ஜெ.பாஸ்கரன்/“குறித்த நேரத்தில்” – சி.சு.செல்லப்பா

சி. சு. செல்லப்பா (1912-1998) ஒரு முக்கிய தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மற்றும் “எழுத்து” சிற்றிதழைத் தொடங்கி, நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். அவரது 10 ‘கட்டுரைகள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ‘குறித்த நேரத்தில்’ புத்தகம் சி.சு.செல்லப்பாவின் அழகிய 10 சிறுகதைகளைக் கொண்ட புத்தகமாகவே நான் பார்க்கிறேன்.
ஒவ்வொரு சிறுகதையும் அதன் இலக்கணம் மாறாமல், சிறிய நிகழ்ச்சி, எதிர்பாராத முடிவு என நகைச்சுவை கலந்து எழுதப்பட்டுள்ளது. செல்லப்பாவே சொல்வதுபோல எழுதப்பட்டுள்ளதால், அவரது அனுபவங்களாகக் கூட இருக்கலாம் எனத் தோன்றுகின்றது.
‘நாவலாசிரியர்’ கட்டுரையில் (அப்படித்தான் சி.சு.செ. சொல்கிறார்), நாவல் எழுதுவது எப்படி என்பதைத் தான் ‘கண்டுகொண்ட’ விதத்தை விளக்குகிறார். நையாண்டிக்குக் குறைவில்லை! “என் மேஜை முனிருந்த அலமாரியில் உள்ள உலகப் பிரபல நாவலாசிரியர்களான மார்ஸல் ப்ரெளஸ்ட், ஹென்றி ஜேம்ஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ், ஃப்ளாபேர், தாமஸ் மான் இவர்களை எத்தனை தடவைகள் படித்தும் பயனென்ன? என்னை ஒரு நாவலாசிரியனாக ஆக்காத இலக்கியக் கர்த்தாக்களை என்னென்பது? அவைகளை எடுத்துவிட்டு, நாவலேஸ்வரன் கடிலன் (இவரது பத்திரிகை ஆசிரியர்) அவர்களைப் பின்பற்றி வான சாஸ்திரம், பெளதீக சாஸ்திரம், இத்யாதி புஸ்தகங்களால் நிரப்பி, என் இலக்கிய ஞானத்தை வளர்த்துக்கொண்டு, ஒரு நாவலாசிரியராகத் திகழ்வதைவிட வேறு சிறந்த வழி எது இருக்கிறது?” என்கிறார். தொடர் நாவல் எழுதுகிறவர்களைப் பற்றிய அவரது நக்கலும், பகடியும் வியக்க வைப்பது!
யாரென்று ஒருவருக்கொருவர் தெரியாமலே, மூன்று ‘நண்பர்கள்’ உரையாடுவது “அறிமுக லக்ஷணம்”!
“அபேட்சகரின் உற்சாகம்” இன்றைய அரசியல்வாதிகளுக்கும் மிகவும் பொருத்தமாக இருப்பது ஆச்சரியம்!
தன்னுடைய நேர நிர்வாகப் பெருமை பேசும் மாணிக்கவேலுவின் ‘மறதி’ சென்ஸ் அவரைத் தலைகுனிய வைக்கிறது. நேரம் தவறாமை மட்டும் போதாது என்கிறார் “குறித்த நேரத்தில்” சிறுகதையில். “எங்கள் கிராமத்தில் சொல்லிக்கொள்வார்கள். மந்தை மாடுகள், கணக்காக மேயப்போய் கணக்காகத் திரும்பிவிடும் என்று”. ‘அவைகளுக்கு டயம்சென்ஸ் ரொம்பத் துல்லியமாகத் தெரியுமாம்’ என்று முடிக்கிறார்.
பயந்த காரணம்,, லீவு, சட்டம் சட்டமே, வெல்லமோ வெல்லம், நல்ல தீபாவளி, அந்தப் பார்வை எல்லாவற்றிலும் நாம் அன்றாடம் காணும் சாதாரண மனிதர்களின் விருப்பு, வெறுப்பு போன்ற குணாதிசயங்களை சுவாரஸ்யமாகச் சொல்கிறார்.
எழுத ஆசைப்படுபவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பு!