வே.கல்யாண்குமார்/அருணகிரித் தமிழ்..

முத்துத் தமிழ் சந்தம் பாடிட
முந்தித் திரு வருளைப் பொழிந்திடும்
சிந்துத் தமிழ் தந்தாய் இங்கு அருள்வாயே.!

நித்தம் புதுக் கவிதைகள் பாடியும்..
நீடுத் தமிழ்க் கவியால் பரவியும்..
நின்னைச் சரண் அடைந்தேன் இங்கு வருவாயே.!

சித்தம் தனில் உந்தன் நினைவுகள்..
சிந்துக் கவி சிந்தும் பறவைகள்..
நித்தம் உனைத் தேடித் திரிவதை அறியாயோ..

புத்தம் புது உணர்வுகள் பொங்கிட..
புதுமைக் கவி உலகில் தங்கிட..
பித்தன் எனக்காக ஒருமுறை வருவாயோ!

*எட்டுத் தொகைப் பத்துப் பாட்டென..
இலங்கும் கவி சிலம்பின் ஒலியென..
எதுவும் தரவில்லை.! எனக்கு அருள்வாயோ

கொட்டும் மழைக் கம்பன் பாட்டென..
கூவும் குயில் பாரதி இசையென..
ஒற்றைக்கவி தந்தேனில்லை பொறுப்பாயோ?

பட்டுச் சுடர் பரவும் தாசனின்..
வெட்டும் கூர்ப் பாட்டுத் தீயினை..
தொட்டும் ஒரு பாடல் தந்திட மறந்தேனே..

கட்டுக் கரை மீறிடும் ஆசையில்..
கவிதை என ஏதோ எழுதினேன்
கிட்டே வந்து ஒரு முத்தம் தந்திடு முருகோனே.!

*சுற்றும் புவி நின்றே கேட்கட்டும்..
சூழும் புயல் வீசிட வாழ்த்தட்டும்..
சற்றே மயில் வாகனம் மீதினில் வருவாயே.!

குற்றம் குறை எனக்குள் ஆயிரம்..
கூறும் தமிழ் ஒன்றே பாயிரம்..
குமரா இதைக் கருத்தில் கொண்டு பார்ப்பாயே

வற்றும் நதி மழைவர பாயுமே
வருடும் முகில் மொட்டுகள் விரியுமே..
சற்றேநீ அதுபோல் என்னுள் வருவாயே.!

அற்றே விழும் வாழ்க்கைச் சாலையில்
அருணகிரி அருளால் பாடுவேன்
அழகா! மலைக் குமரா! எனக்கு அருள்வாயே.!

விஞ்ஞானி/இணையிலா இணை – விருட்சம் நாளிதழ்

One Comment on “வே.கல்யாண்குமார்/அருணகிரித் தமிழ்..”

Comments are closed.