
ஜூம் மீட்டிங்கில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம். வாய்ப்பு அளித்த திரு அழகிய சிங்கர் அவர்களுக்கு நன்றி. இது போன்ற கதை விமர்சன நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறை. எனக்குக் கொடுக்கப்பட்ட கதை ‘பிரகாஷைக் காணவில்லையாம்’ திருமதி வாரணாசி நாகலட்சுமி அவர்கள் எழுதி, திருமதி கௌரி கிருபானந்தன் அவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கதை. இந்தக் கதையைப் படித்த போது ‘இது வெறும் கதையல்ல, பலர் வாழ்க்கையில் நடந்த ,நடந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான பிரச்னை’ என்று எனக்கு தோன்றியது. கண்களைக் கலங்க வைக்கும் அருமையான முடிவு கொண்ட மனோதத்துவ கதை .
கதையின் கருத்தை ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் , கதையின் இடையில் வரும் ‘ ‘ஸ்பர்தயா வர்ஜதே வித்யா’ என்ற சமஸ்க்ரித ஸ்லோகம் தான் கருத்து . ஸ்பர்தயா – போட்டியினால் , வர்ஜதே – வளரும் , வித்யா – கல்வி . போட்டியினால் கல்வி வளரும். இதைப் புரிந்து கொள்ள முடியாத இந்தக் காலப் பையன் ஒருவனுக்கும் , ஒரு மனோதத்துவ நிபுணிக்கும் புரிய வைக்கும் ஒரு டீச்சர் அம்மாவின் கதை இது.
மிகவும் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்டு இன்றைய பெற்றோர்கள் , மாணவர்கள் மனநிலையை, ஏன் ஒரு மனோதத்துவ நிபுணரின் மனநிலையையும் அப்பட்டமாக எடுத்துக் காட்டி , அதைத் திருத்த வேண்டிய அவசியத்தை, அந்த மனநல மருத்துவரே உணரும் முடிவோடு முடிகிறது. அவரை மட்டும் அல்ல, அந்த பையனின் கண்களிலும் கண்ணீரை முத்தாய்த் திரள வைத்து அவன் மாற்றத்தையும் நமக்கு உணர்த்துகிறது .
பொதுவாக, ஆங்கிலத்திலோ , வேறு மொழிகளிலோ எழுதப்பட்ட கதைகளை அதே மொழியில் படிக்கும் போது ஏற்படும் உணர்வு தமிழ் மொழி பெயர்ப்பில் கிடைக்காது என்று பலர் நினைக்கிறார்கள். அப்படி நினைத்தால், மற்ற மொழிகள் தெரியாத நம் போன்றவர்களால் இது போன்ற ஜீவன் உள்ள கதைகளை ரசித்துப் படிக்க முடியாது . எனக்குத் தெலுங்கு தெரியாவிட்டாலும், கதையின் ஜீவனை நமது கவுரி கிருபானந்தன் அவர்கள் அப்படியே தமிழில் கடத்தி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது . கதையில் வரும் அம்மாவின் பேச்சின் ஆழமும், அழுத்தமும் தமிழில் வெளிப்படும் விதமே அதற்கு காரணம். அவருக்கு நன்றியும் வாழ்த்தும் .
இப்போது கதைக்குள் வருவோம். பிளஸ் டூ இறுதித் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து பாஸ் செய்த ஒரு பையன் ஒரு நாள் காணாமல் போய் , சிலநாட்கள் கழித்து வீடு திரும்ப, இடையில் துடித்துப் போன அவன் பெற்றோர் நிலைமைக்கு வருந்தி அவர்களின் உறவினர் ஒருத்தி தன் மகள் மனோநிலை மருத்துவரை அனுப்பி பார்த்து வரச் சொல்கிறாள்.
ஏற்கனவே , இது போன்ற நிலைமைகளுக்கு பெற்றோர் தான் தான் காரணம் , குழந்தைகள் மேல் தவறு இல்லை என்று நம்புகின்ற அந்த மருத்துவர் அதே மனோநிலையில் சென்று அந்த அம்மா அப்பாவை திருத்தும் நினைவில் சென்று அங்கெ அம்மா கொட்டித் தீர்த்த பேச்சில் தெரிந்த உண்மை உணர்ந்து ஒரு புதிய பாடம் கற்ற மனநிலையுடன் திரும்புகிறாள்.
இந்த பின்னணியோடு
கதை அந்த மனநிலை மருத்துவரின் கண்ணோட்டத்தில் விரிகிறது
முதலில் அந்தப் பையன் பக்க நியாயங்கள் அவன் வார்த்தைகளில்
“இத்தனை பரீட்சைகள், போட்டிகள் இல்லாத காலத்தில் சுமாரான மதிப்பெண்கள் வாங்கியவர் என்னை மட்டும் தொண்ணூறு பர்சென்ட் வாங்கவில்லை என்றும், காலையில் நான்கு மணிக்கு எழுந்து கொள்ளவில்லை என்றும் வார்த்தைகளாலேயே பொசுக்குவார். ரமேஷுக்கு ஐ.டி.யில் சீட் வந்தாலும் வந்தது. எனக்குக் கேடுகாலம் வந்து விட்டது. அவன் அவன்தான். நான் நான்தான். அவனைப் போல் என்னால் எப்படி இருக்க முடியும்? எப்போதும் ஒப்பீடுதான். அதனால்தான் எனக்கு அவனைக் கண்டால் வெறுப்பு! படிப்பின் மீது துவேஷம்!”
என் பக்கம் பார்க்காமலே தாழ்ந்த குரலில் தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தினான்.
இப்போது அந்த மனோதத்துவ மருத்துவரின் மனநிலை .
சலபதியையும், சுஜாதாவையும் கூண்டில் நிற்கவைத்துக் கேள்வி கேட்கணும் போல் இருந்தது.
சில சம்பாஷணைகளுக்குப் பிறகு ,
அம்மா பதில் பேசும் அந்த வார்த்தைகளை அப்படியே உங்கள் முன் பேசுகிறேன். கதையின் முழு ஜீவனும் புரிந்துகொள்ள இதுவே போதும்.
“ஆமாம் அக்கா! அவனுடைய சுயமரியாதைக்கு இழுக்கு வரும் விதமாக நடந்துகொண்டு ரொம்ப தவறு செய்து விட்டோம். சிரத்தையாகப் படிக்க வேண்டிய மாணவப் பருவத்தில் மணிக்கணக்காய் டி.வி. பார்க்க வேண்டாம் என்றும், வேலையற்ற வீடியோ கேம்ஸ் விளையாட வேண்டாம் என்று சொல்வதும் தவறுதான்.”
இப்போது அந்த மருத்துவர்.
“சுஜாதா! நான் அப்படி சொன்னேனா?. நிலைமை எப்படி இருந்தாலும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே கம்யூனிகேஷன் அறுந்து போகக் கூடாது..”
இப்போது சுஜாதா!
“எங்களுடைய உயிரை அவன்மீது வைத்திருக்கிறோம். என்றைக்காக இருந்தாலும் மரத்திலிருந்து தான் காய்க்கு ஊட்டம் கிடைக்குமே தவிர காய்லிருந்து மரத்திற்குக் கிடைக்காது இல்லையா. நீங்க இவ்வளவு பிரியத்துடன் உதவி செய்ய முன் வந்திருக்கீங்க என்பதால் சம்மதிக்கிறேன்.’
“போட்டி பரீட்சைகள் வேண்டாம் என்று நினைக்கிறவன் ஐ.ஐ.டி. கோச்சிங் கொடுக்கும் கல்லூரியில் சேர்க்கச் சொல்லி ஏன் பிடிவாதம் பிடித்தான் என்று கேளுங்கள். ஒன்றரை லட்சம் பீஸ்! புத்தகங்களுக்கும், வேனுக்கும் ஐம்பதாயிரம்! அவன் பள்ளி நண்பர்கள் சுரேஷ், சந்தீப், பாப்ஜி, வெங்கி, டிங்கு எல்லோரும் அங்கேதான் சேருகிறார்களாம். அவனும் அங்கேதான் சேர வேண்டுமாம்.
உணவு நேரத்தில் அவனுக்கு விருப்பம் இருந்தால் சாப்பிடுவது, இல்லாவிட்டால் நண்பர்களுடன் பக்கத்தில் இருக்கும் புட் ஜாயிண்டில் பொழுது போக்குவது. என்னடா இது என்று கேட்டால் உச் கொட்டுவான். மந்திர ஸ்தாயில் எல்லாவற்றுக்கும் பழக்கப்பட்டு விட்டவள் போல் சொல்லிக் கொண்டே போனாள் சுஜாதா.
அதுவரையில் அசையாமல் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த பிரகாஷ் சட்டென்று எழுந்து போகப் போனான். அவன் கையைப் பிடித்துத் தடுத்துவிட்டு, “இருடா கண்ணா! நம் பக்கத்தை எடுத்துச் சொல்லும்போது அம்மா, அப்பா பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்கள் இல்லையா? அவர்கள் சொல்வதையும் நாம் கேட்டுக் கொள்ளணும்” என்றேன்.
ஒரு நிமிஷம் கழித்து விரக்தி நிரம்பிய புன்னகையை உதிர்த்துவிட்டு, திரும்பவும் மெதுவாகச் சொல்லத் தொடங்கினாள் சுஜாதா.
அவன் சொன்னதை எல்லாம் நம்பி வந்தோம். என்றும் இல்லாத விதமாக ஸ்பெஷல் வகுப்புகள் என்றும், கம்பைன்ட் ஸ்டடீஸ் என்றும் சொல்லிச் சில சமயம் சினிமாக்கும், ஊர் சுற்றவும் போயிருக்கிறான். எவ்வளவு பாசத்துடன் வளர்த்தோம்? அவன்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்? எங்களிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன?”
பிரகாஷ் நாற்காலியில் சங்கடத்துடன், பொறுமையின்றி அமர்ந்து இருந்தான்
“இன்னும் கொஞ்சம் காலம் போனால் நம் நாட்டிலும் பெற்றோர்கள் கோபித்துக் கொண்டார்கள் என்று குழந்தைகள் புகார் செய்தால், பெற்றோர்களைப் பிடித்துக்கொண்டு ஜெயிலில் போட்டு விடுவார்களோ என்னவோ. .
“நாங்கள் யாருடனும் அவனை ஒப்பிடக் கூடாது. ஆனால் அவன் மட்டும் சந்தீப் ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கிக் கொண்டான் என்றும், பப்லூ தன் பிறந்தநாளை பிஜ்ஜா ஹட்டில் கொண்டாடினான் என்றும், சுதீர் தினமும் பெஞ்சி காரில்தான் வருவான் என்றும் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.”
உன்னைப் போன்ற மேதாவிகளின் கண்ணோட்டத்தில் ஆதரவற்றவன். பெற்றோரின் கொடுமைக்கு நலிந்து போகும் பாலகன். உன் வரைக்கு எதற்கு? அவன் பார்வையிலும் அப்படித்தான்.”
ஒரு முறை கல்லூரியில் பெற்றோர்களின் கூட்டத்திற்கு போயிருந்தபோது, எங்களுக்குப் பக்கத்தில் உட்காருவதற்குக் கூட அவனுக்கு தலைகுனிவாக இருந்திருக்கிறது. ‘நீ இன்னும் கொஞ்சம் ரிச் ஆக டிரெஸ் செய்து கொண்டு வந்திருக்கலாம் இல்லையா. இப்படி பத்தாம்பசலியாக ஏன் இருக்கிறாய்?’ என்று சலித்துக் கொண்டான்.
பல வீடுகளில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள உறவு தும்மினால் கழண்டு போகும் மூக்கு போல் இருக்கிறது என்று சொன்னால் மறுக்க முடியுமா?. அவன் நடத்தைக்குக் குன்றிப்போய் நாங்கள் எங்கேயாவது போய் விட்டால் அவன் எங்களைத் தேடி அழைத்து வருவான் என்கிறீர்களா?” இதழ்களில் வலிந்த சிரிப்புடன் கேட்டாள்.
அந்த வெற்றுப் புன்னகை என் இதயத்தைத் தாக்கியது. அதற்குள் சலபதி காபி கோப்பைகளுடன் ட்ரேயை எடுத்து வந்தான். முதலில் பிராகாஷிடம் சென்று, “போர்னவீடா எடுத்துக்கொள் கண்ணா” என்று தனியாக வைத்திருந்த கோப்பையை எடுத்து அவனிடம் கொடுத்தான்.
நிமிர்ந்து அவன் தன் தந்தையை பார்த்த பார்வையில் ஈரமாக இருந்த அவன் விழிகள் கண்ணாடியைப் போல் பளபளத்தன. கோப்பையைப் பெற்றுக்கொண்டே, “ஐ யாம் சாரி அப்பா!” என்று சொல்லப் போனான். தொண்டைக்குழியில் ஏதோ அடைத்துக்கொண்டது போல் இருந்தது. கண்களிலிருந்து இரண்டு முத்துக்கள் உதிர்ந்தன. சொல்ல முடியாததை கண்களால் உணர்த்திக்கொண்டே அவன் அம்மாவின் பக்கம் பார்த்தான்.
காபியைக் குடித்துவிட்டு சற்றுநேரம் உட்கார்ந்த பிறகு வீட்டிற்கு கிளம்பினேன். கார் வரையிலும் வந்து தாங்க்ஸ் சொல்லி, விடைகொடுத்தார்கள் சலபதியும் சுஜாதாவும்.
அவர்களிடமிருந்து இன்று நான் கற்றுக் கொண்ட பாடத்திற்கு நன்றி தெரிவிக்கத் தோன்றாமல் அப்படியே வந்துவிட்டேன்
இத்துடன் முடிகிறது கதை.
முழுக் கதையைப் படிக்கும் எவருக்கும் கண்கள் கலங்கும்.. காரணம் தெலுங்குக் கதையை தமிழில் உணர்வு பூர்வமாக மொழிபெயர்த்து, அந்த பெற்றோரின் உரையாடல்களின் வழியே அவர்கள் உணர்வையும், அந்தப் பையனின் உணர்வையும் , நமக்குக் கடத்திய பெருமை கௌரி மேடம் அவர்களையே சாரும்.
மொழிபெயர்ப்புக்காக அவருக்குக் கிடைத்த சாகித்திய அகாடமி விருது போல இன்னும் பல விருதுகள் அவர் நிச்சயம் பெற்றிடுவார் . அதற்காக முன்கூட்டியே வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இத்தகைய ஒரு அற்புதமான கதையைப் படித்து அதைப்பற்றிப் பேச வாய்ப்பளித்த அழகிய சிங்கர் அவர்களுக்கும், பொறுமையுடன் கவனித்துக் கேட்ட உங்களுக்கும் நன்றி கூறி எனது பேச்சை முடிக்கிறேன். . வணக்கம்.
