அனுராதா ஜெய்ஷங்கர்/பரிசோதனை

“ஒரு சிறிய பரிசோதனை செய்யப் போகிறோம். அனைவரும் தயாரா?”
பேராசிரியரின் கேள்விக்கு மாணவிகள் உற்சாகமாகத் தலை அசைத்தார்கள்.
“இந்த மூங்கிலால் ஆன உருவத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். கைகளால் உணர்ந்து கொள்ளலாம். அளவு எடுத்துக்
கொள்ளலாம். பக்கத்திலேயே பல வண்ணக் கலவைகள், பொருட்கள் வைக்கப் பட்டுள்ளன. அவை இடம் மாறாது . அவற்றையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
பின் அனைவரும் வெளியேறி விட்டு, ஒவ்வொருவராக கண்கள் கட்டப்பட்டு உள்ளே வருவீர்கள்.
உங்கள் விருப்பம் போல வண்ணங்களையும் பொருட்களையும் வைத்து இந்த உருவத்திற்கு முகமும், உடையும், பின்புலமும் கொடுக்கலாம். இதன் இறுதி வடிவம் உங்களின் கூட்டு முயற்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்”.
மாணவிகள் தங்களுக்குள் பேசி யார் என்ன, எப்படி, எதைக் கொண்டு செய்யவேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டார்கள். அதன்படி ஒவ்வொருவராக வந்து கண்களைக் கட்டியபடி விருப்பமான வண்ணம், பொருள் என்று அவர்கள் நினைவில் இருந்த இடத்தில் இருந்து கையில் கிடைத்ததை வைத்து முகமும், உடையும், தொப்பியும் என்று வரைந்து, ஒட்டி முடித்தார்கள்.
இறுதியில் அனைவரும் வந்து பார்த்தபோது அவர்கள் நினைத்ததற்கு முற்றிலும் மாறான ஒரு உருவம் நின்றது.
” இந்த உருவம்தான் சமூகத்தின் பிரதிநிதி. அது வெவ்வேறு விருப்பங்கள், எண்ணங்கள், நோக்கங்கள், கொள்கைகள்,திறன்கள் கொண்ட பலராலும் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு ஒழுங்குடன் கூடிய அனைவரின் கூட்டு முயற்சியே ஒரு சமூகம் முன்னேற, சிறக்க அடிப்படை என்பதை நினைவில் கொள்ளுங்கள்”.
அந்த சமூகவியல் மாணவிகள் மறக்க முடியாதபடி ஒரு பாடம் நடத்திய ஆசிரியரை நன்றியுடன் பார்த்தார்கள்.
**
.

2 Comments on “அனுராதா ஜெய்ஷங்கர்/பரிசோதனை”

Comments are closed.