அனுராதா ஜெய்ஷங்கர்/நாகரிகம்


காற்றில் பறக்கும் சுருள் கூந்தலும் ஜீன்ஸ் குர்தியும் முதுகுப் பின் பை,கேமரா சகிதம் நிஷா ஒரு வார மலையேற்றத்துக்குப் பின் வெளி உலகத் தொடர்பு இல்லாத அந்தப் பழங்குடியினர் இருப்பை அடைந்தாள்.
ஆண்கள் அனைவரும் வேட்டைக்குச் சென்று இருக்க அங்கிருந்த பெண்களிடம் சைகை மூலமும் உடைந்த தமிழிலும் பேசியபோது தெரிந்துகொண்ட அவர்களது வாழ்க்கை முறை இன்றைய நாகரிகத்தில் இருந்து முற்றிலும் பின்தங்கி, தொடர்பில்லாமல் இருப்பதை உணர்ந்து அதிர்ந்தாள்.
மாலை வந்து இருள் கவிழவே இரவு அங்கு தங்கினாள்.
கூட்டத்தில் இருந்த இளம் பெண் ஒருத்தி போய் வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு கிளம்ப நிஷாவுக்கு மீண்டும் அதிர்ச்சி.
” இந்த இரவில் எங்கே தனியே போகிறாள்?”
” பக்கத்து மலையில் இருக்கும் அவளது அக்கா வீட்டுக்கு”.
” தனியே செல்ல பயம் இல்லையா? விலங்குகள், ஆண்கள்?”
” விலங்குகளை அவள் சமாளித்துக் கொள்வாள். ஆண்களால் என்ன பயம்?”
நிஷா குழம்பி அவளது பயத்தைச் சொன்னாள்.
அந்த ஆதிகுடிப்பெண் பெரிதாக சிரித்தாள்.
” ஒரு பெண்ணின் அனுமதியும் விருப்பமும் இன்றி இங்கு எந்த ஆணும் அவளது நிழலைக் கூடத் தொட மாட்டான். நாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்து எங்கள் கழுத்தில் இருக்கும் சுருள் மாலையை அணிவித்து கணவனாக ஏற்றுக் கொள்ளும் ஆண் உட்பட!”
****

விஜயலக்ஷ்மி கண்ணன் /அம்மா யார்? – விருட்சம் நாளிதழ்

7 Comments on “அனுராதா ஜெய்ஷங்கர்/நாகரிகம்”

Comments are closed.