அழகியசிங்கர்/முடிவுரை

(நான் எழுதிய பிரமிளும் விசிறி சாமியார் என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது)

இந்தப் புத்தகத்தின் முடிவு பகுதிக்கு வந்து விட்டேன். ஆரம்பத்தில் நான், பிரமிள், விசிறிசாமியார் என்ற தலைப்பில் இந்தப் புத்தகத்தை எழுத நினைத்தேன்.  பின் என் மனம் மாறிவிட்டது.  பிரமிளும் விசிறி சாமியாரும் என்ற பெயரை வைக்கத் தோன்றியது.  பிரமிள்தான் விசிறி சாமியாரைப் பார்க்க திருவண்ணாமலைக்கு என்னை அழைத்துப் போனார்.  
நான் அங்கு போகும்வரை எனக்கு விசிறி சாமியார் போன்ற மகான்களைச் சந்திப்பதில் எந்தவிதமான சிந்தனையும் இல்லாமல் இருந்தேன்.   எனக்கு ஒன்றும் புரியவில்லை.  நான் சாதாரண நிகழ்ச்சியாகத்தான் இதை நினைத்தேன்.  நான் கூடச் சென்றாலும் பிரமிளைத்தான் யோகியார் சந்தித்தார் என்று சொல்ல வேண்டும்.  எங்களுடன் அவர் பேசவில்லை.  
ஆனால் அங்கு போனபின் அவரைச் சந்தித்தப்பின் இது சாதாரண நிகழ்ச்சி இல்லை என்று தோன்றியது.  
நாம் நம் வாழ்க்கையில் ஒருவரைச் சந்திக்கும்போது நமக்கு அவர் மூலம் என்ன தெரிய வேண்டுமோ அதைத் தொரிந்துகொள்ள  வேண்டும்.  விட்டுவிட வேண்டும் என்பதை விட்டுவிட வேண்டும். 
பிரமிளுடன் பழகியதும் அப்படித்தான்.  அவர் மூலம் எனக்கு அறிமுகமானவர் விசிறி சாமியார்.  ஆனால் அவரைச் சந்தித்த அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் சாமியார்கள் பின்னால் போகவில்லை.  எனக்கு வெறுப்பு என்பதெல்லாம் கிடையாது.  சாமியார்களைப் போய்ப் பார்க்கிறோம்.  அவர்கள் எதாவது சொல்லிவிட்டால் என்ன ஆவது என்ற பயம் கூட இருக்கலாம்.
                        **************
56 வயதிலேயே பிரமிள் இறந்து விட்டார்.  அவர் இறந்து போவதற்கான வயது அது இல்லை என்றுதான் நினைத்தேன்.  நான் அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவர் உடல்நிலையின் தீவிரத்தைப் பற்றி என்னிடம் சொன்னதில்லை.  ஆனால் அவருக்கு அடிக்கடி மஞ்சட்காமாலை நோய் வந்துகொண்டிருந்தது. 
ஒருநாள் அவர் தங்கியிருந்த அறையில் வலதுப் பக்கம் பக்கவாத நோய் வந்து அவர் அசையாமல் கிடந்தார்.  இந்தத் தருணத்தில்தான் நானும், வெளி ரங்கராஜனும் அவருடைய மோசமான நிலையை அறிந்துகொண்டோம்.
உடனே கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தோம். 
பிரமிள் விஷயத்தில் இரண்டு பிரச்சினைகளை நாங்கள் சந்தித்தோம்.  முதல் பிரச்சினை.  பணம்.  தனியார் மருத்தவமனையில் அவரைச் சேர்த்ததால் பணம் ஏற்பாடு பண்ணி கொடுக்க வேண்டியிருந்தது.  இன்னொரு பிரச்சினை அவரைப் பார்த்துக்கொள்வது.  24 மணிநேரமும் அவரைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.  அவருடைய தேவைகளை ஒருவர் கவனித்துக்கொண்டிருக்க வேண்டும். பிரமிளுக்கு உறவினர்கள் என்று யாருமில்லை.  நண்பர்கள் மட்டும்தான். அவர் இலங்கைக்காரர்.  ஆனால் இந்தியா வந்தபிறகு அவர் இலங்கைக்குப் போகவில்லை.
இந்த இடத்தில்தான் ஆதரவற்ற எழுத்தாளர்களுக்கு இன்சூரன்ஸ் மூலம் பணம் கிடைக்க வேண்டுமென்று நினைத்தேன்.  ஆனால் அதற்கு ஒரு அமைப்பு வேண்டும்.  அந்த அமைப்பு மூலம் ஆதரவு அற்ற எழுத்தாளர்களுக்கு வைத்திய செலவிற்குப் பணம் கிடைக்க வேண்டுமென்று நினைத்தேன்.   பிரமிள் படுத்தப்படுக்கையாக இருந்தபோதுதான் இந்த எண்ணம் எனக்குத் தோன்றியது.  இப்போது அரசாங்கமே பொது மக்களுக்கு அந்த உதவியைச் செய்கிறது. 
இந்தத் தருணத்தில் பிரமிளைப் பார்த்துக்கொள்ள சரவணன் என்பவர் கூடவே இருந்தார்.  அவருடைய சேவை என்பபதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.  எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது.  மருத்துவமனையில் இருந்தபோது பிரமிளால் பேசக் கூட முடியாது.  மருத்துவரைப் பார்க்கும்போது அவருக்கு புற்றுநோயும் தீவிர நிலையில் இருந்ததாகக் குறிப்பிட்டார். 
நானும் ரங்கராஜனும் பலவழிகளில் முயற்சி செய்து பணத்துக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தோம்.  இந்தத் தருணத்தில் பிரமிளுக்கு üவிளக்குý பரிசு வழங்கினார்கள்.  அதை ஏற்பாடு செய்தவர் வெளி ரங்கராஜன்.   அவருக்கு அதை வழங்க சி சு செல்லப்பாவே மருத்துவமனைக்கு வந்திருந்தார். பிரமிளுக்குப் பரிசு கொடுக்கும்போது சி.சு செல்லப்பாவே கண்கலங்கி விட்டார்.   ஒரு கட்டத்தில் பிரமிள் கோமா நிலைக்குப் போய்விட்டார்.
 பிரமிளின் ஆதரவாளரான கரடிக்குடியில் பணி புரிந்துகொண்டிருக்கும் மருத்துவர் ஒருவர் (அவர் பெயர் என் ஞாபகத்தில் இல்லை) அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துக்கொண்டார்.  பிரமிள் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் அந்த மருத்துவர் அவரிடம் நட்புப் பேணவில்லை.  அவர் ஒரு ஆன்மிகவாதி என்ற அளவில் பிரமிள் மீது அளவுகடந்த மரியாதை வைத்திருந்தார்.  
பிரமிள் அந்த இடத்திற்கு கோமா நிலையில்தான் சென்றார். அங்கு பதினைந்து நாட்கள் கூட உயிருடன் இல்லை.  கோமா நிலையிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. 
கரடிக்குடி மருத்துவமனையில் பிரமிளைச் சேர்த்தப் பிறகு நானும் ரங்கராஜனும் போய்ப் பார்க்க நினைத்தும் போய்ப் பார்க்க முடியவில்லை.  ஆனால் அவர் இறந்து போன செய்தி கிடைத்தப்பின்

போக முடிந்தது.
இந்த இடத்தில் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இறந்து விடுகிறார். ஆனால் அவரைப் பற்றி வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவர்களுடன் நண்பருடைய மரணத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாது. அப்படியே சொன்னாலும் உள் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். பிரமிள் மரணத்தின் போது இதை எதிர்கொண்டேன்.
பிரமிள் மரணமடைந்துவிட்டார் என்று தெரிந்தபோது என் மனம் நிம்மதி இல்லாமல் தவித்தது. வீட்டில் முழுவதும் விளக்க முடியவில்லை. இந்தச் செய்தியைக் கேட்ட என் நண்பர் மையம் ராஜகோபாலன் ஒரு ஆட்டோவில் இரவு பத்து மணிக்கு மேல் வந்திருந்து ஈமச் சடங்குக்காக வைத்துக்கொள்ளுங்கள் என்று பணம் கொடுத்துவிட்டுப் போனார்.
அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்ஙமே வரவில்லை. அடிக்கடி யூரின் போய்க்கொண்டிருந்தேன். படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது. அடுத்த நாள் காலையில் நானும் வெளி ரங்கராஜனும் கரடிக்குடிக்குக் கிளம்பிவிட்டோம்.
முதலில் வேலூருக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து கரடிக்குடிக்குச் சென்றோம். பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தபோது நான் நிம்மதி இல்லாமல் இருந்தேன். சென்னையிலிருந்து நானும் ரங்கராஜனும் வந்திருந்தோம். அதே போல் வேற வேற இடங்களில் பத்துப் பேர்கள் வரை வந்திருந்தார்கள்.
நான் பிரமிளின் பூத உடலைப் பார்த்தவுடன், எதிர்பாராதவிதமாய் படப்படப்பாய் இருந்த என் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. ஒருவித பேரமைதி என் மனதில் அந்தத் தருணத்தில் ஏற்பட்டது. இந்த மாற்றம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நம்ப முடியாமலிருந்தது.
அந்த மருத்துவமனையில் பிரமிள்தான் முதல் நோயாளி. அதுவும் கோமா நிலையில் இருந்த நோயாளி. அவரும் இறந்து போய்விட்டார். அங்கு புதிதாகச் சேர்ந்துள்ள செவிலிகள் அவர் மரணத்தைப் பார்த்து அழுதார்கள். அவர்கள் யாருக்கும் அவர் யார் என்று தெரியாது. அதுவும் கோமா நிலையில் யாருடன் பேச முடியாத நிலையில் அங்கு சேர்ந்தவர்தான் இறந்து விட்டார்.
அந்த ஊர் முறைப்படி பிரமிளை அடக்கம் செய்தார்கள். அடக்கம் செய்வதற்கு முன் அவர் உடலை குளிப்பாட்டி நெற்றியில் திருசூர்னம் இட்டார்கள். அப்போது பிரமிள் உடலைப் பார்க்கும்போது மலர்ந்து காணப்பட்டது. அங்கு வந்திருந்த எழுத்தாள நண்பர்கள் அவரைப் பற்றி பேசினார்கள்.
பிரமிள் என்ற சகாப்தம் முடிந்து விட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை இப்போது எழுதுகிறேன். இன்று கூட கரடிக்குடியில் பிரமிள் சமாதி இருக்கிறது. நானும் ரெங்கராஜனும் எப்படி சமாளித்தோம் என்று நினைக்கும்போதே திகைப்பாக இருக்கிறது.

பிரமிள் நம்மை விட்டுச் சென்றாலும் அவர் எழுதிய படைப்பு அவரை திரும்பவும் உயிரோடு கொண்டு வரும்.

One Comment on “அழகியசிங்கர்/முடிவுரை”

Comments are closed.