ஒரு ஞாயிறு மதியம்/அதிரன்

சாப்பாட்டுக்குப் பிறகு ……

சோபா செட்டில் அமைதியாக உடலைத் தளர்த்தி தூக்கத்திற்கு முயற்சி செய்துகொண்டிருந்தேன்…

இந்த கொரோனா லாக் டவுன் வந்ததிலிருந்து எல்லாநாளும் ஞாயிற்றுக் கிழமை மாதிரியேயிருக்கிறது

அப்பொழுதுதான் கண்ணயர்ந்திருப்பேன் ……. ஒரு போன் கால் …. வழக்கம் போல கிரேடிட் கார்டு வேண்டுமா டெபிட் கார்டு வேண்டுமா என்ற பெண்ணின் குரல் …. சலிப்புடன் அழைப்பைக் கட் செய்துவிட்டு மீண்டும் தூக்கத்திற்கு முயற்சி செய்து முடியாமல் போனை நோண்ட துடங்கினேன் …

“பாலா tvl ” என்னும் இடத்தில் எனது தேடல் நின்று போனது ..

யோசிக்கிறேன் அவனுடன் கடைசியாய் பேசியதை …..

நினைவுக்குள் அகப்படவேயில்லை அந்தநாள் …

பாலா என் பாலிய சினேகிதன் ……

ஒல்லியாய் மெலிந்த தேகம் ஏனோ அந்தவயதிலும் அவனுக்குக் கொஞ்சம் தொப்பை இருந்தது

முன்னம்பல் மட்டும் லேசாக ஒன்றோடு ஒன்று சாய்ந்திருக்கும் மற்றபடி அவன் அழகுதான் ….

குணபாவத்திலும் கோட்பாடுகளிலும் என்னிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தாலும் என்னோடு எப்பொழுதும் இணக்கமாகவே இருப்பான் …. நானோ முன்கோபி முரடன் … நண்பனல்லவா என்னை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அந்த வயதிலே அவனுக்கு …

கோலி விளையாட்டில் துடங்கி …சைக்கிள்… நீச்சல் …இன்னும்பல விளையாட்டுகளிலும் எங்களுக்கு அவன் தான் குரு …

கூரிய புத்திதான் ஆனாலும் படிப்பில் அத்தனை நாட்டமில்லை அவனுக்கு…. வறுமையும் வந்துவிடவே படிப்பு பாதைமாறியது அவன் தந்தையின் மளிகைக் கடையில் புதிய பயணம் துடங்கியது…..

அதே நேரத்தில் எங்கள் நட்பிலும் கொஞ்சம் தொய்வு விழத் தொடங்கியது எங்கள் பயணம் கல்லூரியை நோக்கி நகர்ந்தது …….

சிகரட் பழக்கத்தால் மீண்டும் எங்களது நட்பு நெருங்கத் துடங்கியது …. அவன் கடையில் தான் எங்கள் எல்லோருக்கும் சிகரட் அக்கௌன்ட் …..

எல்லாமாதத்தில் கள்ளக் கணக்குதான் அதையும் நட்புக்காக …..ஏற்றுக்கொள்வான்
சில ஆண்டுகளில் அவன் தனியே மளிகைக் கடை ஒன்றைத் துடங்கிவிட்டான்..

சொல்லவேண்டுமா?? எங்கள் காட்டில் சிகிரெட் மழை தான் ….மீண்டும் அதே …..நடப்பு கணக்குதான்

இப்பொழுதான் அந்த திருப்புமுனை நடந்தது ……

தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதற்காக எனது தந்தை அவன் கடைக்கு வருவது வழக்கமாகியது ..

எங்களது சிகரேட் பழக்கம் மற்றும் கல்லூரிக்கு மட்டம் எல்லாம் அவன் மூலம் என் தந்தைக்குத் தெரியவந்தாக நாங்கள் நம்பவே மீண்டும் எங்கள் நட்பில் இடைவெளி ….
வேலை …. கல்யாணம் …..பிழைப்புக்காக …..ஆளாளுக்கு ஒரு இடம்பெய்ர்ந்தோம் … அவன் மட்டும் ஊரிலேயே தங்கிப்போனான் …

அவனோ வியாபாரம் , ஆன்மீகம், சமூகசேவை என்று தொடங்கிவிட்டான் ….
ஊரில் தேர் திருவிழா வந்துவிட்டால் போதும் ….கடையில் வேலை செய்யும் வேலை ஆட்களைக் கூட்டிக் கொண்டு அன்னதானம் , நீர் பந்தல் , மோர்ப்பந்தல் , என்று துடங்கிவிடுவான் ….இந்த சேவையை தவறாமல் பல ஆண்டுக்காலம் செய்துக்கொண்டுவருவதாக நண்பர்கள்மூலம் தெரிந்துகொண்டேன்
தீபாவளி பொங்கல் வருகையின் பொழுது மீண்டும் எங்கள் நட்பு புதிப்பிக்கப்படும்
இப்பொழுது “பாலா tvl ” என்னும் இடத்தில் எனது தேடல் மீண்டும் துடங்குகிறது ..
யார் யார் சிவம் ….அன்பே சிவம் ….என்ற காலர் டியூன் நீண்டுஒலிக்கிறது ……

…. யாரு ?? …மிகவும் தளர்ந்த சப்தத்தில் ஒரு பெண் குரல்

ஓசூரிலிருலிருந்து நான் …………..பாலா இருக்கிறானா ???

.. அவரு இலிங்க …. மீண்டும் குரலில் ஒரு நடுக்கம்

.. வெளியே போயிருக்கிறானா ……வந்ததும் நான் ஓசூரிலிருலிருந்து கூப்பிட்டேன்னு சொல்லுங்க ..

… அவரு… அவரு …… வரவேமாட்டாருங்க என்று சொல்லும் பொழுது முற்றிலுமாக உடைந்தேபோனது அந்தக் குரல் ….. போன் துண்டிக்கப்படுகிறது …

ஊரெங்கும் கொரோனா ………பதற்றமும் பயமும் என்னைத் தொற்றிக் கொள்ள மற்ற நண்பர்களை அழைக்கின்றேன் .

மறு முனையில் நண்பனின் பதில் : ஆமாம் பாலாவிற்கு கொரோனா தொற்று ….

சற்றுநேரத்திற்கு முன்புதான் எல்லாம் முடித்துவிட்டதாகவும் . எனக்கு வாட்ஸ்சப்பில் தகவல் அனுப்பியதாகவும் சொல்கிறான்….

அதற்கு மேலே என்னால் எதுவுமே பேசமுடியாமல் … கண்களைத் துடைத்துக்கொள்கிறேன் .

மனம் முழுவதும் வெறுமை சூழ்ந்துகொள்கிறது …..

நீண்டநேரத்திற்குப்பின் ….. ஒரு கேள்வி …

இன்று என்னை அவனுக்கு போன் செய்யத்தூண்டியது எது ??

ஒருவேளை பாலா தன் கடைசி நாட்களில் என்னைப் பற்றி நினைத்திருப்பானோ???..
மீண்டும் கண்களைத் துடைத்துக்கொள்கிறேன்.

சத்தியமாக இன்று மதியம் மட்டும்மல்ல இன்னும் பல நாட்கள் ஆகும் நான் தூங்குவதற்கு

2 Comments on “ஒரு ஞாயிறு மதியம்/அதிரன்”

Comments are closed.