
கோபாலன் வழக்கம் போல குடியோடு குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தான் குடும்பத் தலைவன் என்ற கர்வத்தோடு.
“அம்மா! இதான் நீ!” ஐந்தாவது படிக்கும் சம்யுக்தா தான் வரைந்த ஓவியத்தை பவானியிடம் காண்பித்தாள்.
“இதென்னடா பச்சைப் புடவை கட்டியிருக்கேன்? அம்மாவுக்குப் பச்சைப் புடவையே பிடிக்காதே?” பவானி கேட்டாள். அவள் பார்வை ஹாலின் ஓரத்தில் சுருண்டு கிடக்கும் கோபாலன் மேல் இருந்தது. எந்த நேரத்திலும் குடி தன் வேலையைக் காட்டும். ஆக்ரோஷமாய் அவளது தலைமுடியைப் பிடித்து ஆட்டும்.
“பச்சைங்கறது பாச உணர்வும்மா!”
“இதென்ன இத்தனை கோடுகள் எம் மேல? சும்மா ஸ்கிரிபிள் பண்ணினியா?”
“கோடுகள் இல்லம்மா. உன் மேல அப்பா போட்டிருக்கிற கட்டுகள்!”
“கையில் என்ன பிரம்பா? நான் என்ன டீச்சரா?”
“கையில் கரண்டி ம்மா!” சிணுங்கினாள் சம்யுக்தா.
“வேணாம்னா சொல்லு மாத்திடறேன்” என்ற மறு மொழியோடு.
“என்னன்னு மாத்துவ?”
“கையில் வேலைக்குச் செல்லும் கைப்பையோடு யாரையும் சார்ந்து நில்லாத கட்டில்லாத சுதந்திர அம்மாவைப் படைப்பேன் அஃப்கோர்ஸ் உனக்குப் பிடித்த இளம் ரோஜா புடவையில்!”
என் பொண்ணுக்கு நான் தேவதையாய் தெரிய வேண்டாமா? நாளை போய் டைவர்ஸ்க்கு வக்கீலைப் பார்க்கணும். நினைத்தவள் அந்தப் படத்தை வாங்கி கட்டுக்களை அழிக்கலானாள்.

Nice Mala