உஷா சங்கரநாராயணன்/இருமுகன்

“பேரண்ட்ஸ் வரணும்னு சொல்லியிருந்தேனே. ஒருத்தர்தான் வந்திருக்கீங்க? மேடம் வரலையா?” என்றார் சுமதி டீச்சர்.
அபிநவ் சரத்தின் தோளில் கையைப் போட்டு பேச விடாமல் தொங்கிக்கொண்டு இருந்தான். சரத், “இல்ல மிஸ், அவங்க பிஸியா இருக்காங்க. முக்கியமான பொறுப்புல இருக்கறதால லீவு போட்டுட்டு வர முடியல. எனி ப்ராப்ளம்?” என்றான்.
“பையன் இவ்வளவு அடங்காம உங்களை சுற்றி சுற்றி சேட்டை பண்ணிட்டே இருக்கானே! வீட்லயும் நீங்கதான் பார்த்துக்கணுமோ” என்றாள் சுமதி டீச்சர் அவள் வீட்டின் நிலைமை தலை கீழாய் இருப்பதை நினைத்துக்கொண்டே.
“ஆமாம் மிஸ். அவங்களுக்கு டூரிங் ட்யூட்டி நிறைய வரும். அதனால பெரும்பாலும் நாந்தான் பார்த்துக்கணும். எனக்கு அப்பப்ப வொர்க் ஃப்ரம் ஹோம் கிடைக்கும். க்ரெச் அது இதுன்னு விடாம சமாளிச்சுட்டு வரோம்.” என்றான் சரத்.
“ஆனா இப்படி ஒருத்தரே வளர்க்கற பிள்ளைகள் பெரும்பாலும் ரொம்ப அடமெண்டா வளர்வதை நான் பார்க்கறேன். உங்க பையன்னு மட்டும் சொல்லல. பெரும்பாலும் ஒற்றையாக வளரும் பிள்ளைகள், ஒருவர் மட்டுமே கவனம் செலுத்தும் பிள்ளைகள் இப்படி இருக்கறதை நான் என் அனுபவத்துல பார்க்கறேன். அவனுடய அடமெண்ட் நேச்சர் பற்றி பேசத்தான் உங்க ரெண்டு பேர வரச்சொன்னேன். ஆனா நீங்கதான் அவனுக்கு அம்மா, அப்பான்னு இரண்டு முகங்களுமாகவே இருக்கறது இப்பத்தான் தெரியுது” என்றாள்.
“மிஸ், நான் அப்பாவே இல்லாம அம்மாவாலதான் வளர்க்கப்பட்டேன். கொஞ்சம் பிடிவாதம் உண்டு. ஆனா சொன்னா புரிஞ்சுக்குவேன். என் முகத்தில் அவன் அம்மாவையும் சேர்த்துதான் பார்க்கிறான். ஏன்னா ஒரு முகத்தைத்தான் பார்க்க முடியும்னு அவன் புரிஞ்சுட்டிருக்கான்.
அவங்களை பிள்ளையை மட்டும் வளர்த்தா போதும்னு முடக்க எனக்கு மனசில்ல. அதனால நான் எனக்கு அவங்க முகத்தை சேர்த்துக்கிட்டேன். முகம் மட்டுமே எல்லாம் இல்ல. முகம் இல்லாம எதுவும் இல்ல. இதுதான் நிலைமை. என்னால முடிஞ்ச வரைக்கும் இவனுக்கு பிடிவாத குணம் போக நானும் முயற்சி பண்ணறேன். நல்லது உங்களை சந்திச்சது. அடுத்த சந்திப்புல பெட்டரா இருக்கான்னு சொல்லுவீங்க” என்றபடி கைகூப்பி எழுந்தான் சரத்.
அதற்குள் அபிநவ் வெளியே விளையாடி கீழே விழுந்து அழ, தாயினும் சாலப் பரிந்து ஓடினான் அவனைத் தூக்க சரத்.

இந்துமதி நடராஜன்/இருமுகம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “உஷா சங்கரநாராயணன்/இருமுகன்”

Comments are closed.