
வீட்டின் அழைப்புமணி ஓசை ஒலிக்க, கதவைத் திறந்தான் ரகு.
எதிரில் தலைச் சொறிந்துகொண்டு கார்பரேஷன் தொழிலாளி.
“காவா(வாறுகால்) க்ளீன் பண்ணிட்டேன்.. டீக்காசு கொடுங்க ஸார்..”
அவன் பேசப்பேச சாராய வாடை குப்பென்று அடித்தது.
“வேலை பார்க்கதுக்குத்தான் கவர்மென்ட் சம்பளம் குடுக்குதே.. நீ சாராயம் குடிக்க, என்கிட்ட டீக்காசுனு பொய்சொல்லி கேட்குறியா.. பைசா தரமுடியாது..” என்று கோபமாக சொல்லிக்கொண்டே கதவை சாத்தினான் ரகு.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த மனைவி கேட்டாள்.
“ஏங்க.. போன மாசம் கூட பட்டா..ல பேரு மாத்திறதுக்கு காசு கொடுத்தீங்களே?.. அவருக்கு கவர்மென்ட் சம்பளம் கொடுக்கலயா?”
“இல்ல.. சாராயம் குடிக்கிறதுக்கு?..”
“நம்ம தெரு சாக்கடையை கிண்டி சுத்தம் பண்ணும்போது வர்ற வாடையை தாக்குப்பிடிக்கிறதுக்கு ஏதோ தண்ணி போடுறார்.. நீங்க ஒருநா அந்த வேலையை செஞ்சு பார்த்தா தெரியும்.. மாசம் ஒருதடவை பத்து ரூபா கொடுத்தா ஒரு கும்பிடு போட்டு வாங்கிட்டுப் போறார்.. இதிலே என்ன குறைஞ்சிடப் போறீங்க?”
பெண்ணின் பார்வைக்கும், ஆணின் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து வாயடைத்து நின்றான் ரகு.

One Comment on “அர்ஜுனன்/மாறுபட்ட பார்வை”
Comments are closed.