ஆர்க்கே/கொக்கென்று நினைத்தாயோ?

என் வேரடி மண்ணை
கெல்லி எறிந்தால்
துவள்பவனா நான்..?

என் ஆணிவேரின் கீழ்
அமில மழை பொழிந்தால்
கருகி விடுபவனா நான்..?

என் கிளைகளை
உங்கள் பராக்கிரமத்தால்
வெட்டி வீழ்த்தினால்
அடையாளம் தொலைப்பவனா நான்..?

என் தளிர்களைப் பொசுக்கி
தீயிட்டு வைத்தால்
வெந்துவிடுபவனோ நான்..?

நான் மனிதர்களுள் சந்நதன்…!
நான் பறவைகளுள் ஃபீனிக்ஸ்..!
நான் வாத்தியங்களில் உறுமி மேளம்..!

நான் ஆளப் பிறந்தவனாக
வேண்டுமானால் இல்லாமல்
இருக்கக் கூடும்..!
ஆனால்
என்னை வீழ்த்தி விட்டதாக
கொக்கரிக்காதீர்கள்..!

நான் ஜெயிக்கப் பிறந்தவன்…!
அதோ..! அந்த வானையே
கண் கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருங்கள்…!

ஒரு நாள் அதே வானில்
என் ஜெயக்கொடி
பட்டொளி வீசி பறக்கும்..!

தங்கேஸ்/நான் – விருட்சம் நாளிதழ்
—-

One Comment on “ஆர்க்கே/கொக்கென்று நினைத்தாயோ?”

Comments are closed.