலதான் நான் வேல செய்யுறன். அவுகதான் என்ன இட்டுகினு வந்தாங்க’
‘ வணக்கம் சாரு வணக்கம் அம்மா’ என்றாள் அந்த அம்மாள். சாயம் தொலைத்த ரேஷன் கடைப் புடவை மட்டும் கட்டியிருந்தாள். ஜாக்கெட் என்று எதுவும் இல்லை.
கணவன் இல்லாத பெண் அவள் என்பதை மட்டும் அறிய முடிந்தது. பனைமட்டையால் கூரை போட்ட வீட்டின் சாக்குக்கதவைத்திறந்தாள்.
‘வாங்க அய்யா வீட்டு உள்ளார வாங்க’
நாங்கள் இருவரும் வீட்டின் உள்ளாகச்சென்றோம். கோரைப்பாய் எடுத்துப் போட்டாள். நாங்கள் உட்கார்ந்துகொண்டோம். சாப்பிட வெள்ளரிப்பிஞ்சு ஒரு பிளாஸ்டி தட்டில் எடுத்து வைத்தாள். அலுமினியக் குவளை நிறைய மோர் கொடுத்தாள்.
‘எனக்கு பம்பாய்க்கு வேலை மாற்றல் வந்துடிச்சி. நாங்க குடும்பத்தோட பம்பாய்க்கு கெளம்பறம். அதனால உங்க பொண்ண உங்க கிட்ட ஒப்படைச்சிட்டு போலாம்னு வந்தம்’ என்றேன் நான். என் மனைவியை ஒருமுறைப் பார்த்துக்கொண்டேன்.
‘ரொம்ப சந்தோஷம் பம்பாய்க்கு அவள கூட்டிகிட்டு போறிங்களா.’ என்றாள்.
‘அது இப்பக்கி சாத்தியமில்லை’ என்றேன்.
என் மனைவி ஆயிரம் ரூபாய் எடுத்து ‘ அந்த அம்மாவிடம் எண்ணிக் கொடுத்தாள். பத்து நூறு ரூபாய் நோட்டுக்கள் அவை.
‘பணம் பத்திரம்’
‘ஆயிரம் ரூபா வரைக்கும் நா பாத்துக்குவேன். அதுக்கு மேலன்னா கஸ்டம். நீங்க பணம் குடுத்தது எனக்கு பெரிய ஒத்தாசை’ என் மனைவியிடம் சொன்னாள்.
‘உங்க கொழந்தய நீங்களே வச்சிகுங்க. உங்க கண் முன்னாலேயே உங்க பொண்ணு இருக்கட்டும். யார் கிட்டயும் வேலைக்கு போ அது இதுன்னு அனுப்பி வைக்காதிங்க.’
‘ என்னோடயே பல காலமா வெள்ளரி பிஞ்சு விக்குற ஒரு அம்மாதான் எம்பொண்ண விருத்தாசலம் வான்னு இட்டுகினு போச்சி. ’ ஒம் பொண்ணுக்கு ஒர் நல்ல வழி காமிக்கறேன் கவலப்படாதேன்னு என்கிட்ட சொல்லிச்சு’ . நானும் அந்த வார்த்தய நம்பி அனுப்பிச்சிட்டேன்’
’ஒங்க மனசுக்கு நல்லா தெரிஞ்ச மனுஷாளா இருந்தா மட்டும் உங்க பொண்ண வேலைக்கு அனுப்பி வையுங்க. அதுவரைக்கும் உங்களோட மட்டும் தான் அவ இருக்குணும். இத உங்க கிட்ட சொல்லிட்டுப்போணுமே அதுக்குத்தான் நாங்க வந்தம்’
‘ நீ என்னதான் சொல்லுற பாப்பா’ என்றாள் அந்தத்தாய் தன் மகளிடம். அந்தப்பெண் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘அய்யா அம்மா சொல்றதுதான், நான் என்ன சொல்லப்போறன்’ என்றாள் மகள். அவளைப்பார்க்க எனக்குச் சங்கடமாக இருந்தது. நான் என் மனைவியின் முகம் பார்த்துக்கொண்டேன்.
நாங்கள் இருவரும் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டோம். அரியலூர் ஸ்டேஷனில் அடுத்த ரயிலைப்பிடித்தோம். விருத்தாசலம் வந்து விட்டோம். என் குழந்தைகள் சர்வேயர் வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
அன்றிலிருந்துதான் நானும் அவளும் மாறி மாறி பத்தும் பாத்திரமும் தேய்த்துக்கொண்டே இருக்கிறோம்’ அண்ணனிடம் கதை சொல்லி முடித்தேன்.
‘சரிடாப்பா போறும் பெரிய கதய சொன்ன. எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருக்கணும். மனுஷனுக்கு எந்த ரூபத்துல வேணா கஷ்டம் வந்து சேந்துடும் ஆத்துக்காரி வந்ததும் நா அர்ஜெண்ட்டா வந்துட்டு போனேன்னு சொல்லு ’ என்றார் அண்ணா.
’எனக்கு கடைத்தெருவுல தலைக்குமேல வேல கெடக்கு நா கெளம்பறேன்’ சொல்லிக்கொண்டே புறப்பட்டார். வீட்டில் நான் மட்டும்தான். என் லாப்டாப்பைத்திறந்து என் வேலையைத்தொடர்ந்து கொண்டேன்.