விஜயலக்ஷ்மி கண்ணன் /இப்படியும் ஒரு முகம்

“அப்பாடா!.நிம்மதி!!”
என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே,உற்சாகமாக , கை கால்களை ஆட்டிக்கொண்டு தன் மனைவி ராணி சண்டைப் போட்டு பிறந்தவீட்டுக்கு பஸ் ஏறினதை கொண்டாடியபடி கதவை திறந்துகொண்டு வீட்டின் உள்ளே நுழைந்து ஹால் மின் விளக்கை போட்டான்.பளிச் என்று தெரிந்தது வீடு.
ஜனகராஜ் போல் “என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா”என்று வீடு அதிர கத்தவேண்டும் போல் தோன்றியது சந்திரனுக்கு.
திருமணமாகி இந்த இரண்டு வருடங்களில் குறைந்தது ஆறு தடவையாவது சந்திரனுடன் சண்டை போட்டுக் கொண்டு திருச்சியில் இருக்கும் பிறந்த வீட்டுக்கு போய் இருப்பாள் ராணி.
ஒவ்வொரு தடவையும் போனால் இரண்டு மூன்று நாட்கள் வரையிலும் வரமாட்டாள்.சந்திரன் அலைபேசியிலோ அல்லது தொலைபேசியிலோ அவளை அழைத்து பேசினதில்லை, கிளம்பி வா என்று அழைத்தது கூட இல்லை.அவளுடைய தாயார் அல்லது தம்பி தான் கொண்டு விட்டு ஒன்றும் தெரியாது போல் போய்விடுவார்கள்.ராணியின் அப்பா இறந்த பின் தான் இவர்கள் திருமணம் நடந்தது.
இந்த தடவை இன்றோடு நான்கு நாட்கள் ஆகிவிட்டன.
ஆனால்
சந்திரன் மனதில் அந்த ஏங்கிய நிம்மதி கிடைக்கவில்லை.
ராணி என்ன கோபம் ஆனாலும் போகும் வரை எல்லாம் சரியாக வைத்து அவனுக்கு சமைத்தும் வைத்து விட்டு தான் போவாள்.அவளுக்கு எல்லாம் வைத்த இடத்தில் இருக்க வேண்டும். சும்மா தேடிக் கொண்டிருக்கப் பிடிக்காது.
இப்பொழுது அவனுக்கு வீட்டை பார்க்கவே பிடிக்கவில்லை. வாஷிங் மிஷினில் போட்ட துணி துவைத்து உள்ளேயே கிடக்கு.நேற்று காயவைத்த துணிகள் கொடியிலேயே ஊஞ்சல் ஆடுகிறது. எடுத்து மடித்து வைக்க கூட தோன்றவில்லை.
ராணி தோய்த்த துணியை விரித்து அழகாய் காயவைப்பாள்.
காய்ந்த துணிகள் அங்கும் இங்கும் சிதறிக் கிடைக்காது.
இஸ்திரி போட்ட மாதிரி மடித்து வைப்பதிலும் ஒரு அழகு உண்டு.
வீட்டை சுத்தமாக வெசுக்கிறது அவளுடைய பிரியாரிட்டி.
வாசலில் கோலம் போட்டால் எல்லார் கண்ணும் பட்டுவிடும்.
எல்லாம் சரி தான்.
தேவை இல்லாத பிடிவாதம் தான் நமக்கு எரிச்சல் மூட்டுகிறது.அவளுடைய இந்த முகத்தை மறைத்து பார்க்கணும் என்று எண்ணிக் கொண்டான்.
சந்திரனுக்கு போர் அடித்துவிட்டது இந்த தடவை.
“ஹலோ! ராணி, நீ இல்லாம வீடு வீடாக இல்லை.எனக்கு போர் அடிக்கிறது.
நீ கிளம்பி ரெடியா இரு. நான் கார் எடுத்துண்டு இன்னிக்கி நைட்டு வரேன் .”
“எனக்கு கூட மனசே சரி இல்லைங்க. நீங்க இல்லாம எனக்கு மட்டும் என்ன சந்தோஷம்? நான் இப்பவே ரெடியா எடுத்து வெச்சுக்கிறேன்.
அம்மாவுக்கு நம்ம விவகாரம் எதுவும் தெரியாது.போட்டு உடைச்சிடாதீங்க””
பேசுவதற்கும் சண்டை போடுவதற்கும் ஒரு ஆள் தேவை தான்.என்னவானாலும் மனைவி போல வருமா?
மனதுக்குள்ளேயே சிரித்துக், கொண்டான் சந்திரன்.

நாபா.மீரா/அன்றில் பறவைகள் – விருட்சம் நாளிதழ்