
- அமுத ரமணன்
சிறந்த புலவரும், பகவான் மீது ஆழ்ந்த பக்தியும் கொண்டவருமான முகவைக் கண்ண முருகனார், ஆன்ம சாதகர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் ஐயங்களை நீக்கி வழிகாட்டியவர். ரமணன் என்ற பெயரைக் கேட்டதுமே உள்ளம் உருகுவாரெனினும், பகவானின் உபதேச மொழிகளை, பகவான் அருளியபடியே பின்பற்ற வேண்டும் என்று அறுதியிட்டுக் கூறுவார். முருகனார் பகவான் மீது கொண்ட அயராத பக்தியின் தீவிரத்தைக் கண்டு அவரை ‘பகவானின் நிழல்’, என்று அன்பர்கள் குறிப்பிடுவர்.
ஒரு சமயம் நான் அவரிட பகவான் அருளிய விசார மார்க்கம் பின்பற்றுவதற்கு மிகவும் அரிதாக இப்ப எனக்கு இருக்கிறது; எனவே வேறு சில எளிய வழிமுறைகளைக் கையாண்டு, மனமுதிர்ச்சி அடைந்தவுடன் விசார மார்க்கத்தைக் கடைப்பிடிப்பேன் என்று கூறினேன். உடனே முருகனார், ‘இவையெல்லாம் தப்புவதற்கு வழி; பகவானிடம் வந்து அவருடைய உபதேச மொழிகளை அறிந்த பிறகு உடனே ஆத்ம விசாரத்தில் மூழ்கி விடவேண்டும். பகவானால் ஈர்க்கப்பட்ட ஒருவன், ஏற்கெனவே அவர் காட்டிய நேரான பாதையில் (ஆன்ம விசாரம்) ஈடுபட்டு விடுகின்றான். பகவான் மற்ற வழிகளைக் கூறியது அதைப்பற்றி குறிப்பாக வினவிய சாதகர்களுக்கே தவிர, உனக்கில்லை . அவரிடம் வந்தபிறகு ஏன் மற்ற வழிகளைத் தேடி வீணே அலைய வேண்டும்? என விடையிறுத்தார்.
இங்ஙனம் விடையளித்த முருகனாரே சில நாட்கள் கழித்து என்னிடம் பேசும்போது, பகவான் திருவுருவைப் பற்றியும் அவரின் திருநாமத்தின் இனிமையைப் பற்றியும்
கண்ணீர் வழிய பின்வருமாறு கூறினார்: ஆமாம்; ஆமாம்; பகவானின் திருநாமம் ஒன்றே நமக்குப் போதும். அவரின் திருவுருவம் நம்மை அவர்பால் ஈர்த்து இறுதியில் அவரிடம் ஒன்றச் செய்துவிடும். அவர் திருநாமம் அனைத்தையும் ஆரத் தழுவக்கூடியது; அவர் உருவமோ எல்லாவற்றையும் உள்ளடக்கக் கூடியது.
அரசகுலத்திற் பிறந்த பிரபாவதி ராஜே, தன் திருமணத்திற்கு முன் சிலகாலம் ஆச்ரமத்துக்கு அருகில் தங்கியிருந்தாள். அவள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவித உடையலங்காரத்தில் வருவாள். இன்று பக்த மீரா என்றால் நாளை சகுந்தலை
ஒருநாள் மலையாளப் பெண், மறுநாள் மார்வார் அழகி;
அவளுக்குத் திருமணம் நிச்சயமாகி ஆச்ரமத்தை விட்டுப் மனமின்றி மிக்க வருத்தத்துடன் போனாள். திருமணம் முடிந்தவுடன், தம்பதி சமேதராய், பகவான் தரிசனத்திற்காக திருவண்ணாமலை வந்திருந்தாள். தன்னுடன் கொண்டு வந்திருந்த இரு அழகிய ரோஜாப்பூ
மாலைகளை தன் கைகளால் பகவானுக்கு அணிவிக்க வேண்டுமென்ற ஆசை அவளுக்கு. இந்த மாதிரி செய்கைகளுக்கெல்லாம் அப்பொழுது கடுமையான தடை இருந்தது. ஆனாலும், பிரபாவதிக்குத் தன் கோரிக்கையைக்
கைவிட மனமில்லை. தன் இயற்கைப்படி பகவான் மாலையணிய மறுத்து விட்டாலும், அவற்றைத் தாயார் சந்நிதியில் சமர்ப்பிக்கலாமே என்றது* பரிவுடன்.
*அது நீ’ (‘தத்’வமஸி) என்ற வேதவாக்கில் அது என்பது பரம்பொருளைக் குறிப்பது. பரம்பொருளே ஓர் மனித உருக்கொண்டு பகவான் ரமணராக வந்ததால், அவரைப் பற்றி அடியார்கள் பேசும்போது ‘அது’ (வந்தது, சென்றது) என்றே குறிப்பிடுவது வழக்கம்.
“அது நீ யென்று அம்மறைகள் ஆர்த்திடவும்.
ஸ்ரீ பகவான் (உள்ளது நாற்பது)
ஏமாற்றத்துடன் பிரபாவதி மாலைகளை பகவானருகில் சோபாவில் வைத்து, நமஸ்கரித்துவிட்டு வருத்தத்துடன் அழுதுகொண்டே தூரத்திலிருந்தே ஹாலை விட்டு வெளியேறினாள்.
சற்றுப் பொறுத்து குஞ்சுஸ்வாமி அவளைக் கூப்பிட்டு, ஒரு அபூர்வக் காட்சியை சுட்டிக் காட்டினார். அவளுடைய மாலைகளிலிருந்து சோபாவில் உதிர்ந்திருந்த ரோஜா இதழ்களை பகவான் தன் வாயில் போட்டுக் கொண்டிருந்தது!
“பகவான் உன் மாலைகளை நிராகரித்தது என்றெண்ணி வருத்தப்பட்டாயே. நீ எவ்வளவு பாக்கியசாலி! பகவான் உன் ரோஜா இதழ்களை உணவாகவே ஏற்றுக்கொண்டு விட்டது” என்றார் குஞ்சுஸ்வாமி ஆதரவாக. பிரபாவதியின் ஏமாற்றக் கண்ணீர் குதூகலமான இன்ப, ஆனந்தக் கண்ணீராக மாறியது.
தினசரி காலையில் ஆச்ரமத்தில் அருமையான இட்லிகள், சட்னி அல்லது மிளகாய்ப் பொடி-எண்ணெய் அல்லது சூடான சாம்பாருடன் பரிந்து பரிமாறப்படும். இதன் ருசி நமது ‘இந்தியாவின் கவிக்குயில்’ சரோஜினி நாயுடுவுக்கு, அவர் இங்கு சிலகாலம் தங்கியிருந்தபொழுது மிகவும் பிடித்துவிட்டது. அவர் காந்திஜியிடம் ஆச்ரம ‘இட்லி-புராணம்’ பாடினார் போலும்! (அந்த இட்லிக்கவிதை நமக்குக் கிடைக்காமல் போய்விட்டதே!)
சபர்மதி ஆச்ரமத்தில் எப்பொழுதாவது பரிமாறப்பட்டால் காந்தியடிகள் ‘ஆ! ஆ! ரமணாச்ரம இட்லி!” என்பாராம். இந்த இட்லி ஆச்ரமத்தில் எப்படி ஆரம்பித்தது என்பதைப் பார்ப்போம்.
பகவான் அதிகாலையில் எழுந்து சமையற்கட்டில் காய் நறுக்குவது, உப்புமா கிளறுவது, சமைப்பது என்று எல்லாவற்றிலும் பங்கு எடுத்துக் கொண்டிருந்த காலம் அது. சமையற்கட்டில் கைங்கரியம் செய்து வந்த பக்தை தென்காசியையடுத்த பட்டக்குறிச்சியிலிருந்து நிறைய முதல் தரமான புழுங்கலரிசி அனுப்பியிருந்தார். ஆச்ரமத்தில் என்ன செய்வது என்று சாந்தம்மாள் என்ற மற்றொரு சமையலறை சேவார்த்தி பகவானிடம் கேட்டுக்கொண்டு, அப்புழுங்கலரிசியைக் கொண்டு இட்லி மாவு அரைத்து
வைத்தார். மறுநாள் காலை பரிமாறப்பட்ட இட்லி எல்லோருக்கும் அமிர்தமாய் இருக்கவே, அன்றிலிருந்து ஆச்ரமத்துக் காலை உணவு இட்லியாயிற்று. இன்றும் ஆச்ரம இட்லி அதன் நேர்த்தியிலும், சுவையிலும் சிறந்து
விளங்குகின்றது. இதற்கு அடிகோலிய பெருமை லோகம்மா பாட்டியையே சாரும்.
அக்னி க்ஷேத்திரமான அருணாசலத்தின் கோடைவெயிலும் அக்னியேதான்! ஆச்ரமவாசிகள்
வேடிக்கையாக ‘திருவண்ணாமலையில் வேனிற்காலம் பத்து மாதம்’ என்பார்கள். அதுவுமன்றி, சித்திரை-வைகாசி மாதங்களில் வெயிலின் கொடுமை இன்னும் கடுமையாக இருக்கும். சூரிய வெப்பத்தினால் பூமி கொதிக்கும். ஆயினும் பகவான் தம் வாழ்நாளில்
ஒருபொழுதும் காலணி அணிந்ததில்லை. தினம் தவறாமல் பகல் உணவான பகவான் பலாக்கொத்துக்குப் போய்வருவது வழக்கம். பலாக்கொத்துக்குப் போகும் பாதை மணலை வறுத்துக் கொட்டியது போலிருக்கும். (பகவானின் பாதங்கள் என்றும் காலணி காணாதவை. ஆனாலும் அந்த அழகிய அசைந்தாடும்.
சற்றும் மாறாது. வேகம் குறையவோ, கூடவோ செய்யாது. பாறை போன்ற நமது கடின மனங்களில் நடமாடி அந்த பாத மலர்கள் மரத்துப் போயினவோ!) சுடும் வெயிலோ, கொட்டும் மழையோ எதுவானாலும் பகவானின் நடை ஒரே சீர்தான். ஆனால் உடன் வருபவரை மாத்திரம் ‘அங்கிருக்கும் மர நிழலில் ஓடிப்போய் நின்றுகொள்’
மேல்துண்டைக் கீழே போட்டு அதன்மேல் நின்றுகொள்’ என்றெல்லாம் சொல்லிப் பாதுகாப்பார். தான் மட்டும் அந்த நிலையிலும் வேகத்தை மாற்றாமல் நடந்து கொண்டிருப்பார். (ஓயாமல் சுழன்று வழுக்கியோடும் நம் மனங்களில் ஊன்றி நிலை நின்று பழகிய பாதகமலங்களை வறுக்கும் வெயிலின் சக்தி என்ன செய்ய முடியும்!)
மனோநாசம்தான் சாதகனின் குறிக்கோளாக வேண்டுமேயன்றி மனோலயம் அல்ல. மனம் லயத்தில் விழுந்து விடக்கூடாது என்று பகவான் அடிக்கடி எச்சரிப்பதுண்டு.
சென்னையில் தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த சங்கரானந்தர் என்ற பக்தருக்கு நீண்டகால மந்திர ஜபங்களின் பலனாக லயசமாதி லபித்தது. அதனால்
அவருக்கு லௌகீக விஷயங்களில் பற்று விட்டுப் போயிற்று. அடிக்கடி லயத்திற்குப் போய்விடுவதால், அலுவலகத்திலும், வீட்டிலும் அவரால் தன் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற இயலவில்லை. அதனால் அவர் ர் ஆறுமாத விடுப்பு எடுத்துக்கொண்டு ஆச்ரமம் வந்தார். ஹாலில் பகவான்முன் உட்கார்ந்த சிறிது நேரத்தில் அவருக்கு புற உணர்வு அற்றுப் போயிற்று. மதிய உணவுக்கான மணி அடித்து பகவான் எழுந்த பின்பும் அவர் அசையவில்லை. பகவான் அவரைத் தன் கைத்தடியால் மெல்ல அசைத்து எழுப்பி அவரைச் சாப்பிட அழைத்துச் சென்றது.
பகவான் சொற்படி குஞ்சுஸ்வாமியும், விஸ்வநாத ஸ்வாமியும் சங்கரானந்தரை லயத்தில் ஆழாமல் கருத்துடன் பார்த்துக் கொண்டனர் , காலையில் கோயிலுக்கு கூட்டிச்சென்றும்,
மாலையில் சமுத்திர ஏரிக்கோ அல்லது வேறெங்காவதோ அழைத்துச் சென்றும், அவர் களைப்பினால் தானாக உறங்கும் வரை யிலும் அவரைக் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். சில நாட்களில் பகவானருளால் அவர் நிலை சரியாகி, வீடு திரும்பி இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பினார். அலுவலகத்தில் பதவி உயர்வும் பெற்றார். இந்தச் சங்கரானந்தர்தான் மாத்ருபூதேச்வரர் ஆலயத் திருப்பணிக்கு வேண்டிய தேக்கு மரப்பலகைகளை வாங்குவதற்காக நிரஞ்சனானந்த ஸ்வாமிகளை (சின்ன ஸ்வாமிகள்) பர்மாவுக்குக் கூட்டிச் சென்றவர்.
பகவான் எப்பொழுதாவது தூங்குவதுண்டா? யாருக்கும் தெரியாது. தூங்காமல் தூங்கி சுகம் பெறுபவருக்கு உறக்கம் உண்டா? அவருக்கே வெளிச்சம். நள்ளிரவு இரண்டு, மூன்று மணிக்கெல்லாம் பகவான் சோபாவில் எழுந்து
உ ட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். நம் தாயினும் மிகு தயாபரன் அந்தத் தாயினும் சால அடியாரைப் பரிந்து பேணுவார். ‘கனவு காண்பது சாதனைக்குத் தடை. அதனால் அதற்கு இடங்கொடாமல்
நேரே உறக்கத்தில் ஆழ்ந்து விடவேண்டும்’ என்று பகவான் சொல்வதுண்டு. இரவில் பகவானின் சோபாவைச் சுற்றி தொண்டர்களும், மற்றவரும் ஏன் நாய்களும் கூட படுத்துத் தூங்குவது வழக்கம். சில சமயம் இரவில் சோமசுந்தர சுவாமி விசித்திரமாக சத்தம் போடுவார். பகலில் குரங்குகளை விரட்டுவதற்காக சத்தம் போடுவதையே கனவிலும் கண்டு, அதே விசித்திர சத்தத்தை எழுப்புவார் போலும்! அப்போதெல்லாம் ‘சரி, சரி, குரங்குகள் எல்லாம் ஓடிவிட்டன, நீ தூங்கு’ என்று சொல்லி ராமகிருஷ்ண சுவாமி அவரைத் தூங்க செய்ய முயல்வார். ஆனால் பகவான் அவரைத் தடுத்து சோமசுந்தர சுவாமி ஸ்வாமியைக் கனவிலிருந்து எழுப்பிவிடச் சொல்வார்.
காலையில் விழிப்பு வந்தபின், மறுபடியும் தூங்கக்கூடாது என்பது பகவானின் அறிவுரை. அதனால் தொண்டர்கள் யாராவது அப்படிச் செய்ய முயற்சி செய்தால், தன் கைத்தடியால் மெல்லத் தட்டி எழுப்பிவிடுவார். மற்றபடி பகவான் உறங்குபவரை
எப்பொழுதும் எழுப்ப மாட்டார்.
பேனாவில் மை நிரப்பினாலோ, அல்லது அது புதியதாக இருந்தாலோ பென்சில்ச சீவினாலோ, பகவான் அது சரியாக எழுதுகிறதா என்று பரிசோதிப்பதற்காக ஒரு துண்டுத்தாளில் எழுதிப் பார்ப்பதுண்டு. அப்படி எழுதும் வார்த்தை “அருணாசலம்” என்றிருக்கும். இந்த விஷயம் அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்த விஷயம், பகவானுக்கு அருணாசலேசரிடம் இருந்த ஆழ்ந்த ஐக்கிய பக்தி! தன்னிச்சையான பகவானுடைய இந்தச் செயல் அண்ணாமலை உச்சியில் கார்த்திகை தீபம்போல் அதை விளக்குகிறதல்லவா?
குஞ்சுஸ்வாமிகளின் நோட்டுப் புத்தகத்தில் பகவான் வரைந்த அண்ணாமலை படத்தை ஆச்ரம வெளியீடான ‘மௌண்டன் பாத்’ பத்திரிகையில் வெளியிட்டிருந்தோம். மற்றொரு தொண்டரான சிவானந்த சுவாமி என்னிடம் தந்த அவருடைய நோட்டுப் புத்தகத்திலும் பகவான் வரைந்திருந்த அண்ணாமலையின் படம் இங்கே தரப்பட்டுள்ளது.
(இன்று பகவான் ரமணர் அவதரித்த நாள்.)
