
புது வருஷம் பிறக்கப் போகுதே என்ன உங்க மனசுல இந்த வருஷத்துக்கான திட்டங்கள் ? மைக் முன்னால் நீண்டது.
அவர்கள் நால்வரும் கொஞ்சம் அதிர்ச்சியானார்கள். பிரபலங்களுக்கு முன்னால் நிற்கும் மைக்குகள் நம் முன்னால் நிற்கிறதே என்று. “எங்களையா கேட்கிறீங்க என்றாள் ஒருத்தி”. “ஆமா உங்களத்தான்” என்றார் பத்திரிகையாளர்.
“ஒருத்தி சொன்னாள் என்னவோ இந்த வருஷமாவது கைக்கும் வாய்க்கும் இல்லாம தாராளமா பணம் வரணும் நல்ல செலவா பண்ணனும்.”
இன்னொருத்தி சொன்னாள் “என்னத்த சொல்றது எங்க பார்த்தாலும் ஒரே சண்டை, பூசல், குழப்பம். ஊரே ரொம்ப ரத்த களறியா இருக்கிற மாதிரி எனக்கு ஒரு பீலிங் இருக்கு. அது இல்லாம எங்க பார்த்தாலும் அமைதியா இருக்கணும். எனக்கு அதான் ஆசை.”
இன்னொருத்தி சொன்னாள், “ஊரை திருத்துறது எல்லாம் நம்ம கையில இல்ல. இந்த வருஷம் முழுக்க நான் யாரெல்லாம் பார்க்கிறேனோ அவங்க எல்லார்கிட்டயும் நல்ல வார்த்தைகளா பேசணும்னு நினைக்கிறேன். அப்படியே கோவம் வந்தாலும் அதை அடக்கிக்கணும்னு நினைக்கிறேன். இந்த வருஷம் நான் நினைக்கிறது அதுதான்.”
இன்னொருத்தி சொன்னாள் “இவ கோவத்தை அடக்கப்போறா. அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிறா. அவ ஊரே நல்லா இருக்கணும்னு நினைக்கிறா. நான் இதெல்லாம் நடக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்க போறேன். அதுதான் என்னுடைய இந்த வருஷத்தோட ஆசை. எல்லாருக்காகவும் பிரார்த்தனை.
யார் யார் என்னென்ன நினைக்கிறாங்களோ அது எல்லாம் நடக்கணும்னு நான் பிரார்த்தனை பண்ண போறேன். டெய்லி அதான் பண்ண போறேன்.” அந்த பத்திரிகையாளர் அதிர்ச்சியில் உறைந்தார்.
சாமானிய மனங்கள் விசேஷமானவை.
