பாலசாண்டில்யன் /ஓய்வு

மிடுக்கான உடையுடன்
முப்பது வருடம் முன்
கிடைத்த வேலைக்கு ஓய்வு

பயமாய்ச் செய்த வேலைகளை
நயமாய்ச் செய்யத் தொடங்கும் போது
கிடைத்து விட்ட ஓய்வு

கண்டாலே கலங்க வைக்கும்
அரக்க அதிகாரிகளின்
ஆக்கிரமிப்பிலிருந்து ஓய்வு

கைகள் உதடு வயிறு சுட
சுட்டும் பாதி வெந்த
சோற்றிலிருந்து ஓய்வு

ரயில் நெரிசல்
பீடி வியர்வை நாற்றம்
அட்டெண்டன்ஸ் பயம்
சுடுநீர் தேநீர்
வெயில் மழை புயல்
அனைத்திலிருந்தும் ஓய்வு

ஐந்து நாள் வேலைக்குப் பின்
இரண்டு நாள் ஓய்வு முன்பு
இன்று முதல் எப்போதும் ஓய்வு

சீக்கிரம் கிளம்ப சிலநாள் விடுமுறை
அனுமதி வேண்டி அதிகாரி முன்
தலை சொரிந்து நிற்பதில் இருந்து ஓய்வு

இனி அவசர உணவு செய்யும்
மனைவிக்கும் ஓய்வு
சைக்கிள் துணிகள் காலணி
ரெடி செய்யும் மகனுக்கு ஓய்வு

‘சமையல் ரெடியா’
என் குரலுக்கு மாரு குரல்
“ஆபிஸா ஒண்ணா என்ன அவசரம்
சும்மா கிடங்க கூப்பிடறேன்’
ஓய்வு தந்த புதிய மாற்றம் …

‘தம்பி கொஞ்சம் சைக்கிளைத் தொடை ‘
‘டிவி பார்க்கும் போது என்ன இது தொந்தரவு
மகனின் அங்கலாய்ப்பு
ஓய்வு பெற்றுத் தந்த பரிசு …

“அடடே திடீர்னு இப்படி
தொப்பை போட்டிருக்கீங்க
கொஞ்சம் காலாற நடங்க
மதியம் தூங்காதீங்க
உப்பு காரம் குறைச்சுடுங்க
எண்ணை வேண்டாம்
காபியில் சர்க்கரை வேண்டாம்
இரவு சாப்பாட்டை குறையுங்க”
குடும்ப டாக்டர் அறிவுரைகள்

இயந்திர வாழ்விலிருந்து ஓய்வு
இருந்தாலும் யோசித்தால்
ஓய்வு எனக்கு ‘தொய்வு’
என்றே காதில் விழுந்தது.

மீண்டும் அப்பாயிண்ட்மெண்ட்
இடத்தை செய்தித்தாளில்
கண்கள் மேய்ந்தது
புதிய வேலைக்கு
மனு போட்டேன்
பாதிச் சம்பளம் போதுமென்றேன்.

தொடங்கியது அவசர உணவு
ரயில் நெரிசல் பீடி நாற்றம்
சுடுநீர் தேநீர் அட்டெண்டன்ஸ் பயம்
ச …இதுவே பரவாயில்லை….

7 Comments on “பாலசாண்டில்யன் /ஓய்வு”

Comments are closed.